Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 டிசம்பர், 2014

இந்தியாவில் இன்னும் மறையாத தீண்டாமை எனும் கருப்புக் கறை! - அதிர்ச்சியளிக்கும் ஆய்வுத் தகவல்!

நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன நிலையிலும் தீண்டாமை எனும் கருப்புக் கறை இன்னும் புரையோடிக் காணப்படுவதை சமீபத்தில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்று போட்டுடைக்கிறது.

இந்திய அளவில் சராசரியாக 27-30 சதவீதம் பேர் இன்னும் தீண்டாமையை கடைபிடிப்பதாகவும், நகரங்களில் 20 சதவீதம் பேரும், கிராமங்களில் 30 சதவீதம் பேரும் தாங்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் (NCAER) மற்றும் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய சர்வேயில் இந்த சோகமான அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் இந்திய மக்களில் நான்கில் ஒருவர் இன்னும் தீண்டாமை எனும் மனிதகுலத்திற்கு எதிரான மோசமான நடைமுறையை கடைப்பிடிப்பதாக தெரிய வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அமைக்கப்பட்ட அரசுகளின் விழிப்புணர்வு பிரசாரம், தீண்டாமை தண்டனைச் சட்டம், பெரியார் போன்ற சமூக நீதி தலைவர்களின் தொடர் பிரச்சாரம் ஆகியவற்றால் தீண்டாமை எனும் சமூகம் தீமை புதிய தலைமுறையிடமிருந்து தடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தீண்டாமையை கடைப்பிடிக்கிறீர்களா? என்பது குறித்து பொது மக்களிடம் நேரடியாகவே சர்வே, மேற்க்கண்ட தன்னார்வ அமைப்புகளால் எடுக்கப்பட்டது. இந்த சர்வேயானது பொருளாதார அளவில் வேறுபாடுகள் கொண்ட பல்வேறு தரப்பினரிடம், ‘உங்கள் வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? உங்கள் வீட்டு சமையலறைக்குள் தாழ்த்தப்பட்ட இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா?’ என்ற இரண்டு கேள்விகளை முன்வைத்து நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் பல்வேறு கிராம, நகர்ப்புறங்களில் சுமார் 42 ஆயிரம் குடும்பங்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் நகரங்களில் 20 சதவீதம் பேரும், கிராமங்களில் 30 சதவீதம் பேரும் தாங்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் சாதி அடைப்படையில் 27 சதவீதம் பேரும், மத அடிப்படையில் 17 சதவீதம் பேரும் தீண்டாமையை கடைபிடிப்பதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் சராசரியாக 27-30 சதவீதம் பேர் அதாவது நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்கும் உண்மையை சர்வே முடிவு போட்டுடைத்துள்ளது.
சாதி அடிப்படையில் தீண்டாமையை கடைப்பிடிப்பவர்களில் பிராமணர்களே முதலிடத்தில் உள்ளனர். சுமார் 52 சதவீத பிராமணர்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாகவும், 33 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், 24 சதவீத முன்னேறிய வகுப்பினரும் தீண்டாமையை கடைபிடிப்பதாக சர்வேயில் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களும் தீண்டாமை எனும் சமூக தீமையை கடைபிடித்து வருவது சர்வேயின் புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளன.
இந்த சர்வேயில் மதங்களின் அடிப்படையில் தீண்டாமையை இந்துக்கள் 35 சதவீதம் பேரும், ஜைனம் 30 சதவீதம் பேரும், சீக்கியர்கள் 23 சதவீதம் பேரும் கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 18 சதவீத முஸ்லீம்கள் தாங்கள் வாழும் இடங்களில் உள்ள புழக்கங்களின் அடிப்படையில் தீண்டாமையை கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சர்வேயின் முழு அறிக்கையும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் நிலையில், சர்வேயின் புள்ளி விபரங்கள் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சர்வேயின் புள்ளிவிபரங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் தீண்டாமையை கடைப்பிடிப்பதில் ஹிந்தி மொழி பேசும் வட மாநிலங்களே முன்னிலை வகிக்கின்றன.
பாஜக ஆளும் மத்திய பிரதேஷில் 53 சதவீதம் பேர் அதாவது இருவரில் ஒருவர் தீண்டாமையை நடைமுறையில் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கரில் 48 சதவீதம் பேரும், இராஜஸ்தானில் 47 சதவீதம் பேரும் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். தலித் வகுப்பை சேர்ந்த முதல்வர் ஆளும் பீகாரில் 47 சதவீதம் பேர் தீண்டாமை எனும் சமூக தீமையை கடைப்பிடிக்கின்றனர். சமீபத்தில் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தான் முதல்வராக இருந்தாலும் மகா தலித் பிரிவை சேர்ந்தவன் என்பதால் தான் தீண்டாமையால் அவமதிப்பு செய்யப்பட்ட நிகழ்வு குறித்து பேசிய பேச்சு இந்திய அளவில் தீண்டாமை எனும் கொடிய நோய் மறையவில்லை என்பதை தெளிவுப்படுத்திய நிலையில் இந்த புள்ளிவிபரம் வெளிவந்துள்ளது. உத்தர பிரதேஷில் 43 பேரும் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது.
மாநிலங்களின் அடிப்படையில் நாட்டிலேயே மேற்குவங்கத்தில் தான் தீண்டாமை மிகக்குறைவாக உள்ளதாக சர்வே முடிவு தெரிவிக்கிறது. அங்கு 1 சதவீதம் பேரே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்து அண்டை மாநிலமான கேரளாவில் 2 சதவீதம் பேரும், மகாராஷ்டிராவில் 4 சதவீதம் பேரும், ஆந்திராவில் 10 சதவீதம் பேரும், வடகிழக்கு மாநிலங்களில் 7 சதவீதம் பேரும் தீண்டாமையை பாவிப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளிவிபரத்தில் தமிழகத்தின் தகவல் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் தமிழகத்திலும் பல இடங்களில் இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட சமூக தீமைகள் குறித்த செய்திகள் வெளிவருவதால் இங்கும் தீண்டாமையை கடைப்பிடிக்கும் மக்கள் குறித்த எண்ணிக்கை விபரங்கள் அதிக அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இந்த சர்வே முடிவுகளின்படி கல்வி பெற்ற மக்களிடையே சாதியின் தாக்கம் இன்றி தீண்டாமை குறைந்து போயுள்ளதையும், பணம் படைத்தவர்களிடமும், பிராமணர்களிடமும் தான் அதிக அளவில் தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் (NCAER) சுட்டிக் காட்ட தவறவில்லை. மேலும் 5.34 சதவீதம் பேரே வெவ்வேறு சாதியினரை திருமணம் செய்துகொள்வதாகவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் நம் தேசத்துக்கு இந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தலைக்குணிவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வல்லரசு நோக்கிய பயணம் என்று மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மோடி இந்த தலைக்குணிவை சவாலாக ஏற்றுக்கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பாரா? அல்லது ஆட்சியை பின்புறத்திலிருந்து வழிநடத்தும் மனுதர்ம அதிகார வர்க்கங்களின் வழிகாட்டலின்படி நடவடிக்கை எடுப்பாரா?
எதுவாக இருந்தாலும் தீண்டாமை எனும் சமூக தீமையை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தவிர்த்து தனி மனிதன் ஒருவன் தானாக முன்வந்து தடுக்காத வரை தீண்டாமை எனம் கருப்புக் கறையை சமூகத்திலிருந்து நீக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக