பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
பாகல்பூர் அருகே காஹல்கவானில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சோனியா காந்தி, சமூகத்தை துண்டாடும் சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இடையே ‘மேட்ச் பிக்சிங்’ நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
“பிஹார் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இங்கிருந்துதான் பிஹார் மற்றும் நாட்டின் எதிர்கால முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. துண்டாடும் சக்திகளா அல்லது மக்களிடையே ஒற்றுமையை ஆதரிக்கும் கட்சியா என்பதை முடிவெடுங்கள்.
பிஹார் மக்களை மோடி தவறாக வழிநடத்துகிறார். அவர் அறிவித்த நிதிநிவாரணம் கேலிக்கூத்தானதே தவிர உண்மையானது அல்ல. எந்த நிதிநிவாரணத்தின் உண்மை என்ன? நிதி ஒதுக்கீட்டிலும் மறு நிதி ஒதுக்கீட்டிலும் ‘நிபுணர்’ ஆன பிரதமர் மோடி, முந்தைய அரசின் திட்டங்களை மறு அறிவிப்பு செய்து அதன் மூலம் பலனடைய நினைக்கிறார். பிஹார் மக்களை சிறுமை படுத்த அவர் என்னதான் இதுவரை கூறிவிடவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாக்பூருக்கும், பாஜக-வுக்கும் இடையே மேட்ச் பிக்சிங் நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் சார்பாக நான் வலியுறுத்துவது என்னவெனில் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் சாசன வழிமுறைகளை காங்கிரஸ் பாதுகாக்கும் என்பதே.
கடந்த 15 மாதங்களில் பாஜக ஆட்சி எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களது கொள்கைகள் நாட்டை எதிர்மறையாக பாதித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகவில்லையா? பெண்கள் பாதுகாப்புக்கான நிதியில் பட்ஜெட்டில் குறைப்பு செய்யவில்லையா? விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுகின்றனரா?
பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் இடையே பாரபட்சமாக மோடி அரசு நடந்து கொள்வதை நாம் பார்த்து வருகிறோம். ஏன் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நம் நாட்டவர் இல்லையா?”
இவ்வாறு அந்தப் பொதுக்கூட்டத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் சோனியா காந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக