கடந்த பத்து பதினைந்து வருடங்களாக நாட்டில் நடக்கும் சம்பவம் இது. அநீதிக்கும் ஆக்கிரமிப்பிற்கும் உள்ளான சமூகம் என்னென்ன நடவடிக்கைகள், களப்பணிகள் மேற்கொள்ளுமோ அதை முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பார்கள். மிகப் பெரிய மனித ஆற்றல், பொருளாதாரம் இவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அதன் பலனை அவர்கள் அனுபவிக்க ஆரம்பித்திருப்பார்கள். பிற சமூகம் அவர்களை கருணையோடு பார்க்க ஆரம்பிக்கும். ‘ஆமாம். பாவம் இவர்கள்’ என்று அனுதாபம் கொள்ள ஆரம்பிக்கும். அவர்கள் பக்க நியாயங்கள் உலகிற்கு தெரிய ஆரம்பிக்கும்.
அப்போது அது நடக்கும்.
ஆமாம். நாட்டில் குண்டுகள் வெடிக்கும். படுகொலைகள் நிகழும். ஒன்றுமறியா அப்பாவிகள் செத்து மடிவார்கள். மக்கள் அதிர்ச்சி அடைவார்கள். எல்லோரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக கலங்கி நிற்பார்கள். இறந்தவர்களுக்காக பரிதாபப் படக்கூட அவர்களுக்கு நேரம் இருக்காது. அதற்குள்ளால் பழி பாவம் அவர்கள் மீது சுமத்தப்பட்டு அவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பார்கள். பல வகையான வசை சொற்களும், சாபங்களும் அவர்கள் மீதும், அவர்கள் மார்க்கத்தின் மீதும் வீசப்படும். ஒரு ஐந்து அல்லது பத்து வருடம் அவர்கள் பின்னோக்கி போயிருப்பார்கள்.
இந்த நேரத்தில் அவர்கள் தங்களின் எதிரிகளை பற்றிக் கூட கவலைப் பட மாட்டார்கள். அவர்களின் தாக்குதலை நாளும் பொழுதும் அவர்கள் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பால் நேசம் கொண்ட, அனுதாபம் கொண்ட மேற்சொன்ன சமூக நண்பர்களை பற்றித்தான் அதிகம் கவலைப்படுவார்கள். அவர்கள் தங்களை நிந்தித்து விடக் கூடாதே, சந்தேகப்பட்டு விடக் கூடாதே.
இப்போது நடந்த பெஷாவர் படுகொலைகளுக்குப் பிறகும் இதுதான் நடக்கிறது. இன்னும் சில பல காலங்களுக்கு இதுதான் தொடர்ந்து நடக்கும் என்பதால் இதை எதிர்கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும். இது போன்ற நேரங்களில் நடந்து கொள்ளும் பயிற்சி சமுதாயத்திற்கு அளிக்கப்பட வேண்டும்.
ஒரு புறம் அநீதி இழைக்கப்பட்டதினால் ஏற்படும் மன வருத்தம், இன்னொரு புறம் வீண் பழியினால் ஏற்படும் மனக்காயம். இவற்றிக்கு மனம் பழக வேண்டும். எதுவரை இந்தக் கலக்கங்கள் தொடரும்? தெரியவில்லை. ஒரு வேளை அல்லாஹ் சொல்லும் இந்த சொர்க்கத்து வர்ணனைக்கு உரித்தாகும் வரை தொடரலாம்,
“எங்களை விட்டு (எல்லாக்) கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன் நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள் – (அல்குர்ஆன் 35:34)
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. அது அனைத்தையும் கடந்து இஸ்லாம் உள்ளங்களை வென்று கொண்டிருக்கிறது. சகோதர சமுதாய நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. அதற்கான தயாரிப்பில் சகோதரர்கள் இருந்த போது சகோதரர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
நான் உங்களை சந்திக்க வேண்டும்.
அப்படியா?. நாங்களே இன்று உங்களை சந்திப்பதாக இருந்தோம்.
எதற்கு?
ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பதற்கு.
நீங்கள் எதற்கு சந்திக்க விரும்பினீர்கள்?
நான் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
(நண்பருக்கு திகைப்பு. மகிழ்ச்சி.பின் சுதாரித்து,)
அது சம்மந்தமான நிகழ்ச்சிக்குத்தான் உங்களை அழைக்க இருந்தோம். இன்றிரவு சந்திப்போம்.
சந்திப்பு நடந்தது. இஸ்லாத்தை தழுவதற்கான பல காரணங்களை நண்பர் சொன்னார். பின்னர் கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினார். அப்போது நடந்த உரையாடலில் ஒருக் கேள்வி முன் வைக்கப் பட்டது. அது,
“இன்று முஸ்லிம்கள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட சமுதாயம் அது. அனைவரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். இந்த நெருக்கடியில் வந்து சிக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?”
இதற்கு அந்த சகோதரர் பதிலளிக்கவில்லை. விழிகளை விரித்து பார்த்து விட்டு ஒருப் புன்னகை செய்தார்.
பின்னர் நிகழ்ச்சி நடந்தது. அடுத்து பெஷாவர் படுகொலைகளும் நடந்தது. அதன் பிறகு நடந்த சந்திப்பில் அந்த சகோதரரை பற்றி பேச்சு வந்தது.
அவர் நிலை என்ன? தொழுகிறாரா?
ஆம். அவருக்கு இப்போது ஒவ்வொரு தொழுகைக்கும் முன் பின் எத்தனை சுன்னததுகள் தொழ வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டுமாம்.
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக