இஸ்ரேலுடன் இந்தியா உறவை துண்டிக்க வேண்டும்! - சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சர்வேதேச போர் விதிமுறைகளையும் மீறி, உலக நாடுகளின் கோரிக்கையையும் ஏற்காமல், மனிதாபிமானமற்ற முறையில் ஃபலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்திவருகிறது. இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 1800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 80 சதவீதத்தினர் பெண்களும், குழந்தைகளுமாவர்.
மேலும் ஐக்கிய நாட்டு சபையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஐ.நா வின் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பள்ளிக்கூடங்கள், ஆம்புலன்ஸ்கள் என எதையும் பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது. இஸ்ரேலின் இந்த மனித தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான கொடூரத் தாக்குதலை கூட்டமைப்பின் சார்பாக வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஃபலஸ்தீன விவகாரத்தில் மனித உரிமைகள் பேணப்படுவதில் உலக நாடுகளின் மௌனம் அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் சுதந்திரம் அடைந்தது முதல் ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு அளித்து வரும் இந்தியா, இந்த தாக்குதலை கண்டிப்பதற்கு கடமைப்பட்டுள்ளது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. ஆசிய விவகாரங்களில் ஆளும் பா.ஜ.க அரசின் மாறுபட்ட பேச்சுகள் அதிர்ச்சியை தருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த போதும் பாராளுமன்ற இரண்டு அவைகளிலும் இஸ்ரேலிய படுகொலை கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது.
ஆகவே இஸ்ரேலுடனான உறைவை மத்திய அரசு உடனடியாக துண்டிக்க வேண்டும். மேலும் பாராளுமன்ற அவைகளில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்தப்பட்டது.
இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையில், நட்பு நாடு என்ற காரணத்தைக் கூறி மத்திய அரசு மெளனியாக இருந்தாலும், மனித உரிமை அடிப்படையில் தமிழக அரசு இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தனது எதிர்ப்பை நிலைநாட்டியது. அதேப்போல் தற்போது காஸாவில் இஸ்ரேல் மேற்க்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக சட்டமன்றத்திலும் இஸ்ரேலுக்கு எதிராக தமிழக அரசு கண்டன தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் எனவும் கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. மேலும் இஸ்ரேலின் பொருட்களை புறக்கணிக்கவும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கெடுத்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இஸ்லாமிய அமைப்புகளின் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாது அனைவரும் இறுதிவரை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக