சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 880 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய நிறுவனங்களில் தேர்வு பெற்ற 2 பேர் அதிகபட்சமாக ஆண்டுக்கு 34 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.
தற்போது அந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 880 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. கேம்பஸ் இன்டர்வியூ பொறுப்பாளர் பேராசிரியர் பாபு விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
880 பேர் தேர்வு
சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ இந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி, நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முடிந்தது. இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் மொத்தம் 1,360 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.
இதில் மொத்தம் 295 நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்தனர். கேம்பஸ் இன்டர்வியூவில் 880 மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 16 சதவீதம் மாணவிகள் ஆகும்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் மொத்தம் 1,400 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர். 263 நிறுவனங்கள் பங்குபெற்ற இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 905 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவில் அதிக மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ரூ.34 லட்சம் சம்பளம்
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டவர்களில், இந்திய நிறுவனங்கள் மூலம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.34 லட்சம் சம்பளத்தை 2 பேர் பெற்றுள்ளனர். அதேபோல், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அதிகபட்சமாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 அமெரிக்கா டாலர் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை 3 பேர் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால் புதிதாக 65 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டன. அந்த நிறுவனங்கள் மொத்தம் 122 வாய்ப்புகளை வழங்கி 114 மாணவ-மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். அதில் ஓ.எல்.ஏ. கேப்ஸ் நிறுவனம் 32 வாய்ப்புகளையும், பிளிப்கார்டு நிறுவனம் 18 வாய்ப்புகளையும் வழங்கின.
இந்திய நிறுவனங்களான ‘ராபர்ட் போஸ்க்’ நிறுவனம் 16 வாய்ப்புகளையும், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் 10 வாய்ப்புகளையும், ‘ஹனிவெல்’ நிறுவனம் 12 வாய்ப்புகளையும் வழங்கின. இதே போல் ஒவ்வொரு நிறுவனங்களும் வாய்ப்புகள் வழங்கின.
இதில் 61 மாணவர்கள் 2 வாய்ப்புகளையும், 9 மாணவர்கள் 3 வாய்ப்புகளையும், 4 மாணவர்கள் 4 வாய்ப்புகளையும், 1 மாணவர் 5 வாய்ப்புகளையும் பெற்றனர்.
அடுத்த சுற்று கேம்பஸ் இன்டர்வியூ
அடுத்த சுற்று கேம்பஸ் இன்டர்வியூ அடுத்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் 18-ந் தேதி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சுற்றில் பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் அதிகம் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்னஞ்சல் மூலமாக
சாகுல் ஹமீது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக