நேற்றைய முன்தினம் தமிழக அமைச்சர் ஒருவரின் பேச்சும், அன்றைய தினம் தினசரிகளில் வந்த செய்தியும் அரசின் மக்கள் நலனை எனக்கு நன்றாக எடுத்தியம்பியது.
சம்பவம் 1:
இடம் - கோவை பேருந்து நிலையம். உடைகள் களைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அதீத குடிப்பழக்கத்தால் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 28
சம்பவம் 2:
இடம் - சென்னை கூவம் குடியிருப்பு. நள்ளிரவில் திடீரென்று ஒரு இளைஞர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கண்களில் கண்ணீருடனும், கைகளில் இரண்டு குழந்தைகளுடனும் நிற்கும் அவரது 21 வயது மனைவி தொடர்ச்சியான குடிப்பழக்கத்தால் தனது கணவர் ஒருவித மனநோய்க்கு ஆளாகி விட்டதாக தெரிவித்தார்.
சம்பவம் 3:
இடம் - மேடவாக்கம். ஒரு டாஸ்மாக் வாசலில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை இரண்டு புறமும் இரண்டு பெண்கள், ஒரு பெண்ணிற்கு 18 வயதிருக்கும், இன்னொரு பெண்ணிற்கு 10 வயதிருக்கும். சிறு வயதில் தங்களை தோள்களில் சுமந்ததற்கு நன்றிக் கடனாக தற்போது அவரை தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
இந்த மூன்று சம்வங்களும் ஒரே நாளில் தினசரிகளில் வந்த செய்தி. மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா மது.
இதுபோன்ற அரகேற்றக் காட்சிகள் தமிழகம் முழுவதும் தினம் தினம் அரங்கேறும் காட்சிகளில் சிறிய உதாரணங்களே! காலை 10 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட்டதிலிருந்து இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் வரை இதுபோன்று வருமானம் இழக்கும், மானம் இழக்கும், உயிரை இழக்கும் குடிமகன்கள் லட்சோப லட்சம். ஆனால் அரசுக்கோ வருமானம் கோடிகளில்!
இந்த காரணத்தால்தான் அமைச்சர் சொன்னாரோ, ‘தீமையிலும், நன்மை என்று!’
என்னே! உங்கள் மக்கள் நலன்! புல்லரிக்குதடா சாமி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக