இப்பிரபஞ்சத்தின் படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பாக இங்கு மனித சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கான அருட்கொடைகளும், வளங்களும் உலகம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. அல்லாஹ் இந்த உம்மத்திற்கும் அதன் அங்கத்தவர்களாக இருக்கும் முஸ்லிம்களுக்கும்
அவனுடைய நிஃமத்துகளின் கதவை தாராளமாக திறந்து வைத்துள்ளான்.
21-ம் நூற்றாண்டின் மனிதர்களுக்கு இன்றும் திருக்குர்ஆன் அதனுடைய அழகியல் மாறாமல் இன்றும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்களாகிய நம்முடைய வெளிப்புற மற்றும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும், வாழ்க்கை நடைமுறைகளை செம்மையாக்குவதற்கும் புனித குர்ஆன் ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு நிமிடமும் கால மாற்றத்துடன் சேர்ந்தே பயனிக்கிறது.
இவ்வாறாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் அல்-குர்ஆன் அவர்களுடைய தினசரி வாழ்க்கைகளுக்கு வழிகாட்டியது. இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் அது நல்வழி காட்டுகிறது. நாளைய சமூகத்திற்கும் அது படிப்பினைகளை கொடுக்கும்.
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக – அன்ஆம்:90
அனைத்து மக்களுக்கான தீர்வுகள் குறித்து பேசும் இந்த வேதம், அல்லாஹ்விற்கு இனை வைப்பது குறித்தும் பல்வேறு வடிவங்களில் விளக்கியிருக்கிறது, சிறிய பெரிய இனைவைப்பு, முன்னோர்களை வணங்குதல், நஃப்ஸை வணங்குதல், தங்களது ஆட்சியாளர்களை வணங்குதல், சிலைகள் மற்றும்
நபிமார்களை வணங்குதல் என்ற எல்லா வகையான இனைவைத்தலையும் குறித்து பேசும் குர்ஆன் கூடவே மற்றொரு வகையான இனைவைத்தல் குறித்தும் பேசுகிறது.
பொருளாதார நிலைகளும், பணப்பெருக்கமும், அறிவுப்பெருக்கமும் தழைத்தோங்கிவிட்ட இந்த கால கட்டத்தில் மனிதன் தன்னுடைய திறமையையும், அறிவையும், தன்னிடமிருக்கும் செல்வத்தையும் இறைவனாக எடுத்துக்கொள்கிறான். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருட்கொடைகளை தன்னுடைய சுய முயற்ச்சியாலும், கடும் உழைப்பாலும் கிடைத்ததாக என்னிக்கொண்டு ஆனவம், கர்வம் மிகைத்து தன்னைத்தானே இறை நிலைக்கு உயர்த்திக்கொல்கிறான். இது அம்மனிதனுக்கு அவனை அறியாமலேயே நடந்தேறுகிறது. எப்படி நயவஞ்சகத்தனம் நம்மை அறியாமலே நம் உல்லத்தில் குடியேறுமோ அப்படி இந்த நிலை மனிதர்களை வந்தடைகிறது.
அப்படிப்பட்ட தன்னை இறைவனாக நினைத்துக்கொண்ட ஒரு மனிதனையும், அவனுடைய தோழனையும் பற்றிய வரலாற்றை குர்ஆன் சூரா கஃப் அத்தியாயத்தில் விரிவாக பேசுகிறது.
18:32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை – எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
18:34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.
18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
18:38. “ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் – அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் .
18:39. “மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை – என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக
இருப்பதாய் நீ கண்ட போதிலும்
18:40. “உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
18:41. “அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி – அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.
18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை
வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.
18:43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.
18:44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
சுபஹானல்லாஹ்! எவ்வளவு அழகான படிப்பினை மிக்க வரலாறு. பொதுவாகவே இணை வைப்பு என்பது ஆணவத்திற்கும் பெருமைக்கும் வெகு தூரத்தில் இருப்பதில்லை, மக்கா குறைசிகளையும் , பல்வேறு நபிமார்களின் உயர்ந்த குலங்களையும் ஏக இறைவனை வணங்குவதை விட்டும் தடுத்தது அவைதான். எனவே தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கிப்ரை விட்டும் நம்மை விலகியிருக்க பணிந்தனர்.
நிஃபாக்கை விட்டு விலகியிருப்பதற்கு எவ்வாறு கடும் முயற்சிகளும் , பிரயர்த்தனங்களும் தேவையோ அதுபோலவே தற்பெருமையையும், அகம்பாவத்தையும், தன்னுடைய திறமை மீதான அதீத தன்னம்பிக்கையையும் விட்டுவிட தொடர்ந்து பயிற்ச்சிகள் எடுக்க வேண்டும் , தினந்தோறும் அதற்கான சிறிய பெரிய விஷயங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதருடைய தினசரி வாழ்க்கையிலும் அவர்களுடைய எளிமைக்கும் , பெருமையற்ற தன்மைக்கும் உதாரணமாக பல்வேறு சிறிய செயல்களை தங்களுடன் வாழ்ந்த மக்களிடம் செய்து காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஒரு சபையில் அமர்ந்திருந்தால் அங்கு புதிதாக வருபவருக்கு யார் நபி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர்களுடைய எளிமை இருந்தது.
இன்று நம்மில் பலர் எனக்கு அல்லாஹ் நிறைய ரிஜ்கை வழங்கியிருக்கிறான், அதை நான் ஏன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு எளிமை மற்றும் சாதாரண வாழ்க்கையிலிருந்து ஆடம்பரங்களை நோக்கி நகர்ந்து விடுகிறோம். அவ்வாறு அல்ல! எளிமை என்பது ஏழ்மையிலிருந்து வித்தியாசப்பட்டது. எல்லா வளங்களும் கிடைத்த பிறகும் அது நம்மை கட்டுப்படத்த விடாமல் தொடர்ந்து வாழ்க்கை பயிற்ச்சிகளை மேற்கொள்வதே எளிமையாகும். அவ்வாறே நம்முடைய குடும்பத்தையும் பழக்கப்படுத்த வேண்டும்.
தனக்கு கிடைத்த தோட்டங்களும் வளங்களும் தன்னுடைய திறமையாலும் கடும் உழைப்பாலும் கிடைத்தவை என்று அந்த மனிதன் நினைத்துக்கொண்டதைப்போல நாமும் நம்முடைய சிந்தனைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்காதிருக்க வைக்க வேண்டும். நம்மை விட கீழாக இருக்கும் மனிதர்களிடமும் , நம்முடைய சுற்றம் மற்றும் சமூகத்திடையேயும் கருணையுடன் நடந்து கொள்வதன் மூலம் நம்மை நாம் இத்தகைய எண்ணங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இந்த உலகில் வாழும் ஏழைகள் மற்றும் சாதாரண மக்களிடம் இரண்டற கலந்திருப்பது நம்முடைய ஈமானை இறைவனுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கான ஒரு அழகிய பயிற்ச்சி முறை. அத்தகைய பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பல்வேறு சமூகவியல் பாகுபாடுகளுக்கும் எளிதான தீர்வு கிடைக்கும். தொடர்ந்து ஒரு புதிய சமத்துவமான உலகிற்கான தொடக்கத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்..!
- A.S. சஹீத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக