Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 டிசம்பர், 2014

மது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிராமம்!

மது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிராமம்!
மது, கந்துவட்டி, கல்லாமை என திசைக்கொரு தளைகளில் சிக்குண்டு, இருட்டில் தவித்த மக்களை மீட்டு, தங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றியிருக்கிறது அம்மாப்பட்டினம் பொதுநல இளைஞர் பேரவை.
பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சற்று உள்ளடங்கிய கிராமம் அம்மாப்பட்டினம். ஊர் எல்லைகளில்
வைக்கப்பட்டுள்ள ‘வட்டி தடை செய்யப்பட்ட கிராமம்’ என்ற அறிவிப்புப்பலகையே இக்கிராமத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது. சுமார் 2000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பலருக்குத் தொழில் மளிகை வியாபாரம். மீனவர்கள், விவசாயிகளும் உண்டு.
“எல்லாருமே ஒரு காலத்தில் கடலை நம்பி பொழச்சவங்கதான். எங்கூர்ல இருந்து 12 கி.மீ தான் லங்கா. அந்தக்காலத்துல எங்க மூதாதைங்க, நம்மூர்ல மளிகைச் சாமான்களை வாங்கிட்டு படகுல போயி, லங்கா மலைத்தோட்டங்கள்ல வேலை செஞ்ச மக்கள் கிட்டவித்துவிட்டு வருவாங்க. 83ல நடந்த இனக்கலவரத்துக்குப் பெறவு, இந்த யாவாரம் முடங்கிப்போச்சு. அதுக்குப் பெறவு, தமிழ்நாட்டுல பல இடங்கள்ல மளிகைக்கடையை திறந்துட்டாங்க.
இப்ப 350க்கும் மேற்பட்டவுகளுக்கு அதுதான் தொழில். ஜனப்பிரியா மளிகை, தமிழ்நாடு மளிகை, சோழன் மளிகை, இந்தியன் மளிகை, தீன் மளிகை, நேஷனல் மளிகை… இந்த பேரை எந்த ஊர்ல பாத்தாலும் அது எங்க ஊராளுங்க கடைதான்!” என்கிறார் சையத் இப்ராஹிம். இவர் தான் இளைஞர் பேரவையின் செயலாளர். இளைஞர் பேரவையில் மொத்தம் 150 பேர் உறுப்பினர்கள். இந்தப் பேரவையை தொடங்க நேர்ந்த சூழலை விவரிக்கிறார் தலைவர் சாகுல் ஹமீது.
“எங்க தலைமுறை வரைக்கும் யாரும் பள்ளிக்கூடம் போனதில்லங்க, பையங்களை அஞ்சு வயசுலயே மளிகைக்கடைக்கி விரட்டிருவாங்க. மீன்தொழில் செய்றவங்க கடலுக்கு அனுப்பிருவாங்க. பாவம் பொண்ணுங்க. வெளியுலகமே தெரியாம முடங்கிக் கிடந்தாங்க. ஊருல இருந்த தொடக்கப்பள்ளி ஆள்வரத்து இல்லாம காத்தாடும். ஊருக்குள்ள நல்ல ஆஸ்பத்திரி இல்ல. பிரசவம் பாக்கμம்னாக்கூட, ஒரு வீட்டுல கதவைப் பேத்தெடுத்து அதுல புள்ளத்தாச்சியை படுக்க வச்சு தூக்கிட்டு மணமேல்
குடிக்கி ஓடுவாங்க.

இது இல்லாம, தண்ணியப் போட்டுட்டு, வந்து சண்டை சச்சரவுன்னு ஊரே கதிகலங்கிப்போவும்.இன்னொரு பக்கம் சூதாட்டம். ஓழைக்கிற காசு இப்பிடியே போனதால, கந்துவட்டி, மீட்டர் வட்டின்னு கிடைக்கிற இடத்துல கடனை வாங்குறது.. நாங்கள்லாம் கொஞ்சம் வெளியில் வந்து ஊரு உலகத்தை அறிஞ்ச பிறகுதான், எங்க ஊரோட
நிலைமை உறைச்சுச்சு, ஊரை மாத்தμம்னு நாலைஞ்சு பேரு ஒண்μ சேந்தோம். பொதுநல இளைஞர் பேரவையை தொடங்குனோம்.

முதல்ல, வெளியூர்ல கடை வச்சிருக்கிற எங்கூரு ஆளுங்க எல்லார்கிட்டயும் நிதி திரட்டி ஆபத்துக்காலத்துக்கு உதவ ஒரு ஆம்புலன்ஸ் வாங்குனோம். அடுத்து, படிப்பு
குறிப்பா பெண்பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போகμம். ஜமாத்துல போய் கோரிக்கை வச்சோம். அவங்க எங்க கோரிக்கையை ஏத்துக்கிட்டு எல்லா பிள்ளைகளையும் கட்டாயம் ஸ்கூலுக்கு அனுப்பணும்னு அறிவிச்சாங்க. அதுக்கப்புறம் எல்லாம் படிப்படியா மாறிருச்சு…”ஆள் நடமாட்டமே இல்லாதிருந்த தொடக்கப்பள்ளி இப்போது பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக வளர்ந்துவிட்டது.

500க்கும் அதிக மாணவிகள். இப்பள்ளியில் முகிழ்ந்த மாணவிகள் பலர் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, சாஃப்ட்வேர் நிபுணர்களாகப் பணியாற்றுகிறார்கள். தொடக்கம் முதல் இப்போது வரை இப்பள்ளியின் தேர்ச்சி 100 சதவிகிதம்!“தண்ணி அடிச்சிட்டு வந்து ஊருக்குள்ள ரகளை பண்றவங்ககிட்ட பணிவா பேசிப்பாத்தோம். பலனில்லை. ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு கண்டிச்சோம். அதையும் கேக்கலை. அதுக்குப்பிறகு அவங்க வழியையே கையில எடுத்தோம். அடிச்சுத் தொரத்துனோம்.
இப்போ பெரும்பாலும் எங்க ஊரைச் சேர்ந்த யாரும் மது சாப்பிடுறதில்ல. அப்படியே ஒருசிலர் சாப்பிடணும்னாகூட வெளியூர் போயிடுவாங்க. ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடை இருந்தாலும் எஙக ஊர்ல இன்னைவரைக்கும் மதுக்கடைக்கு இடமில்லே” என்கிறார் பேரவையின் பொருளாளர் முகமது இஸ்மாயில்.

காவல்துறை உதவியோடு வீதிக்கு வீதி நடந்த சூதாட்டத்தை அடியோடு ஒழித்த இளைஞர்கள். வட்டிக்கு எதிராக நடத்திய யுத்தம்தான் இக்கிராமத்தை வியப்புக்குறி ஆக்கியுள்ளது.
“விடியற்காலையில் காக்கா குருவிக்கு முன்னால 30க்கும் அதிக கந்துவட்டிக்காரங்க ஊருக்குள்ள வந்துருவாங்க. எல்லாரும் கரூர்காரங்க. மணமேல்குடியில தங்கி தொழில் செஞ்சாங்க. 1000 ரூபா கடன் கேட்டா, 300 ரூபா வட்டி, 15 ரூபா சீட்டுக்காசு கழிச்கிக்கிட்டு 685 ரூபா கொடுப்பாங்க. 100 நாள்ல நாளுக்கு 10 ரூபா வீதம் 1000 ரூபா கட்டணும். ரெண்டுநாள் சேந்தாப்புல கட்டாம விட்டா, கெட்ட வார்த்தையில திட்டுவாங்க. பத்துநாள் கட்டலைன்னா சைக்கிளோ, வண்டியோ எது கெடந்தாலும் தூக்கிட்டுப் போயிடுவாங்க.

நிறையப்பேர் அவங்ககிட்ட சிக்கி விடுபட முடியாம தவிச்சாங்க. சிலபேர் தற்கொலைக்குக்கூட முயற்சி செஞ்சாங்க. பல குடும்பங்கள் நிலைகுலைஞ்சு போச்சு. ஒருநாள், எல்லா கந்துவட்டிக்காரங்களையும் கூப்பிட்டு, மொத்தமா எங்க கிராமத்துல இருந்து எவ்வளவு பணம் வரணும்னு ஒரு லிஸ்ட் கேட்டு வாங்குனோம்.
4 லட்சம் ரூபா. உடனடியா பேரவையைக் கூட்டி பேசி, ‘வட்டியில்லாத பொருளாதார மேம்பாட்டு மையம்’னு ஒண்ணுஆரம்பிச்சோம். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு,

வெளியூர்ல இருக்கிற ஊர்க்காரங்ககிட்டயும் நிதி திரட்டுனோம். மொத்தம் 8 லட்ச ரூபா சேந்துச்சு.கந்துவட்டிக்காரங்களை அழைச்சு, அவங்களுக்குச் சேர வேண்டிய தொகையைக் குடுத்து, ‘இனிமே கந்துவட்டிக்காரங்கிட்ட யாரும் கடன் வாங்கக்கூடாது. கடம் தேவைப்பட்டா எங்ககிட்ட வாங்கிக்கலாம். ஒத்தப் பைசாகூட வட்டியில்லை. கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கலாம்’னு அறிவிச்சோம்.
இப்போ 300 பேர் கடன் வாங்கியிருக்காங்க. எந்த பிரச்னையும் இல்லாம போய்க்கிட்டிருக்கு” என்கிறார் சாகுல் ஹமீது.இந்த அமைப்பில் கடன் பெற, மத, இன அடையாளங்கள் அவசியமில்லை. ஹாஜா முகைதீன், முகமது அலியாரோடு, மெக்கானிக் முருகன், சலவைக்கடை பன்னீர், சலூன்கடை கேசவன், மாட்டு வண்டி ராஜேந்திரன் என பலரும் வாடிக்கையாளரே.
“எங்க கிராமத்தில் எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உறவுக்காரங்களா வாழுறாங்க. இந்து, முஸ்லிம்னு நாங்க பிரிச்சுப்பாத்து உதவுறதில்ல. எங்க பேரவையில் ஒவ்வொருத்தரும் 10 தடவைக்கு மேல ரத்ததானம் செஞ்சவங்க. யாரோட ரத்தம், யாருக்குள்ள போகுதுன்னு யாருக்கும் தெரியாது. யாரு கஷ்டப்பட்டாலும் எங்களுக்கு வலிக்கும். எங்க கரம் நீளும்.
எங்க ஊர்ல ஏழைகளே இருக்கக்கூடாது. இதுதான் லட்சியம். இந்த அமைப்பை ஒரு வங்கியா உருமாத்தணும். அதுக்காகத்தான் இப்போ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம்”. என்று புன்னகையோடு சொல்கிற முகமது இஸ்மாயிலைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.
- நன்றி… குங்குமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக