சமீப காலம் வரை கஜினி முஹம்மதின் படையெடுப்பானது பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாறுகள் வழியாகத்தான் குறுகலாக கணிக்கப்படுகிறது. இந்தியாவின் செல்வம் சூறையாடப்பட்டதற்கும், ஆலயங்களின் விக்ககிரக தகர்ப்புக்குமான தொடக்கப் புள்ளி கஜினி முஹம்மதுதான் என்ற கருத்தானது கடந்த இரு நூறாண்டுகளுக்குள்தான் பலப்படுத்தப்பட்டது என்கிறார் புகழ் பெற்ற வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர்.
சோமநாதர் ஆலயப் படையெடுப்பு சம்பந்தப்பட்டு துருக்கிய பாரசீக ஆவணங்கள், சமஸ்கிருத கல்வெட்டுகள், சமண ஆவணங்கள், ரஜபுத்திர காப்பியங்கள், நாட்டுப்புற வாய்மொழி வரலாறுகள், பிரிட்டிஷ் அரசியலவையில் நடைபெற்ற விவாதங்கள், இந்திய தேசியத் தலைவர்களின் கருத்தாக்கங்கள் என்று பல்வேறு ஆவணங்கள் இருக்கின்றன.
அந்தப் பலதரப்பு ஆவணங்களை அருகருகே வைத்து ஒப்பீடு செய்ததில் கஜினி முஹம்மதின் படையெடுப்பானது ஒரே விதமாக ஒற்றைப் பார்வையுடன் எல்லோராலும் பார்க்கப்படவில்லை. படையெடுப்புக்கு எதிராக பல விதமான எதிர்வினைகள் நடந்திருக்கின்றன என்பது புலனானது. அந்த ஆவணங்களை விரிவாக ஆய்ந்ததின் விளைவுதான் Somanatha – The Many Voices of a History என்ற தனது புத்தகம் என்கிறார் ரொமிலா தாப்பர்.
துருக்கிய – பாரசீக ஆவணங்கள்
சோமநாதர் ஆலயத்தின் மீதான படையெடுப்புக்கு திரும்பத் திரும்ப, முக்கியத்துவம் கொடுத்துப் பேசியவை துருக்கி மற்றும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள் ஆகும். கஜினி முஹம்மது படையெடுத்த 1206ம் ஆண்டு போக, பல நூற்றாண்டுகள் கழித்து, பின்னால் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலத்திலும் சோமநாதர் ஆலயமானது திரும்பவும் தாக்கப்பட்டதாக வரலாறுகள் தோன்றின. அந்த ஆவணங்களில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுவதாகச் சொல்கிறார் ரொமிலா தாப்பர்.
உதாரணமாக, 1299ம் ஆண்டு உலூ கான் என்பவர் சோமநாதர் ஆலயத்தைத் தகர்த்து அங்கு ஒரு மஸ்ஜிதை நிறுவியதாகவும், ஆலயத்திலிருந்த சிலையை டில்லியிலிருக்கும் அலாவுதீன் கில்ஜிக்கு அனுப்பி வைத்தார் எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.
1395ல் குஜராத்தின் ஆளுனராயிருந்த முஜாஃபர் கான் என்பவர் சோமநாதர் ஆலயத்தைத் தாக்கி அவ்விடத்தில் மஸ்ஜித் ஒன்றை ஏற்படுத்தினார் என ஃபெரிஷ்டா (Ferishta) என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் ஜாபர் கான் என்பவரும், 1413ல் முஜாஃபர் கானின் பேரனும் சோமநாதர் ஆலயத்தின் மீது படையெடுத்து இஸ்லாத்தை ஸ்தாபித்ததாக அதே பெரிஷ்டா குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் எதோவொரு இஸ்லாமிய சுல்தானோ அல்லது தளகர்த்தரோ அவரவர் பங்குக்கு சோமநாதர் ஆலயத்தை இல்லாமலாக்கி, அதிலிருந்த விக்கிரகத்தை தகர்த்து அங்கு மஸ்ஜிதை உண்டாக்கின கதையானது அந்த வரலாறுகளில் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
முதல் சுல்தான் கோயிலை இடித்து அங்கு மஸ்ஜிதைக் கட்டி விட்டாரென்றால், அங்கே மஸ்ஜிதுதான் நிலைத்திருக்கும். கோயில் இருக்காது. முதல் சுல்தானுக்குப் பின்னால், படையெடுத்து வந்த இரண்டாவது சுல்தான், முன்னவர் கட்டிய மஸ்ஜிதைத்தானே இடிக்கும் படியான நிலை இருந்திருக்கும். அதற்குப் பதிலாக அங்கு மஸ்ஜிது இல்லை, அங்கு கோயில்தான் இருந்தது, அதுதான் இடிபட்டது என்று சொல்லுவது எப்படிச் சாத்தியமாகும்?
முதன் முதலாக கோயிலைத் தகர்த்த உலூ கானுக்குப் பின் வந்த படையெடுப்பாளர்கள், மஸ்ஜிதைத்தானே இடித்திருப்பார்கள் என்று நம் முன் எழும் கேள்வியானது, பதில் காணப்படாமலேயே நிற்கிறது என்கிறார் ரொமிலா தாப்பர்.
கோயில் தகர்ப்பு சம்பந்தப்பட்டு குழப்பமான தகவல்கள் போக, சோமநாதர் ஆலயத்தில் வழிபடப்படும் தெய்வம் குறித்தும் முரண்பாடான குறிப்புகள் இருக்கின்றன. அங்கு வழிபடப்பட்டது உருவமற்ற கல்லா, மனித அம்சங்கள் கொண்ட சிலையா, சிவலிங்கமா அல்லது மனத் என்ற பெண் தெய்வமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத படிக்கு வரலாற்றுக் குறிப்புகள் தெளிவில்லாமல் இருக்கின்றன என்கிறார் தாப்பர்.
இஸ்லாம் அரபு மண்ணில் பரவுவதற்கு முன்பாக லாத், உஸ்ஸா, மனத் என்ற மூன்று பெண் தெய்வங்கள் அரபு மக்களால் சிறப்பாக வழிபடப்பட்டு வந்தது. சிலை வணக்கம் கூடாது என்ற இஸ்லாமிய கோட்பாட்டின்படி லாத், உஸ்ஸா போன்ற தெய்வங்களின் சிலைகள் நபிகள் நாயகத்தின் காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டன. அதில் மனத் என்ற தெய்வமானது இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டு சோமாநாதர் ஆலயத்தில் வழிபடப்பட்டு வந்தது என்ற கருத்து இஸ்லாமிய ஆட்சியாளர்களின் மத்தியில் இருந்தது.
சிலை வணக்கத்தின் மிச்சத்தை இந்திய மண்ணில் ஒழிப்பதில் துருக்கியர்களான நாங்கள் அரபியர்களை விட, முனைப்புடன் செயல்பட்டிருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்திய கஜினி முஹம்மது போன்ற வெற்றியாளரின் வரிசையில் வந்தவர்கள் என்ற அரசியல் நியாயப்பாட்டை கோரிக் கொள்ளவும் கோயில் இடிப்பு பற்றிய வரலாற்றுச் சித்தரிப்புகள் மீண்டும் மீண்டும் அந்த ஆவணங்களில் தோன்றியிருக்கலாம் என்கிறார் ரொமிலா தாப்பார்.
சமஸ்கிருத கல்வெட்டுகள்- சமண ஆவணங்கள்
அடுத்து முக்கியமாக சோமநாதா பட்டணத்தின் சமூக வாழ்க்கையைப் பற்றி நிறைய செய்திகளைத் தருவதாய் சமஸ்கிருத கல்வெட்டுகளும், சமண ஆவணங்களும் இருக்கின்றன.
கோவாவில் ஆட்சி செய்த கடம்ப அரசன் ஒருவன் கடல் மார்க்கமாக சோமநாதா பட்டணத்திற்கு ஆன்மீக யாத்திரை போனதையும், அப்படிப் போகும் வழியில் தான் விஜயம் செய்த இடங்களைக் குறித்து 1038ம் ஆண்டு கல்வெட்டில் குறித்திருக்கிறான். சோமநாதர் ஆலயம் முழுதுமாக அழிக்கப்பட்டிருந்தால் கடம்ப அரசன் அந்த ஆலயத்திற்கு விஜயம் செய்திருக்க மாட்டான். ஆலயம் சற்று சேதாரப்படுத்தப்பட்டுத்தான் இருந்திருக்குமேயொழிய முற்றிலும் தகர்க்கப் படவில்லை என்பதைத்தான் அது சுட்டுகிறது.
1169ல் சோமாநாதா ஆலயத்திலுள்ள கல்வெட்டானது பாசுபத பிரிவைச் சார்ந்த சைவரான பவ பிரஹஸ்பதி என்ற தலைமைப் பூசாரி சாளுக்கிய அரசனான குமாரபாலாவை சீரழிந்து கிடக்கும் சோமநாதா ஆலயத்தை செப்பனிட சம்மதிக்க வைத்ததாய் சொல்கிறது. கால கதியில் ஆலயம் பழசாகிவிட்டதும், கலியுகத்தில் ஆலயத்தை நிர்வகிப்பவர்களின் அலட்சியத்தாலும் பாரா முகத்தாலும்தான் ஆலயம் சீர் கெட்டுக் கிடக்கிறது என்ற காரணங்களை அக்கல்வெட்டு சொல்கிறது. கஜினி முஹம்மதின் படையெடுப்பைப் பற்றிய குறிப்புகள் அக்கல்வெட்டில் கிடையாது.
கஜினி முஹம்மது படையெடுப்பு நிகழ்த்தி சுமார் 200 வருடங்கள் கழித்து 1264ம் ஆண்டு சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழியில் அமைந்த இரு மொழிக் கல்வெட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. நூர்உத்தீன் ஃபிரௌஸ் என்ற பாரசீகத்தைச் சேர்ந்த கப்பல் வணிகர் ஒருவருக்கு சோமநாதா ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட இடத்தினை மஸ்ஜித் கட்டுவதற்கு தானமாக அளிக்கப்பட்டதை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. நிலம் கொடுக்கப்பட்டது சாளுக்கிய – வகேலா அரசரான அர்ஜூனதேவா காலத்தில் நடந்திருக்கிறது.
‘சித்தம் ஓம் நமா ஸ்ரீ விஷ்வநாதாயா என்று தொடங்கி சூன்ய ரூப, விஷ்வ ரூப, லக்ஷ்ய லக்ஷ்ய’ போன்ற அடைமொழிகளுடன் இறைவனைக் குறிப்பிட்டுப் பேசுகிறது அந்தக் கல்வெட்டு. இவ்விடத்தில் விஷ்வநாதா என்பது சாளுக்கியர்களாலும் வகேலா அரசர்களாலும் வணங்கப்பெற்ற, சோமநாதா பட்டணத்தில் உறையும் சிவனைக் குறிப்பதாகச் சொல்லலாம்.
உருவம் இல்லாதவன், எங்கும் நிறைந்திருப்பவன், காணப்படுபவன், காண இயலாமல் இருப்பவன் என்று கடவுளின் குணாதிசயங்களைச் சொல்லும் அக்கல்வெட்டின் வாசகங்கள் அரபி மொழியில் இறைவனைச் சுட்டும் கருத்துகளுக்குச் சமமான சமஸ்கிருத வார்த்தைகளைப் போட்டு அமைத்ததாக உள்ளது.
அதனால்தான் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘விஷ்வநாத’ என்பது சிவனைக் குறிப்பது என்று கொள்ளாமல், அல்லாஹ் என்ற அரபிச் சொல் சுட்டுகின்ற தன்மைகளை, மஸ்ஜித் அமைந்திருக்கும் வேறு மண்ணின் பிராந்திய அம்சங்களுக்கு தகுந்தவாறு, சோமநாதவாசிகள் புரிந்து கொள்ளும் வழியாக சமஸ்கிருதத்தில் தரப்பட்டிருக்கிறது என்று கொள்ளலாம்.
அப்படிக் கொள்வதன் மூலம்தான் கல்வெட்டில் அசாதாரணமாகத் தென்படும் அடைமொழிகளான எங்கும் நிறைந்தவன், உருவம் இல்லாதவன் போன்ற இறைவனின் குணங்களானது விளக்கம் பெறும். கல்வெட்டின் அரபு வாசகங்களில் சோமநாதா பட்டணமானது இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றானவர்கள் இல்லாத, விக்கிரகங்களற்ற பட்டணமாகவும், முழுக்க முழுக்க இஸ்லாமிய நகரமாகி விட வேண்டும் என்ற விருப்பம் தொனிப்பதாக இருக்கிறது.
கல்வெட்டின் சமஸ்கிருத பகுதியில் அந்த வாசகங்கள் சாமர்த்தியமாக எழுதப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும், அப்படியான வாசகங்கள் மற்ற இஸ்லாமிய ஆவணங்களில் வழமையாகக் காணப்படும் அம்சமாகும் என்பதையும், பொது வெகுஜன தளத்தில் மத ரீதியான விஷயங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் வெளிப்பட்ட விதத்திற்கு அது சிறந்த உதாரணமாகும் எனவும் கூறுகிறார் ரொமிலா தாப்பர்.
மஸ்ஜிதுக்கான இடம் தானமாக கொடுக்கப்பட்டது பஞ்ச குலா (Pacha-kula) என்றழைக்கப்பட்ட ஓர் அமைப்பினுடைய மேற்பார்வையின் கீழ் நடந்திருக்கிறது. சோமநாதா பட்டணத்தின் சகல நிர்வாகத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருந்ததாய் அந்தப் பஞ்சகுலா அமைப்பு இருந்திருக்கிறது. சோமநாதா பட்டணத்தின் முக்கியப் பிரமுகர்கள்தான் அதன் உறுப்பினர்களாக செயல்பட்டிருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், மஸ்ஜிதுக்காக ஆலயத்திற்குச் சொந்தமான நிலம் தானம் செய்யப்பட்டதில் மத்தியஸ்தராக இருந்து காரியம் முடித்துக் கொடுத்தவர் பவ திரிபுரந்தக என்ற தலைமைப் புரோகிதர் ஆவார்.
கஜினி முஹம்மதின் படையெடுப்பு அவ்வளவு மறக்க முடியாத கொடுமையான விஷயமாயிருந்தால், படையெடுப்பு நடந்த இருநூறு வருடங்களுக்குள் இவ்வளவு நல்லிணக்கமான செயல்பாடுகள் எப்படி நடந்திருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் தாப்பர்.
கடல் நீர் அரிப்பினால்தான் சோமநாதர் ஆலயம் சீர்கேடடைந்தது என்றும், மரத்திலான ஆலயக் கட்டுமானத்தை நீக்கி விட்டு கல்லாலான ஆலயத்தை எழுப்ப அரசன் குமாரபாலாவைச் சம்மதிக்க வைத்தது அவரிடம் மந்திரியாக இருந்த சமணத்தைச் சார்ந்த ஹேமச்சந்திராதான் என்று உரிமை கோருகின்றன சமண ஆவணங்கள். அவைகளில் கஜினி முஹம்மது படையெடுப்பைப் பற்றி குறிப்புகளில்லை.
பல நேரங்களில் தனது மந்திரி ஹேமச்சந்திராவின் அற்புத சக்திகளை கண்டுணர்ந்த அரசன் குமாரபாலா தனது சைவ மதத்தை விட்டுவிட்டு, சமணத்திற்கு மாறியதாயும் சொல்கின்றன சமண ஆவணங்கள். சோமநாதர் ஆலயக் கல்வெட்டுக்கு முரணாக விளங்குகிறது சமண ஆவணங்கள்.
முஸ்லிம்களின் படையெடுப்புக்கு எதிராக சவால் விட்டுக் கொண்டு எதிர்ப்புணர்ச்சியைக் காட்டுபவை இந்து ரஜபுத்திர காவியங்களாகும் என்று பரவலாக அறியப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய ரஜபுத்திர காவியங்களான பிருத்திவிராஜா-ரசோவிலும், பிருத்திவிராஜா விஜயத்திலும் ஆகிய இரண்டிலுமே கஜினி முஹம்மதின் சோமநாதா படையெடுப்பைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லாதது ஆச்சரியப்படத் தகுந்த விஷயமாகும் என்கிறார் ரொமிலா தாப்பர்.
நாட்டார் பாடல்கள்
மங்ரோலி ஷா கிஸ்ஸா என்ற நாட்டுப்புறப் பாடல் கஜினி முஹம்மதை சுற்றி வளைத்துப் பேசுகிறது. கொடுமைக்கார இந்து ராஜா ஒருவன் தான் வணங்கும் தெய்வத்திற்கு ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலி கொடுக்கிறான். ஒரு கட்டத்தில், வயதான மூதாட்டி ஒருவரின் மகன் பலியிடப்பட வேண்டிய நேரம் வந்து விடுகிறது. இக்கட்டான அந்நேரத்தில் மக்காவிலிருந்து வந்த காஜி ஒருவர் தலையிட்டு பலிக்கு மூதாட்டியின் மகன் போக வேண்டாம், அவனுக்குப் பதிலாக தான் போவதாகச் சொல்லி மூதாட்டியின் மகனைக் காப்பாற்றி விடுகிறார்.
அம்மூதாட்டியை கஜினி முஹம்மதிடம் தூதனுப்பி அவரைப் படையெடுத்து வரச் செய்து அந்த இந்து ராஜாவின் கொட்டத்தையடக்கி விடுகிறார் அந்த காஜி.
ஷபரா தாந்திரீக மரபில் சிவன், நரசிம்மன், பிரம்மன், ஹனுமான் போன்ற கடவுளர்களின் பட்டியலின் வரிசையில் கஜினி முஹம்மதின் பேரும் சேர்த்து உச்சரிக்கப்படுகிறது. அப்படியொரு புனித பிம்பம் நாட்டார் மரபில் கஜினி முஹம்மதுக்கு இருக்கிறது.
கஜினி முஹம்மது பற்றிய சர்ச்சை மீண்டும் 1951ல் வேறொரு ரூபத்தில் உயிர் பெற்றது. சோமநாதர் ஆலயத்திலிருந்த சந்தனக் கதவை கஜினி முஹம்மது கவர்ந்து சென்றுவிட்டார் என்ற கருத்து நிலவி வந்தது. அச்சமயத்தில் நேரு பாகிஸ்தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சோமநாதா ஆலயத்திலிருந்து கைப்பற்றப்பட்டுப் போன கதவைப் பற்றிய செய்தி முழுமையாக தவறானதாகும். அதில் எள்ளளவும் உண்மையில்லை. அப்படியொரு கதவு இருந்ததா என்பது யாருக்கும் தெரியாது என்று எழுதினார்.
தொடக்கத்தில் ஃபெரிஷ்டா இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி எழுதியவைதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஃபெரிஷ்டா எழுதியதே நம்பகமான வரலாறாக எடுத்துக் கொள்ளப்பட்டு டவ் கிப்பன், ஜேம்ஸ் மில் போன்ற ஆங்கிலேயர்களால் திருப்பிச் சொல்லப்பட்டது.
பிரிட்டிஷாரின் வரலாற்று எழுத்துகள் கஜினி முஹம்மதின் படையெடுப்பும் அவரைத் தொடர்ந்து வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து அதை பாலைவனமாக்கினர். அந்தப் பாலையை பிரிட்டிஷார் தனது நிர்வாகத் திறமையினால் சோலையாக்கினார்கள் என்ற சித்திரத்தை ஸ்திரமாக்கி விட்டன. அதனால், இந்து, முஸ்லிம்கள் இணையவே முடியாமல் சதா எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்கள் என்ற கருத்து அழுத்தம் பெற்றது.
பாரசீக ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது அந்த ஆவணங்களுக்குள் மதச் சாயம் ஏற்றப்பட்டது. கஜினி முஹம்மது இந்துஸ்தானின் மீத ஒவ்வொரு வருடமும் படையெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டார் என்று மூலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள், கஜினி முஹம்மது இந்துஸ்தானின் மீது ஒவ்வொரு வருடமும் புனிதப் போர் நிகழ்த்த உறுதி பூண்டார் என எலியட் டவ்சன் ஆங்கில மொழிபெயர்ப்பில் மாற்றம் பெற்றது.
கஷ்மீரத்து புலவரான பில்ஹணா என்பவர், கஜினி முஹம்மது படையெடுப்பு நடந்து, ஐம்பது வருடங்கள் கழித்து சோமநாதா பட்டணத்திற்கு விஜயம் செய்தார். குஜராத்தில் வசிக்கும் பிராமணர்களுக்கு கல்வியறிவு போதாது என்றும், அங்கு பேசப்படும் உள்ளூர் பாஷை தாழ்ந்த தரத்தில் இருந்ததென்றும்தான் அவர் குறை கூறி எழுதியிருக்கிறார். மற்றபடி படையெடுப்பைப் பற்றி பில்ஹணா எதுவும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இது ஒரு ஆச்சர்யமான விஷயம்.
ஏனென்றால், பில்ஹணா குஜராத்திலிருந்த போது அங்கிருந்த சாளுக்கியர்களின் அரசவையில் சிறிது காலம் தங்கியிருந்திருக்கிறார்.
இன்னொரு புலவரான கல்ஹணா என்பவரின `ராஜதரங்கிணி’ என்ற நூலிலும் கஜினி முஹம்மதின் மற்ற படையெடுப்புகள் பற்றி குறிப்புகள் உள்ளன. சோமநாதர் ஆலயப் படையெடுப்பைப் பற்றி எந்தக் குறிப்புகளுமில்லை.
கஜினி முஹம்மது சம்பந்தப்பட்ட ஆவணங்களை தொகுத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் அக்கறைகள், அரசியல் நோக்கங்களுக்கு தகுந்தவாறு படையெடுப்பை சித்தரித்துள்ளார்கள். அச்சித்தரிப்புகள் ஒற்றையாக இல்லாமல் பலவிதமான குரல்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படியாக பல வரலாறுகள் இருந்திருக்கின்றன என்ற புரிதல் சமகால அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘அதிகாரப்பூர்வமான’ ஓர் ஒற்றை வரலாறு மட்டும் உருவாவது பற்றி கேள்வி கேட்க வைக்கும் என்கிறார் ரொமிலா தாப்பர்.
தாப்பரின் புத்தகத்தில் கஜினி முஹம்மது படையெடுப்பு சம்பந்தப்பட்டு நிறைய வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன, நிறைய கேள்விகளும் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் ஊடாக கஜினி முஹம்மது படையெடுப்பு இந்தியாவுக்கு நேர்ந்த களங்கம் என்ற கருத்து ஊதிப் பெருக்கப்பட்ட ஒன்றா அல்லது வரலாற்றையே வேறுவிதமாக அணுகிப் பார்க்கலாமா என்பதை ஒருவர் சுயமாக மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
மதவாத நோக்குடன் எழுதப்படும் வரலாறுகளை விமர்சனப்பூர்வமாக அணுக தூண்டக்கூடியவையாக இருக்கின்றன அக்கேள்விகள். அந்த அடிப்படைக் கேள்விகளின் வழியாக, மத அடிப்படைவாதம் பெருகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், மதக் கோட்பாடுகளையோ, இறையியலையோ போதிக்காமல் உயர்நிலைப் பள்ளிகளில் சமயங்களின் வரலாற்றை அதன் சமூக அரசியல் பரிமாணங்களோடு போதித்தால் விமர்சன உணர்வுள்ள ஒரு புதிய தலைமுறையை கணிசமாக உருவாக்க முடியும் என்ற ரொமிலா தாப்பரின் கூற்றை நாம் எப்படி மறுக்க முடியும்?
சஃபி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக