சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.
அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.
எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.
யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.
வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக