சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பொங்கல் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட போது பல்வேறு விதமான நூல்களைக் காண நேர்ந்தது.
தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், அரசியல், அறிவியல், ஆராய்ச்சி, வரலாறு, மருத்துவம், கவிதை, புதினம், இலக்கியம் போன்ற பல்சுவை கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.
ஆனால் சென்ற வருடங்கள் இருந்த மக்கள் அலையைப் போன்று இந்த முறை காண முடியவில்லை என்பது மனதிற்கு வருத்தம் அளிக்கின்றது. பல்வேறு விதமான தொழில்நுட்பங்களான சமுக வலைத்தளங்கள் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு இளைஞர்களிடத்தில் சற்றே குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
புத்தகங்களை வாசிப்பது ஓர் அற்புத அனுபவம். அது புதியதொரு உலகைத் திறந்து காட்டும். பல புதிய அரிய தகவல்களை அள்ளித் தரும். நாடுகளின் எல்லைகளையும், வரலாற்றையும் மாற்றி அமைக்கும் மகா பலம் பொருந்தியது புத்தகங்கள்.
பல புத்தகங்கள் உலகையே உலுக்கி எடுத்துள்ளன என்பதுதான் உண்மை. அது மட்டுமின்றி வாசிப்பு பழக்கம் நம் மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனை அதிகரிப்பது மட்டுமில்லாமல் நம் கற்பனையையும் அறிவையும் புத்தகம் வளர்க்கிறது என்றே சொல்லலாம்.
காட்சி ஊடகங்களைப் போல புத்தகத்தில் உள்ளவை ஒரு முறையுடன் மறந்து விடுவதில்லை. அது காலம் காலமாக புதிய புதிய அர்த்தங்களைத் தந்து கொண்டே இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய சாதனையாளர்களுக்குப் பின்னால் இருப்பவை புத்தகங்களே என்பதை நம் இளம் தலைமுறையினருக்கு நாம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அது மட்டுமின்றி உலக பிரபலங்கள் முதற்கொண்டு நம் நாட்டு தலைவர்கள் வரை புத்தகங்களை பற்றி அவர்களுடைய மதிப்பீடு என்ன என்பதை சற்று நாம் அலசுவோம்.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் காந்தி. அது மட்டுமின்றி, “ஒரு நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகிறது” என்றவரும் இவரே.
விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கட்டது ஏன் என்று வினவியபோது, “பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது” எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்ட போது “புத்தகங்கள்தான்” என்றாராம் மார்டின் லூதர் கிங்.
“எங்கே தங்க விரும்புகிறீர்கள்?” என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது, “எது நூலகத்திற்கு அருகில் உள்ளது?” எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.
“தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்” என்று பதிலளித்தார் ஜவகர்லால் நேரு.
“மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது?” என்று வினவப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் “புத்தகம்” என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் – “இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று” என்றார் பெட்ரண்ட் ரஸல்.
“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு புத்தகம்தான்” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
இவ்வாறாக புத்தங்களின் முக்கியத்துவத்தை நாம் பல்வேறு பிரபலங்களின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். ஒருவனது வாழ்வு நல்வாழ்வாக அமைய அடித்தளம் அமைப்பது அவனது நற்குணங்களே. அந்த நற்குணங்களை தேடித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நூல்களே என்பதை நம் இளம் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டிய தருணம் இதுவே.
மேன்மை மிக்க சமுதாயத்தை உருவாக்க இன்றே, இப்போதே நாம் அனைவரும் படிக்கத் தொடங்குவோம். நம்மைச் சேர்ந்தவர்களையும் படிக்கச் சொல்வோம்.
படிப்போம். முன்னேறுவோம்.
அஃப்சர் சையத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக