"இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்" சஹீத். செய்யத் குதுப் அவர்களின் சிந்தனை நூலான இந்நூலை தமிழில் மு.குலாம் முஹம்மது அவர்களின் எளிய மொழிபெயர்ப்புடன் திண்ணை தோழர்கள் பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்துள்ளது. 288 பக்கம் கொண்ட இந்நூலின் விலை ரூ. 90 தான். இந்த புரட்சிக்கர கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் குறைந்த விலையில் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நன்று.
இந்நூலை இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு நூலாக கருதுகிறேன். ஏனென்றால் இந்நூலை எழுதியதற்காகவே சஹீத்.செய்யத் குதுப் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலி நீதிமன்ற விசாரணையின் மூலம். அந்த அளவிற்கு இஸ்லாத்தின் எதிரிகளை, அநீதியான ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்துள்ளது இந்நூல்.
ஆரம்பத்தில் சஹீத்.செய்யத் குதுப் அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பேணக்கூடியவர்களாக, அதன் கல்வி முறையை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் எகிப்திய அரசால் மேற்கத்திய கல்வி முறையை ஆராய்ந்து எகிப்தில் செயல்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அங்கே அவர் கண்ட மேற்கத்திய கலாச்சாரத்தின் மோசமான விளைவுகள், இஸ்லாத்திற்கு எதிராக அங்கு நடைபெறும் பிரச்சாரங்கள் அவரை யோசிக்க வைத்தது. அதன்பிறகு எப்படி இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உதவினார், முன்பு தவறானவர்களாக கருதிய இக்வான்களுடன் எப்படி இணைந்து செயல்பட்டார். அதனால் அவர் பட்ட கஷ்டங்கள், சிறையில் பட்ட கொடுமைகள், இறுதியாக இந்நூலை எழுதியதற்காக அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை வரை அவரது வாழ்க்கையை ஓரளவு தொட்டுக்காட்டுகிறது இந்நூல்.
சஹீத்.செய்யித் குதுப் அவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கும், முஸ்லிம்களின் வளர்ச்சிக்கும், அதற்கெதிராக நடைபெறும் சூழ்ச்சிக்கும் நன்கு ஆராய்ந்து அதற்கான தீர்வாக இந்நூலை வடித்துள்ளார்கள்.
இஸ்லாமிய சமுதாயத்தின் இன்பமும், துன்பமும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். முஸ்லிம் சமுதாயம் அதன் அசல் வடிவை மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் அது உலகை வழி நடத்தும் என்றும் முஸ்லிம்களை புனரமைப்பது அவசியமாக செய்ய வேண்டிய கடமை என வலியுறுத்துகிறது.
குர்ஆனையும், நபி ஸல் அவர்களின் வழிமுறையையும் பின்பற்றப்பட வேண்டிய நோக்கத்தை விரிவாக பேசுகிறது. அதோடு இஸ்லாமிய சமுதாயம் ஏன் இன்று பின்தங்கி இருக்கிறது என்பதற்கும் விடையளிக்கிறது.
நபி ஸல் அவர்கள், அக்கால இருளில் மூழ்கி இருந்த மக்களிடம் புரட்சியை ஏற்படுத்தியதை நாம் எண்ணி பார்க்க வேண்டும். நபி ஸல் அவர்கள் முதலில் அந்த மக்களிடம் இறை நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தினார்கள். அதனை தனது வாழ்க்கையிலும் செயல்படுத்தினார்கள் என்ற உதாரணதைக்காட்டி நாம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை காட்டிவிடுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் தோல்வி மனப்பான்மையாலும், வேற்றுக் கொள்கைகளின் தாக்கத்தாலும் இஸ்லாத்தின் சிறப்பான தன்மைகளை மறந்துவிட்டு செயல்படுவது தவறானதாகவும், ஆபத்தானதாகவும் அமையும் என நம்மை எச்சரிக்கிறது இந்நூல்.
மொழி, இனம், குலம், நிறம், தேசியம் என்ற குறுகிய வாதங்களுக்கு அப்பார்சென்று மனிதர்களை மனிதர்களாக ஒன்றிணைக்கும் ஒரே கொள்கையாக இஸ்லாமே இருக்கிறது என்று ஆணித்தரமாக கூறுகிறது.
முஸ்லிம் சமூகம் இணைவைப்பின் அதாவது நிராகரிப்பின் எல்லைகளைக்கூட எட்டிப்பாத்திடக் கூடாது. இஸ்லாம்தான் அனைத்து முஸ்லிம்களின் லட்சியமாக இருத்தல் வேண்டும் என்று விரும்புகிறது.
மேலும் ஜிஹாத், இஸ்லாத்தின் வாழ்க்கை நெறி, இஸ்லாமிய கோட்பாடுகள், இஸ்லாமிய கலாச்சாரம், முஸ்லிமின் தேசியமும், இறை நம்பிக்கையும், அனைத்து துறைகளிலும் தலைகீழ் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வை சொல்கிறது இந்நூல்.
இஸ்லாமிய மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் "இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்".
- வி.களத்தூர் சனா பாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக