இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் நிலவுவதாகக் கூறப்படும் சகிப்பின்மைச் சூழலைக் கண்டித்து எழுத்தாளர்கள்,கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தமக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பத்தரும் போராட்டத்தில் திரையுலகக் கலைஞர்களும் குதித்துள்ளனர்.
இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 24 பிரமுகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
சகிப்பின்மைக்கு எதிராக பேசிய பிரபல நடிகர் ஷாருக்கானும் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என மிரட்டப்பட்டார், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் மற்றுமொரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர் கான் நாட்டில் நடைபெறும் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதாக பலர் நினைக்கின்றனர். இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்து எனது மனைவி யோசிக்கிறார். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார். இந்த விவகாரத்தில் என்னை மதத்துடன் தொடர்பு படுத்த வேண்டாம். இந்த உணர்வை ஒரு இந்தியனாக பிரதிபலிக்கிறேன் என கூறினார்.
மேலும் மற்றுமொரு பிரபல நடிகையும் எழுத்தாளருமான நந்திதா தாஸ் இவ்விசயத்தில் தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்திருக்கிறார். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பேச்சுரிமை அவசியமானது. அடிப்படைத் தேவையும்கூட. ஆனால், அண்மைக்காலமாக சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. அதன் வெளிப்பாடான கலாச்சார காவல் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது’ என செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடிகையும், தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நடைபெறும் கலாச்சார காவல் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர். இது போன்ற கலாச்சார காவல் நடவடிக்கைகள், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு, மிகவும் ஆபத்தானது.
நான் நடுவராகச் செல்லும் திரைப்பட விழாக்களில், வெவ்வேறு விதமான பார்வைகள் இருக்கும். ஆனால் அந்தப்பார்வைகள் மூலமாகத்தான், அடுத்தவரின் கருத்தையும் மதிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். சரியோ, தவறோ ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமானது.
தென் கிழக்காசியப் பிராந்தியங்களில், மிக முக்கியமான ஜனநாயக நாடு நம்முடையது. ஜனநாயகத்தின் பெரிய தூணாக விளங்கும் இந்தியாவைப் பார்த்து மற்ற நாடுகள் வியக்கின்றன. ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நாம் பெருமை கொள்ளும் அதே நேரம், கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
சமுதாயம் வளர வேண்டுமானால், கருத்து சுதந்திரம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. நீங்களும், நானும் கருத்துகளில் ஒட்டுமொத்தமாக வேறுபடலாம். ஆனால் அவற்றைச் சொல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டால், எப்படிப் புதிய குரலோ, உரையாடலோ உருவாகும்? எப்படி நானோ, சமுதாயமோ, நாடோ வளர முடியும்?” என்றார் நந்திதா தாஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக