ஊருக்கு நடுவே அழகான முடி திருத்தும் நிலையம் வைத்திருப்பவர் அப்துல்லாஹ். அழகான மனைவி, இரண்டு ஆண் பிள்ளைகள், சிறந்த வருமானம் என்று வாழ்ந்து வந்தார். தினமும் இரவு வீட்டிற்க்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தின்பண்டங்களும் வாங்கிச் செல்வது வழக்கம்.
இஷா தொழுகை முடிந்த பின் இரு சகோதரர்களின் கண்களும் வீட்டு வாசலையே எதிர் நோக்கி இருக்கும் தந்தையின் வருகைக்காக…! தந்தையை கண்டவுடன் “அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா… உம்மா சேட்டை பண்ணிட்டேனு அடிச்சிட்டாங்க வாப்பா” என்றான் இளைய மகன் அய். “அப்பாடியா தங்கம்… அழாத… வாப்பா உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன். இனி சேட்டை பண்ணக் கூடாது” என்றார் அப்துல்லாஹ்.
“இனிமேல் நான் சேட்டை செய்ய மாட்டேன் வாப்பா” என்றான் அய். “எனக்கு மிட்டாய் இல்லையா வாப்பா…” என்றான் மூத்த மகன் ஹாலிப். “உனக்கும் தான்பா வாங்கி வந்துள்ளேன்” என்றார் அப்துல்லாஹ். இப்படியாக தினமும் அப்துல்லாஹ்வின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் அந்த ஊரில் இரு பிரிவினருக்கு நடுவில் ஏதோ மோதல் ஏற்பட்டு அது நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே சென்றது. பலர் ஊரை காலி செய்ய தொடங்கினர். அப்துல்லாஹ்வின் வருமானமும் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.
மேலும் வறுமை அவர் வீட்டின் வாசலை வந்து தட்டியது. “உம்மா… வாப்பா ஏன் இப்போது எல்லாம் மிட்டாய் வாங்கிட்டு வர்ரதில்ல?” என்றான் அய். “உம்மா… என் கூட விளையாடிய அஹமதை துணில சுத்தி எங்கம்மா கொண்டு போனங்க? ஏனம்மா இப்போம் யாரும் விளையாட வரதில்லை?” என்று தன் பங்குக்கு கேட்டான் மூத்த மகன் ஹாலிப்.
எப்படி பதில் சொல்வது? எப்படி சொன்னால் இவர்களுக்கு புரியும்? சொன்னால் எங்கு அச்சம் கொல்வார்களோ என்று எண்ணி அமைதியாக இருந்து விட்டாள் தாய் ரேய்ஹான். அப்துல்லாஹ்வும், ரேய்ஹானும் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை சாப்பிட்டு குழந்தைகளை பட்டினியின்றி பார்த்து வந்தனர்.
கலவரம் தீவிரம் அடைந்தது. இப்போதெல்லாம் இரவில் ஒரே பேரிடி சப்தம். பயத்தில் விழித்து உறங்காமல் அழுதான் அய். மறுநாள் காலையில், “ஏங்க… அய்க்கு பயத்தால் காய்ச்சல் அடிக்குது” என்றாள் ரேய்ஹான். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் எல்லாம் அழு குரல்களையும், இடிபாடுகளையும், சிதைந்த வீடுகளையும் பார்த்து வியந்தான் ஹாலிப்.
மருத்துவமனையில் மேலும் பரிதாப காட்சி காத்திருந்தது. தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களெல்லாம் பேச்சு மூச்சற்று கிடக்க அவர்களை அவர்கள் பெற்றோர்கள் ஆரத் தழுவி அழுது கொண்டிருக்கும் காட்சி கண்டு தன்னையும் அறியாமல் ஹாலிபின் கண்கள் கலங்கின.
அய்யை மருத்துவர் பரிசோதித்து ஊசி போட்டார். “உம்மா வலிக்குது…” என்றான் அய். இனிமேலும் தாமதிக்கக் கூடாது, தாமதித்தால் நமக்கும் இதே நிலைமைதான், உடனே இந்த ஊரை காலி செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டார் அப்துல்லாஹ்.
வீட்டுக்குச் சென்றதும் “ரேய்ஹான்… நம்ம ஊர் நிலைமை சரியில்லாததுனால நாம எல்லாரும் நாளைக்கி இந்த ஊரை விட்டு விட்டு பக்கத்து ஊருக்கு போவோம். எதுவெல்லாம் அவசியமான பொருள்களோ அதை மட்டும் தயாராக வைத்துக்கொள்” என்றார் அப்துல்லாஹ்.
அப்துல்லாஹ் தன் ஊரை விட்டு போகும் முன் தான் பறிகொடுத்துவிட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மண்ணறையை நோக்கிச் சென்றார். வழியில் தன் நண்பர் ஸாலிஹின் குரல் கேட்டு திரும்பினார். “அப்துல்லாஹ்… உனக்கு விஷயம் தெரியுமா? நமக்கு உதவி செய்ய வேண்டிய நம்ம பணக்கார சொந்தங்கள் நம் நிலைமையை மறந்துவிட்டு மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர். நமக்கு அவர்களிடமிருந்து உதவி வரும் என்று எண்ணினோம். ஆனால் இப்படி ஆயிற்றே…” என்று புலம்பினார். இதை கேட்டதும் அப்துல்லாஹ்வின் கண்கள் கலங்கின. தங்கள் கஷ்டம் நீங்க இறைவனிடம் கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்.
மறுநாள் காலை ஃபஜர் தொழுகையை முடித்துவிட்டு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடு, தான் வாழ்ந்த ஊர் அனைத்தையும் விட்டுவிட்டு கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் அந்தக் குடும்பமே பக்கத்து ஊருக்கு இடம் பெயர்ந்தது. பக்கத்து ஊருக்கு வந்தவுடன் தன் குடும்பத்துடன் ஒரு மிகச் சிறிய வீட்டில் தங்கினார் அப்துல்லாஹ். பக்கத்து ஊரில் தனக்கேற்ற வருமானம் கிடைக்காததால் வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமப்பட்டார் அப்துல்லாஹ்.
குழந்தைகள் இருவரும் “உம்மா பசிக்குதும்மா” என்று அழுவது வழக்கமாயிற்று.
அப்போதுதான் தன் சகோதரி பீமாவின் ஞாபகம் வந்தது அப்துல்லாஹ்வுக்கு. அடித்துப் பிடித்து பீமாவை தொடர்பு கொண்டார். “பீமா… அஸ்ஸலாமு அலைக்கும். நான் அப்துல்லாஹ்” என்று அரம்பித்து தன் கஷ்டம் முழுவதையும் சொல்லிவிட்டு “நாங்க உங்க ஊருக்கு வரலாமா..?” என்று கேட்டார்.
“அப்துல்லாஹ்… நான் எங்க ஊர் காரங்க கிட்ட கேட்டு விட்டு சொல்கிறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள். ஒரு வாரம் சென்றது அப்துல்லாஹ் பீமாவை மறுபடியும் அழைத்தார். “அப்துல்லாஹ்… இந்த ஊர்க் காரங்க உன் குடும்பத்தை அனுமதிக்கவில்லை” என்ற ஏமாற்றமே அவருக்கு மிஞ்சியது.
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அவர் கண்ட காட்சி அவரை மேலும் பாதிப்படையச் செய்தது. தன் குழந்தைகள் உணவிற்க்காக குப்பை தொட்டியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டிருந்ததுதான் அந்தக் காட்சி. “எப்படியாவது நல்ல வேலை தா… என் ரப்பே” என்ற பிரார்த்தனையுடன் சிறந்த வேலை ஒன்றுக்காக அலைந்து கொண்டிருக்க அவர் காதுக்கு வந்தது அந்தச் செய்தி. பக்கத்து தீவில் வேலையிருப்பதாகவும் அங்கே போக வேண்டுமென்றால் கள்ளத் தோணியில்தான் போக முடியும் என்றும், அதற்கு மூன்று லட்சம் வரை செலவு ஆகும் என்றும் அவருக்கு செய்தி கிடைத்தது.
ஒரு வழியாக தன் சேமிப்பு மற்றும் பீமா கொடுத்த பணத்தை வைத்து பயணத்தை தொடங்கினார். அந்தப் படகில் அவருடன் மேலும் பல பயணிகள் இருந்தனர். படகு நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் படகு போய்க் கொண்டிருக்க ஒரு இராட்சத அலை வந்து படகை கவிழ்த்தது. அந்த அலை படகை மட்டுமல்ல, அப்துல்லாஹ்வின் வாழ்க்கையையும் கவிழ்த்தது.
படகு கவிழ்ந்ததில், “உம்மா…” என்று குழந்தைகளும், “இறைவா! இறைவா!” என்று பெரியவர்களும் சப்தமிட்டார்கள். குரல்கள் ஒவ்வொன்றும் குறைந்து கொண்டே சென்றது.
எப்படியோ அரை நீச்சலில் அப்துல்லாஹ் கரை ஒதுங்கினார். கரை ஒதிங்கியதும் தன் குடும்பத்தை அழுது கொண்டே தேடினார். தேடிக் கொண்டிருக்கும் போது அவர் கண்ட அந்தக் காட்சி அவரை அப்படியே உறையச் செய்தது.
சிவப்பு நிறச் சட்டையில் செங்குருதி உறைந்த நிலையில் கடற்கரை மணலில் முகம் புதைந்த நிலையில் கிடக்கும் அய்யையும், தெருவில் விளையாட வேண்டிய வயதில் கடல் சீற்றத்தின் விளையாட்டால் தன் இன்னுயிர் ஈத்த ஹாலிப்பையும், இரு பிள்ளைகளின் தாயாய், இன்பத்திலும் துன்பத்திலும் உடன் பயணித்த மனைவியையும் இறைவன் தன்பால் எடுத்துக்கொண்ட அந்தக் காட்சியைக் கண்டு கண்ணீர் வடிய உறைந்து நின்றார்.
அவரால் அந்தக் காட்சியை ஜீரணிக்க முடியவில்லை. ஒடிச் சென்று அய்யை அள்ளியெடுத்து கடல் அலைகளுக்கு எதிரே ஆழிப் பேரலையாய் அழுதார் அப்துல்லாஹ்.
அவசர ஊர்தி வந்தது. அனைவரையும் ஏற்றிய பின் அப்துல்லாஹ்விடம் இறந்தவர்களின் பெயர் கேட்டார் ஓர் அதிகாரி. மனைவி மற்றும் மூத்த மகன் பெயரை சொல்லிவிட்டு அழுது கொண்டே இரண்டாவது மகன் பெயரையும் சொன்னார்:
“அய்லான் அல் குர்தி”!
உதுமான் தௌஃபீக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக