மத்திய அரசிலும் மகாராஷ்டிர அரசிலும் அங்கம் வகிக்கும் சிவசேனா, பாஜக இடையிலான மோதல் முற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தை தொடங்கி உள்ளது சிவசேனா.
தாதர் பகுதியில் உள்ள சேனா பவனில், கட்சியின் கிழக்கு மும்பை பிரிவு சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதில் சிவசேனா கட்சியின் நிறுவனர் மறைந்த பால் தாக்கரே முன்பு மோடி தலைவணங்கி நிற்பது போன்ற புகைப்படம் உள்ளது.
மேலும் அந்தப் புகைப்படத் துடன், “இப்போது புகழின் உச்சியில் உள்ள உங்கள் (மோடி) தலை, ஒரு காலத்தில் பால் தாக்கரேவின் காலடியில் மண்டியிட்டதை மறந்துவிட்டீர்களா” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இப்போது இந்த போஸ்டர் அகற்றப்பட்டுவிட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக, சிவசேனா இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதனால் இரு கட்சிகளுக்கிடையிலான நீண்டகால உறவு முறிந்து, தனித்தனியாக போட்டியிட்டன. எனினும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வேறு வழியின்றி இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
அப்போதிலிருந்தே அமைச்சரவை இலாகா பங்கீடு, ஜெய்தாபூர் அணு மின் நிலையம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் கசல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி சிவசேனா எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா தொண்டர்கள் மை வீசி தாக்கினர். இந்த விவகாரங்களால் இரு கட்சிகளுக்கிடையிலான மோதல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக