Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

முஸ்லீம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?


சமீபத்தில் விஜய் டிவியில் ‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் முஸ்லிம்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஓர் இளம் முஸ்லிம் பெண் போட்டியின் பங்கேற்பாளராக அமர்ந்திருக்க, எதிரில் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ், கேள்விகளுக்கு நடுவே அந்தப் பெண்ணைப் பார்த்து, “உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?” என்று கேட்கிறார். உடனே “சூர்யா…!” என்று பதில் வருகிறது. இதனைக் கேட்ட பிரகாஷ்ராஜ் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் தாயாரைப் பார்த்து “உண்மையாம்மா?” என்று கேட்கின்றார். புர்கா அணிந்திருந்த அந்தத் தாயார் மகிழ்ச்சிப் பூரிப்பில் வாயெல்லாம் பற்களுடன் “ஆமாம்” என்கிறார்.

“எனக்கு சூர்யா மாதிரி மாப்பிள்ளை பாரும்மான்னு என் அம்மாட்ட சொன்னேன். ஆனா நான் ஜோதிகா மாதிரி இல்லாததனால அந்த எண்ணத்தை ட்ராப் பண்ணிட்டோம்” என்று சொல்ல அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.

மீண்டும் பிரகாஷ்ராஜ் அம்மாவைப் பார்க்க அவரோ பெருமிதம் தாங்காமல் முகத்தை மூடிக்கொண்டு தலையைக் குனிந்து சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதோ அடுத்த அதிர்ச்சிக்கு வருவோம்.

அந்தத் தாயாரின் அருகே அந்தப் பெண்ணின் தங்கை அமர்ந்திருந்தார். பிரகாஷ்ராஜ் அவரைப் பார்த்து, “உனக்கு யாரப் போலம்மா மாப்பிள்ளை வேணும்?” என்று கேட்டார். “சிவகார்த்திகேயன்” என்று பொட்டிலறைந்தாற் போல் பட்டென்று பதில் வந்தது.

மீண்டும் அரங்கம் அதிர்ந்தது. மீண்டும் அந்தத் தாயாரின் பூரிப்பு. அவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. முகத்தை கீழே குனிந்து நிமிர்ந்தார். “சிவகார்த்திகேயன்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமாம்மா?” என்று பிரகாஷ்ராஜ் கேட்க, “ஐயோ உசிரு....” என்று அந்தப் பெண்ணிடமிருந்து ஏக்கக் குரலில் பதில் வந்தது.

மீண்டும் அரங்கம் அதிர்ந்தது. புர்கா அணிந்த அந்த அம்மையார் மீண்டும் முகத்தை கீழே குனிந்து நிமிர்ந்தார். அவரது முகத்தில் மகிழ்ச்சி என்றால் அப்படி மகிழ்ச்சி. மொத்த அரங்கத்தையும் தன் இரு மகள்களும் சிறிது நேரத்திலேயே கலகலக்க வைத்து விட்டார்களல்லவா...!

இது அவலத்தின் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்திற்கு வாருங்கள்...

முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் நடக்கும் அவலங்கள். இன்று இந்த ஊர்களில் வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரத்தை அறிந்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி, ஏற்றமிகு ஸஹாபாக்களை இதயத்தில் ஏந்தி, தூய்மையாக வாழ வேண்டிய பாசமிகு பாவையர் உள்ளங்களில் சூர்யாக்களும், சிவகார்த்திகேயன்களும், இன்னும் இவர்களைப் போன்ற கூத்தாடிகளும், விபச்சாரிகளும் குடி கொண்டிருக்கின்றனர்.

ஐவேளை அல்லாஹ்வை வணங்கி, அணுதினமும் திக்ரு சொல்ல வேண்டிய நாவுகள் இன்று ஆபாசங்களை பேசிக் கொண்டு அலைகின்றன. அன்னிய ஆண்களுடன்/பெண்களுடன் அல்ல, நிச்சயித்து வைத்திருக்கும் ஆண்களுடன்/பெண்களுடன் கூட தனிமையிலோ, போனிலோ பேசக் கூடாது என்று டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி போன்ற உலகறிந்த மார்க்க அறிஞர்கள் ஃபத்வாக்கள் கொடுத்துள்ளார்கள்.

“நிக்காஹ்” என்னும் திருமண ஒப்பந்தம் முடியும் வரை ஒருவருக்கு பேசி வைத்திருக்கும் இணை என்பது அன்னியர் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மூன்றாவது ஒரு ஆள் இல்லாமல் பேசினால் அங்கே இருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது தெள்ளத் தெளிவான ஹதீஸ்.

இவற்றையெல்லாம் மீறி நமது சமுதாயத்தில் எத்தனையோ பேர் தங்களுக்கு பேசி வைத்திருக்கும் இணைகளிடம் மணிக்கணக்கில் போனில் பேசுகிறார்கள். (இப்படி மணிக்கணக்கில் அளவுக்கு மீறி பேசி நிச்சயிக்கப்பட்ட இணைகள் முறிந்ததும் உண்டு).

இப்படிப் பேசும்பொழுது அவர்கள் கூட முழுவதுமாக ஷைத்தான் இருக்கின்றான். பின் அந்த உரையாடல்களில் எப்படி பரக்கத் இருக்கும்? இப்படிப்பட்டவர்களின் உறவுகள் ஷைத்தானியத்துடன் தொடங்கும்பொழுது அவர்களது மண வாழ்க்கையில் எங்கே அமைதி நிலவும்? எங்கே நிம்மதி தவழும்? சந்தேகங்களும், சறுக்குகளும் மணவாழ்க்கையின் துவக்கத்திலேயே துவங்கிவிடும்.

இதில் மனவருத்தத்திலும் மனவருத்தம் என்னவெனில் இத்தகைய பெண்களைக் கண்டித்து, கல்லூரிகளிலிருந்து உடனே நீக்கி, வீட்டுக்கு அழைத்து வராமல், தன் மகள் விரும்பிய ஆடவனையே மாப்பிள்ளை பேசச் செல்லும் தாய்மார்களும் உண்டு. இதனை யாரிடம் போய்ச் சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்படி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் மார்க்கத்திற்கு முரணாக நடந்துகொள்வதற்கு துணை போகிறார்கள் என்றால் பிரச்னை மகளிடமிருந்து துவங்கவில்லை. தாயிடமிருந்து துவங்கிறது. தாய்க்கு மார்க்கப் பற்று இல்லை. மார்க்க ஞானம் இல்லை. எத்தனை சேனல்களில் இன்று மார்க்க சொற்பொழிவுகள் ஒளிபரப்பபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பார்ப்பதற்கு இவர்களுக்கு மனம் வருவதில்லை.

வக்த் தவறாமல் வணங்குகிறார்களோ இல்லையோ, வரும் சீரியல்களைப் பார்த்து விடுகிறார்கள். சினிமாக்களை தன் மக்களுடன் விடாமல் பார்க்கும் தாய்மார்களும் உண்டு.

புனிதமிக்க நமது சமுதாயம் இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட சம்பவங்கள் இன்று நல்ல மார்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களில் கேட்கின்றனவே! அந்தத் குடும்பங்களிலெல்லாம் மார்க்கம் எடுபட்டுப் போய்விட்டதா? அன்னியக் கலாச்சாரங்களுக்குள் அமுங்கிபோய் விட்டோமா? கால ஓட்டத்தில் கரைந்து விட்டோமா?

மார்க்கத்தை மார்பில் ஏந்திய முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மாற்றங்கள் வருமா? இதயங்களில் இடி விழும் இப்படிப்பட்ட இகழ்வுகள் இனியாவது நடக்காதிருக்குமா? நம் இளைய சமுதாயம் இஸ்லாத்தின் பிடிக்குள் இனியாவது தலையெடுக்குமா?

வட இந்தியாவில் எங்கோ ஒரு கிராமத்தில் இளம் பெண்களுக்கு மொபைல் போனையும், ஜீன்ஸ் பேண்டையும் தடை செய்திருக்கிறார்கள் கிராமத் தலைவர்கள். தற்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை சீரழிவுகளுக்கும் மொபைல் போனும், ஜீன்ஸ் பேண்டும்தான் காரணம் என்று அந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் மாற்றாருக்கு ஏற்பட்ட சிந்தனை நமக்கு ஏன் ஏற்படவில்லை?

ஆம்! அப்படியெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியை தடை செய்திட முடியாது என்று நாம் எண்ணலாம். அப்படியானால் இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?

தீர்வு ஒன்றே ஒன்றுதான். அதுதான் தக்வா என்ற இறையச்சம்!

தாய்ப்பாலை ஊட்டும்பொழுதே தக்வாவையும் சேர்த்து ஊட்ட ஆரம்பித்து விட்டால் இந்த இழிநிலைகளை தவிர்க்கலாம்.

இன்று அவர்களிடம் நீங்கள் செல்போனைத் தடை செய்தால் நாளை வேறு ஒரு நவீன கருவியை கையில் வைத்திருப்பார்கள். அது இதைவிட மோசமாக இருக்கலாம். ஆனால் தக்வா என்னும் இறைத் தடையை ஏற்படுத்தி விட்டால் எப்பேற்பட்ட நவீன கருவிகள் வந்தாலும் அவை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

நம்மையெல்லாம் நம் தாய்மார்கள் எப்படி இறையச்சத்தோடு வளர்த்தெடுத்தார்களோ அதே இறையச்சத்தோடு இப்போதைய தாய்மார்கள் இளைய தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும்.

தடுக்கி விழுந்தால் தனியோனை வணங்கும் தலங்கள் வாழும் பகுதிகளில் இது சாத்தியமில்லையா? எத்தனை மார்க்க நிறுவனங்கள் உள்ளன? எத்தனை மதரஸாக்கள் உள்ளன? எத்தனை மக்தபுகள் உள்ளன?

ஆண் குழந்தைகளுக்கு எப்படி மார்க்கக் கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளனவோ அதே போன்று பெண் குழந்தைகளுக்கும் மார்க்கக் கல்வி கிடைக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.

ஆக, இஸ்லாத்தை இதயங்களில் ஏற்றினால் ஏற்றம் பெறுவது இம்மையில் மட்டுமல்ல; மறுமையிலும்தான்!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக