Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கண்டுகொள்ளப்படா இந்திய முஸ்லிம்களின் குரல்கள்!

சிறைபட்டுக் கிடந்த சுதந்திரத்தை மீட்டெடுத்த கொண்டாட்டத்தினை ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் நாம் வெகு விமர்சையாக கொண்டாடினோம். சுதந்திர காற்றை இன்றைய சமூகம் சுவாசிக்க முடிகிறதெனில் பலரின் மூச்சுக் காற்றுகள் மூர்ச்சையான வரலாறுகள் ஏனோ திரிபுத் தத்துவங்களாக மாற்றப்பட்டுக் கிடக்கின்றன.
பெரும்பான்மை தத்துவங்கள்,
பழக்கவழக்கங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் என அத்தனையும் திணிப்பின் கரங்களை விரித்தே வைத்திருக்கின்றன. அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய சமூகத்தை விடுதலையின்பால் நகர்த்தியபோதும் ஆதிக்க சக்திகள் அடிமைத்தனத்தை இந்திய எளிமையான மக்களுள் தக்க வைக்க கூர் தீட்டிய முயற்சியோடு அலைந்து கொண்டிருக்கின்றனர். நீதி குறித்து சொல்லவே வேண்டியதில்லை. ஆலமரம், சொம்பு, துண்டு என அது அறியாமைக்கால நடைமுறைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில்தான் கண்டுகொள்ளப்படா முஸ்லிம்களின் குரல்கள் குறித்து பேச வேண்டியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையொன்றில் யாகூப் மேமனுக்கு ஆதரவாக கூடிய கூட்டத்தை விமர்சிக்கும் பாணியில் எழுதப்பட்டிருந்தது ஒரு கட்டுரை. இந்திய முஸ்லிம்களுக்கு முஸ்லிம் என்பதால் பிரச்னைகள் ஏதும் எழுவதில்லை, பிம்பங்களுக்கு பயந்து முஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொண்ட பிரம்மைதான் அவை என போகிற போக்கில் சொல்லியது.
அதற்கு உதாரணமாக சில மைய நீரோட்ட சமூக செயல்பாட்டாளர்களையும் சுட்டிக் காட்டியது. முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவ்வளவு எளிதில் எறும்பு கடித்தாற்போல நகர்ந்து விட முடிகிறதா என்ன?
இந்திய சமூகத்துக்குள் நடந்தேறும் ஏற்றத் தாழ்வுகளையும், பாரபட்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களின் மனப்பான்மையை கேள்விக்குள்ளாக்குவது வளர்ச்சி எனப் பேசி முழுகும் காவிகளின் சிந்தனைகளை விட மோசமானது. சுதந்திரத்திற்குப் பின்பான வரலாறு நெடுக மனிதர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளோ, பண்புகளோ அவர்களை நிர்மூலமாக்குவதற்கு காரணமாக அமைந்ததில்லை. அம்மனிதர்கள் கல்வியறிவும், பொருளாதாரப் பின்புலமும், சட்ட நுணுக்கமும் பெற்றிருப்பினும்கூட அதிகார வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும் அவர்கள் மீது சமூகம் சார்ந்த தாக்குதல்களையே தொடுத்துக் கொண்டிருக்கின்றன. தாக்குதல்களை கட்டவிழ்த்து ஒரு நபரையோ, குடும்பத்தையோ நிர்மூலமாக்க அவர்கள் தலித்துகளாகவோ, சிறுபான்மை மக்களாகவோ இருந்தால் போதுமானது. கள நிலவரம் இப்படி இருக்க முஸ்லிம்கள் கொண்டிருக்கும் பிரம்மை என அவற்றை சாதாரணமாக சொல்லிவிட்டு போவது எவ்வளவு ஆபத்தானது.
இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் முதல், சமீபத்திய கோகுல் ராஜ் படுகொலை வரை சமூகம் சார்ந்த வெறுப்புகளின் இரத்தக் கறை இருக்கவே செய்கிறது. இஹ்ஸான் ஜாஃப்ரி போன்ற பொருளாதாரமும் அதிகாரப் பின்புலமும் கொண்ட ஆளுமைகளையும் அந்த சிந்தனை விட்டு வைக்கவில்லை. நீதிகளின் இலட்சணங்கள் இவ்வாறு இருக்க நீதியின் பாதுகாவலர்களாக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவை தான் யாகூப் மேமனுக்கு கூடிய கூட்டம்.
குஜராத், முஸஃபர் நகர், ஹரியானா, அஸ்ஸாம், பாகல்பூர் என எங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டதோ அதற்கும் சேர்த்துத்தான் நீதி வேண்டி இதே கூட்டம் ஜந்தர் மந்தரிலும், ராம் லீலாவிலும் போராடியதை நினைவில் கொள்ள வேண்டும். பிரச்னை யாகூப் மேமன்களோ, அஃப்ஸல் குருக்களோ அல்ல. பாரபட்சமான நீதிதான்.
“தாமதமான நீதி அநீதி” என நீதிமன்றங்கள் அவ்வப்போது அறிவுரை சொல்லிக்கொண்டிருக்க பாரபட்சமான நீதியை என்னவென்பது?
ஒரு சமூகம் அநீதியால், ஏற்றத் தாழ்வுகளால் குறி வைத்து தாக்கப்படும்போது அதற்கான காரணங்களை மடைமாற்றி தனிப்பட்ட நடவடிக்கைகளால்தான் இது நடந்தது எனத் திருப்தி கொள்ள வேண்டுகோள் விடுப்பது முட்டாள்தனமானது. முதலில் பிரச்னைகளை களைய வேண்டும். பிறகு சமூகம் குறித்த புரிதலை ஏற்படுத்தலாம். பிரச்னையில் மக்களை தவிக்க விட்டு விட்டு புரிதலில் மாற்றம் வேண்டுமென கோருவதை  எப்படி ஆரோக்கியமாக புரிந்து கொள்ள முடியும்?
இந்திய சமூகத்தில் பெரும்பான்மை கலாச்சாரங்களை விரும்பாதவர்கள் மீது வலிய திணிப்பதை சமத்துவப் போர்வைக்குள் அமுக்கப் பார்க்கின்றனர். விரும்பாதவர்களையும், மாற்றுக் கருத்துடையவர்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்திய ஜனநாயகம் என்பதை ஏனோ இத்தகைய அறிவுஜீவிகள் மறந்து போய்விட்டனர். புரையோடிக் கிடக்கும் பெரும்பான்மை இந்து மதக் கலாச்சாரங்களை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனை ஏற்காததாலேயே அவரை சமத்துவத்திற்கெதிரான நபராக சித்தரிக்க முனைவதுதான் ஆதிக்கம்.
பெரும்பான்மை கலாச்சாரங்களை மதிப்பதென்பது வேறு, அதனை திணிப்பதென்பது வேறு. ஒரு விழாவில் குத்துவிளக்கு ஏற்றாததாலேயே அவரை சமத்துவ அறிவில்லாதவர் எனக் கட்டம் கட்டும் போக்கு வருத்தமளிக்கிறது. பொது சமூகத்தில் நெருடலான ஒரு காரியத்தை விருப்பமின்றி செய்ய வைக்க தூண்டுவதும் மறுத்தால் தேசபக்தி பட்டத்தை பறித்து விடுவதும் எப்படி ஜனநாயக வழிமுறையாகும்?
சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென எதார்த்தங்களை தூக்கி எறிந்து போலியான முகமூடி அணிந்து கொள்வதுதான் இப்பொழுது தேசபக்திக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் சேர்த்துத்தான் இந்தியா சுதந்திரத்தை பிரசவித்திருக்கிறது என்பதை அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது.
வெறுப்புப் பேச்சுகள் மைக்குகள் தொடங்கி மைன்ட் செட்டுகள் வரை, அச்சுகளில் தொடங்கி டிஜிட்டல் வரை ஓங்கி ஒய்யாரமாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தேசத்துரோகி, பாகிஸ்தான் கைக்கூலி, ஊடுருவல்காரர்கள், அந்நியன், வேசிமகன், பிள்ளை பெற்றெடுக்கும் தொழிற்சாலை, தீவிரவாதிகள் என எத்தனை எத்தனை பட்டங்களை முஸ்லிம்கள் மீது சுமத்தியாயிற்று.
இன்னும் வேறேதேனும் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஆனால் இங்கு பிம்பம் எப்படி கட்டமைக்கப்படுகிறது?
இரண்டு பக்கங்களிலும் தவறு இருக்கிறது எனப் போகிற போக்கில் பொய்யான பிம்பங்கள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன. வெறுப்புப் பேச்சுகள் பேசினார்கள் என்று உவைசியை தவிர வேறு எவரையும் முஸ்லிம்களில் இதுவரை காட்ட முடியவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்களின் குரல்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது.
இன்றைக்கும் முஸ்லிம்கள் “அனைவருக்குமான சம இந்தியா” எனும் கொள்கை முழக்கங்கள் தாங்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்து சமுதாய மக்களுக்கான நலப் பணி எனப் பல ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமத்துவம் , ஜனநாயகம், சோஷலிசம், சம நீதி என முழங்கும் முஸ்லிம்களை கண்டுகொள்வதை விடுத்து எதிர்வினை ஆற்றும் ஒரேயொரு நபரை முன்னிறுத்தி சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பது எப்படி பொருத்தமாக இருக்கும்?
இரண்டு விதமான குரல்கள் பொது சமூகத்தின் முன் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. ஒன்று  சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், சோஷலிசம் என்று முழங்கி மைய நீரோட்ட அரசியலை முன்னெடுக்கும் குரல்கள். இரண்டாவது அநீதியால் உழன்றவர்களுக்கு ஆதரவான அதிகார வர்க்க முஸ்லிம்களின் குரல்கள்.
சமீபத்திய ஔரங்கசீப் சாலையை மாற்றியமைத்த சர்ச்சையில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அளித்த பேட்டி விநோதமானது. “அப்துல் கலாம் முஸ்லிமாக இருந்தாலும் அவர் ஒரு தேசபக்தர் ” என்கிறார் அவர்.
இந்துத்துவ ஆட்சியாளர்களின் பார்வையில் முஸ்லிமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தேசபக்தியாளர் அப்துல் கலாம் மரணிப்பதற்கு முன்பு சட்ட ஆணையத்திடம் ஒரு குரலை மொழிந்தார். “இந்திய நீதி சமூக, பொருளாதார பக்கசார்பு கொண்டனவாக இருக்கிறது. இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களில் தலித்களும், முஸ்லிம்களுமே அதிகம். நான் பதவி வகித்த போது இந்த விடயம் எனக்கு நெருடலாக இருந்தது” என்றார் அவர்.
தேசபக்தியுள்ள முஸ்லிமாக ஒப்புக்கொள்ளப்பட்ட அப்துல் கலாமின் குரல்களுக்கு இந்திய சமூகத்தில் மரியாதை இருந்ததா? அவரை புதைப்பதற்கு முன்பே அவரது வேண்டுகோளையும் சேர்த்தல்லவா யாகூப் மேமனோடு புதைத்து விட்டோம்.
இந்தியாவின் அதிகார மையத்தில் அங்கம் வகிக்கும் இரண்டாம் குடிமகனார் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் தன் ஒட்டுமொத்த சிந்தனையையும் மக்கள் முன் கொட்டித் தீர்த்தார்.
அவர் பேசுகிறார்…
இஸ்லாமிய சமூகத்தின் முன் பல்வேறு சிக்கல்கள் மிகப் பெரிய அளவில் உருவாகியுள்ளன. இந்தச் சிக்கல்களை தீர்க்க பிரதமர் மோடி விரைவாக செயல்படவேண்டும். ஒரு சாரார் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும்போது நாட்டில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. அனைவருடன் இணைந்து வளர்ச்சி காண்போம் என்ற கொள்கையை அரசு மறந்து விடக்கூடாது.
பல்வேறு சமூக மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு குறுகிய பார்வை என்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்று. முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரதிநிதிகள், சுதந்திரப் போராட்டம் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சியில் முஸ்லிம்களின் பங்கு கணிசமாக இருந்தது. தாங்கள் சிறுபான்மையினர், தங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வை இன்றைய முஸ்லிம்களின் மனதில் இருந்து அகற்ற அரசு முன்வரவேண்டும்.
முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் அடங்கிய சச்சார் குழு அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் ஓராண்டு முடிந்த நிலையிலும் அரசு இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வருத்தப்படக்கூடியதாகும். தற்போதைய காலகட்டத்தில் அகில இந்திய இஸ்லாமியக் குழுக்களின் ஒருங்கிணைப்பு மய்யத்தின் பணி தற்போது மிகவும் தேவையானதாக உள்ளது.
இந்தியா எப்போதும் வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை மற்றும் தலைசிறந்த குடியரசு நாடாக உலக நாடுகளின் பார்வையில் இருந்து வருகிறது. ஆனால், இன்றைய இந்தியா பற்றிய பார்வை உலக நாடுகளிடம் மாறி வருகிறது. இன்று ஜாதீய மதவாத அடையாளமாக இந்தியா மாறி வருகிறது. இது உண்மையும் கூட!
பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மிகவும் அவசியமானதாகும். அதே நேரத்தில் கால மாற்றத்தின் போது அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்து நாமும் நம்முடைய தேவையற்ற பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
இதுதான் ஹமீத் அன்சாரி பேசிய குரலின் சாரம்சம்.
இந்தக் குரலில் ஏதோ முஸ்லிம் பக்கச் சார்பு உள்ளதாக பார்க்கின்றன பாஜக வகையறாக்கள். அவரின் ஒட்டுமொத்த குரலின் நோக்கம் சமமான வளர்ச்சி, சம நீதி மட்டுமே. அவர் முஸ்லிம்களிடத்தில் தேவையான மாற்றங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். சமநீதிக்கான குரலை முன்மொழிந்து ஜனநாயகம் மலர வரலாற்றுச் சிறப்புமிக்க குரலை எழுப்பிய இந்திய அதிகார வர்க்கத்தின் பிரநிதியான முஸ்லிமின் குரல் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டதும், கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டதும் துரதிர்ஷ்டவசமானது.
சமீபத்திய நடைமுறை உதாரண புருஷர்களின் குரல்களே கண்டுகொள்ளப்படாமல் விடப்படும்போது மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் குரல்கள் குறித்தோ, எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கானின் குரல்கள் குறித்தோ பேசி என்ன பிரயோஜனம்? இந்தியாவின் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரல் சம நீதியும், சமத்துவமுமே. அதற்கெல்லாம் ஆதிக்க வர்க்கத்தின் பதில் கண்டுகொள்ளாமைதான்.
சம நீதியிலும், சமத்துவத்திலும் கண்டுகொள்ளாமை தொடர்ந்தால் முஸ்லிம்களின் குரலில் குறைபாடு இல்லை. பார்ப்பவர்களின் கண்களிலும், எழுதுபவர்களின் எழுத்துகளிலும், உதிக்கும் சிந்தனையிலுமே குறைபாடு என உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.
அஹ்மது யஹ்யா அய்யாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக