Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 அக்டோபர், 2015

புத்தகங்களை வாசிப்போம்! – வி.களத்தூர் பாரூக்

புத்தகங்கள் போன்று துன்பத்தில் இருக்கும் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தி முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், சுமைகள் தாங்கி இருக்கும் ஒருவனை அதை மறக்கடித்து செயலாற்றவும் செய்கின்ற ஒரு நல்ல நண்பனை பார்க்க முடியாது.
எந்த குறிக்கோளும் இல்லாதவனாக இருந்தவனைக்கூட பெரிய லட்சியவாதியாக மாற்றி இருக்கிறது. சாதாரண மனிதனைக்கூட புரட்சியாளனாக மாற்றியுள்ளது. கெட்ட எண்ணம் கொண்ட ஒருவனைக்கூட நல்ல மனிதராக மாற்றி இருக்கிறது. அதனால் தான் “நூல் நிலையம் இல்லாத ஊர் ஒரு ஊரா?” என்று கேட்டார் லெனின். தன்னை கொல்ல வந்தவனுக்குக்கூட படிக்க புத்தகங்களை கொடுக்க உத்தரவிட்டார்.
ஒரு சிறந்த புத்தகம் பலபேர்களுடைய வாழ்வில் புரட்சியை ஏற்படுத்திவிடும். வாசிங்டனுடைய வரலாறுதான் ஆப்ரஹாம் லிங்கனுடைய வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தியது.
“நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபட விரும்பினால் இலக்கணம் படித்துதான் ஆக வேண்டும்”. என்று நண்பர் கூற அது மாதிரியான புத்தகம் என்னிடம் இல்லையே என்று சும்மா இருக்கவில்லை லிங்கன். ஆறு மைல்களுக்கு அப்பால் ஒருவரிடம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு நடந்தே சென்று அந்த புத்தகத்தை இரவல் வாங்கி படித்தார்.
இன்று இளைஞர்களிடம் அரிதாக காணப்படும் ஒரு விடயமாக வாசிப்பு பழக்கம் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருப்பதில் தேவை இல்லாத வேலையாகவும், வேலை இல்லாதவர்கள் செய்யும் காரியமாகவும் பார்க்கிறார்கள். சிலருக்கு நேரமின்மையால் படிக்க முடியவில்லை என்கிறார்கள்.
அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாசிப்பது என்பது ஒரு கலை. சுவைமிக்க அமுதம். நாம் பார்க்காத மறு உலகத்தை நமக்கு காட்டும், நாம் பேசாத பல பேருடன் நம்மை பேச வைக்கும், நாம் சிந்திக்காத பல விசயங்களில் நம் சிந்தனையை நகர்த்தி செல்லும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வாசிப்பு பழக்கம் மிக அரிதாகவே உள்ளது. அதுவும் இளைஞர்களிடத்தில் சொல்லவே வேண்டாம். அப்படி இருக்கிறது நிலைமை. இன்று புத்தகங்களை படிப்பதைவிட இணையத்தளத்தில், முகநூலில் படிக்கிறவர்கள்தான் அதிகம். அதுவும் அதில் வரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உண்மையாக கருதக்கூடிய அளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். “புத்தகங்கள் எழுதுவது கடினமானது” என்று சிலர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் புத்தகங்களைகூட எழுதிவிடலாம்போல, ஆனால் அதை படிக்க வைப்பதுதான் மிகவும் கடிமாக இருக்கிறது.
“வரலாற்றை படிக்காதவர்களால், வரலாறு படைக்க முடியாது” என்று கூறுவார்கள். ஆம் உண்மைதான்! நமது வரலாறு என்ன, கலாச்சாரம் என்ன, நம்முன் இருக்கும் பிரச்சனைகள் என்ன, அதை எப்படி தீர்ப்பது? அதற்கான வழிமுறையை என்ன? இவைகளை அறியாமல் நாம் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. அதற்கு அடிப்படை தேவை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான்.
“புத்தகங்கள்தான் எனது முன்னேற்றத்திற்கு காரணம்” என்கிறார் அப்துல் கலாம். புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்து கொண்டால் காலப்போக்கில் எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் புத்தகங்கள் படிப்பதை நம்மால் நிறுத்திக்கொள்ள முடியாது. நெப்போலியன் ஒரு நாளைக்கு நூறு மைல் தூரம் குதிரையில் பயணம் செய்தாலும், படிப்பதை என்றும் நிறுத்தியதில்லை. படித்துக்கொண்டும், குரானுக்கும், பைபிளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்து கொண்டும் இருப்பார். புளூட்டார்க் எழுதிய “வரலாறுகளும்” என்ற நூலை விரும்பி படிப்பார்.
இன்று நாம் ஒரு பகுதியில் இருக்கிறோம். ஆனால் நாம் காணாத ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் செயல்கள், போராட்டங்கள், புரட்சிகள், பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைகள், பல பகுதிகளின் கலாச்சாரங்கள் என அனைத்துமே நாம் புத்தகத்தின் மூலமே அறிய முடியும்.
சமூகத்திற்கு நம்மால் இயன்ற காரியங்களை செய்ய தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது புத்தகங்கள். அதனால்தான் உலகில் உள்ள பெரியார்கள் தனது கடைசி காலம் வரை படித்துக்கொண்டும், மற்றவர்கள் படிக்கும் வகையில் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.
வரலாறுதான் மனிதனை அறிவாளியாக்குகின்றன! அந்த வரலாற்றை அறிவதற்கு நாம் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சிலர் படிக்க வேண்டும் என்ற ஆசையில் எடுத்த உடனேயே பெரிய புத்தகங்களை, புரியாத விஷயங்கள் கொண்ட புத்தகங்களை படித்து விட்டு, “படிச்சி தலைவலியே வந்துடுசிப்பா” என்று சலித்துக்கொள்கிறார்கள். அது புத்தகங்கள் மீதான வெறுப்பாக மாறுகிறது.
புத்தகங்கள் படிப்பது கடினமானது அல்ல. வெகு இலகுவானது. முதலில் சிறிய, சிறிய புத்தகங்களை படிக்க வேண்டும். பிடித்தமான தலைப்பில் உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். படிக்கும் முன் அந்த புத்தகத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த புத்தகத்தின் மூலம் நாம் ஏதோ கற்க போகிறோம் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். இவைகள் எல்லாம் புத்தகங்கள் மீதான ஆர்வத்தை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கும்.
புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை நம் வாழ்வின் ஒரு அங்கமாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான எண்ணத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் திடமான எண்ணத்தை விட அழகான செயல் வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக