முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பணி மாற்றம் மற்றும் இடமாற்ற உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த டி.பி.ராஜேஷ் கரூர் மாவட்ட ஆட்சியராக பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் எஸ்.ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரான வீர ராகவ ராவ், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், சென்னை மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநரான ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் எஸ்.நடராஜன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கிறார்.
சென்னை கலெக்டர் திருமதி சுந்தரவல்லி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட கலெக்டர் டாக்டர் எல்.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாகத்துறையின் இணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதன்மை செயலர்/ஆணையர் விக்ரம் கபூர் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்ற வாரிய முதன்மை செயலர்/ ஆணையராக பணி மாற்றம் பெற்றுள்ளார்.
விக்ரம் கபூருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி ஆணையராக டாக்டர் பி.சந்திர மோகன் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக