மத்திய கிழக்கு நாடுகளில் வழமையாக நடக்கும் கசமுசா சண்டை என்றுதான் இந்த உலகம் முதலில் சிரிய யுத்தத்தை நினைத்தது, 2010 அரபுலக மக்கள் புரட்சிக்கு பின்னர் வளைகுடாவில் அடிக்கடி ஏற்படும் அரசியல் சண்டைகளில் ஒன்றாக எல்லோரும் சிரியாவையும் பரிதாமமாக பார்த்துவிட்டு அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கிப்போனது ஒட்டுமொத்த உலகமும்.
ஆனால் எல்லாம் சில காலம்தான் திட்டுத்திட்டாக அமிலம் ஊற்றி கொல்லப்பட்டு அடுக்கிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிஞ்சுக்குழந்தைகளின் புகைப்படங்களை கண்டு ஒட்டுமொத்த மனித சமூகமும் வெட்கித்தலைகுனிந்து போனது, இந்த நூற்றாண்டு இதுவரை கண்டிராத படுகொலைகள் அவை.
யார் செய்தார்கள்? அமெரிக்கா? ஆஸாத்? தீவிரவாதிகள் ?? நீ , நான் ?? ஒரு பதிலுமில்லை ஒட்டுமொத்த உலகமும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டது , அன்றைய நள்ளிரவில் விமானங்கள் வந்து கொட்டிவிட்டுப்போன அத்தனை வகையான அமிலங்களுக்கும் அதில் இறந்து போன பால்வடியும் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ஆதாரமாக இன்றுவரை இருக்கும் ஒரே சாட்சி மரணத்தை பதிவு செய்த அந்த புகைப்படங்கள் மட்டுமே..
மறதி ஒரு தேசிய வியாதி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே உண்மைதான் உலகம் மீண்டும் சிரியாவை மறந்து போனது..
சிறிது காலம் கடந்து வெடித்துச்சிதறும் கட்டிடங்கள் , ஓவியங்களைப்போல மேலெழும்பும் வேடிகுண்டுப்புகைகள், இடித்து தூளாக்கப்பட்ட பாரம்பர்யமிக்க மசூதிகள், கைப்பற்றப்பட்ட நகரங்கள் , நீண்ட ராணுவ அணிவகுப்புகள் என்று பயங்கரமும் , திடுக்கமும் கலந்த புகைப்படங்களும் வெளிவந்து எல்லாவற்றையும் ஞாபகமூட்டிச்சென்றது.
கழுத்து அருபட்டு துடிதுடித்துச் சாகும் துறவி அவருக்கு அருகாமையில் கத்தியுடன் நிற்கும் ஒரு கருப்பு உருவம் , உயிருடன் எரியூட்டப்பட்ட ஊடகவியலாளர், வரிசையாய் அமர்த்தி வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவத்தினர் என்று மீண்டும் புகைப்படங்களாக வெளிப்பட்டது பல கொடூரங்கள் , ஒவ்வொரு காட்சிகளும் வெளியிடப்படும் தருணங்களையும் , அதன் பின்னால் உள்ள அரசியலையும் மறந்துவிடுங்கள் , அந்த புகைப்படங்கள் எல்லோருடைய நெஞ்சத்தையும் அசைத்துப்பார்த்தது என்பது எத்தனை உண்மையானது.
போர் ஏற்படுத்தும் கொடூரங்களிலேயே மிகவும் வேதனையானது குழந்தைகளுக்கு ஏற்ப்படும் மனச்சிக்கல்தான், அதன் வலிகளும், ஆபத்துகளும் பாரதூரமானவை , ஒட்டுமொத்தமாக ஒரு தேசத்தின் அடுத்த தலைமுறையை இல்லாமல் செய்ய யுத்தங்கள் வழியாக பிஞ்சுக் குழந்தைகளுக்கு கடத்தப்படும் உளவியல் ரீதியான வேதனைகளையும் இந்த உலகம் சிரிய யுத்தத்தின் வழியாக கண்டது.
யுத்த காட்சிகளை புகைப்படம் எடுக்கச்சென்ற ஒரு செய்தியாளர் ஒருவர் ஒரு பிஞ்சு சிறுமியின் முன்பாக புகைப்படம் எடுப்பதற்காக கேமராவை நீட்டும்போது , தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதாக இரண்டு கைகளையும் தூக்கியபடி போரின் ஒட்டுமொத்த வழிகளையும் உதடுகளின் சுழிப்பில் தேக்கி வைத்தபடி நின்ற அந்த சிறுமியின் புகைப்படம் எத்தனை பேரின் உறக்கத்தை கேடுத்திருக்கும். ஆனால் அதெல்லாம் மனசாட்சியும் , இரக்கமும் உடைய சாதாரண மனிதர்களுக்கானதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை.
சொந்த நாட்டிலிருந்து அதிகார வெறிமிக்க அரசாங்கத்திற்கும் , பைத்தியம் பிடித்த தீவிரவாதிகளுக்கும், உலகை கட்டுப்படுத்த நினைக்கும் பெரியண்ணன்களுக்கும் பயந்து உயிரை கையில் படித்துக்கொண்டு பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம் மிக்க அகதிகளின் துயரம் பொது சமூகத்தை வந்தடையவே இல்லை எல்லாம் அந்த உடல் கரை ஒதுங்கும் வரைதான். அந்த ஒரு புகைப்படம் வெளியிடப்படும் வரைதான்.
“அய்லான் குர்தி”
சிவப்பு நிற மேலாடை , ஊதா நிற காற்ச்சட்டை , காலில் செருப்பு ஒரு அழகிய மலர் கவிழ்ந்து கிடப்பது போல கரை ஒதுங்கிய அந்த பிஞ்சுக் குழந்தையின் மரணம் ஒட்டுமொத்த உலகத்தையும் நித்திரையற்றுப்போட்டது.
அது ஒரு உணர்வு! யாரும் சொல்லித்தரவில்லை !! எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன , உலகம் இப்படி ஒன்றும் துடிக்கவில்லை , ஊடகங்களுக்கும் அறம் வந்து பொங்கவில்லை , அது தன்னெழுச்சியாக நடந்தது . அய்லான் இறந்த பின் கிடைத்த அந்த புகைப்படத்தில் அந்த உணர்வு இருந்தது. அது எல்லோரையும் ஒரு இயலாமையை, அழுகையை நோக்கி தள்ளியது .. ஒரு புகைப்படத்தின் வலிமை அதுதான்.
போர் ஏற்ப்படுத்தும் பாதிப்புகளை பல்வேறு காலகட்டங்களில் வெளியான புகைப்படங்கள் அப்படியே படம்பிடித்துக்காட்டி மக்களின் மனங்களை அதிர்வுகளின் உச்சிக்கே இட்டுச்சென்றிருக்கின்றன.
வியட்னாம் யுத்தம், உலகப்போர்கள் , குவாண்டனாமோ யுத்த வதை கூடங்கள் , ஈழ யுத்தம் என்று யுத்தங்களின் கொடுமைகளை உலகறியச்செய்ய பெரும் பங்காற்றியிருப்பதில் புகைப்படங்களின் பங்களிப்பு மிக அதிகம் ஆனால் அப்பொழுதெல்லாம் ஊடகங்கள் மட்டுமே இருந்தன , அதன் வலிகள் மக்களை வந்தடையவில்லை, ஆனால் இப்பொழுது உலகம் கைப்பெசிகளுக்குள் சுருங்கி விட்டது , சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன எல்லாவற்றிநூடாகவும் அகதிகளின் அவலம் அயலானின் மரணத்தினூடாக பேரதிர்வை உண்டாக்கியது.
இப்பொழுது பிரான்ஸ் குண்டுவெடிப்பும் அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற குரல் பெரிதாக விவாதிக்கப்பட துவங்கியுள்ள நிலையில் மீண்டும் அகதிகளின் வலியைப்பெசும் மற்றுமொரு புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் , ஊடகங்களிலும் வேதனையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கையில் ஒரு ரோட்டித்துண்டுடன் தன் மகனுக்கு முன்னாள் இயலாமையில் அழுது கொண்டிருக்கும் ஒரு தந்தையையும் அந்த அழுகையின் அர்த்தம் கூட புரியாமல் தன் தந்தைக்கு ஆறுதல் சொல்லும் பச்சிளம் பாலகனுடைய சோகம் அப்பிய முகமும் யாரைத்தான் பரிதாபத்தின் உச்சிக்கு அழைத்து செல்லாமலிருக்கும்!.
இது கடைசிப் புகைப்படமில்லை , இந்த துயரங்களும் முடிந்துவிடப்போவதில்லை , இந்த புகைப்படங்கள் எதையும் மாற்றிவிடப்போவதுமில்லை!. அது எல்லாவற்றையும் மௌனமாக பதிவு செய்து கொண்டிருக்கிறது! யுத்தங்கள் நிரம்பி வழியும் இந்த உலகையும் , அதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மனித சமூகத்தையும் சேர்த்தே பதிவு செய்துகொண்டிருக்கிறது.
- ஏ.எஸ்.சஹீத்
Contact :saheed.civil@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக