பிரித்தானிய நடிகரான ஆலன் ரிக்மேன் தனது 69 வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பல ஆங்கில படங்களில் நடித்த இவரை பலருக்கு ப்ரோபஸர் ஸ்னேப் என்றே தெரியும். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரம் தான் இந்த ஸ்னேப். ரிக்மேன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் முன்னேற்ற அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பாலஸ்தீன உரிமைகளுக்காக தனது ஆதரவினை தெரிவித்து வந்தவர்.
2005 ஆம் ஆண்டு “My Name is Rachel Corrie” என்ற நாடகத்தை இயக்கியவர். இந்த நாடகம் இஸ்ரேலிய படையினாரால் கொல்லப்பட்ட 23 வயது அமெரிக்க பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. வாசிங்டனின் ஒலிம்பியாவில் உள்ள எவர்கிரீன் ஸ்டேட் காலேஜ் மாணவியான ரேச்சல், பாலஸ்தீன ஆதரவு அமைப்பான சர்வதேச ஒற்றுமை அமைப்பு மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதிக்கு 2003 இல் சென்றிருந்தார். அப்போது பாலஸ்தீனிய வீடுகளை இஸ்ரேல் ராணுவத்தினர் சட்டவிரோதமாக இடிப்பதை எதிர்த்து போராடிய ரேச்சல் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் புல் டோசர் ஏற்றி கொலை செய்தனர்.
இந்த ரேச்சலை பற்றிய நாடகத்தை தான் ஆலன் ரிக்மேன் எழுதி இயக்கியிருந்தார். இங்கிலாந்தில் வெற்றிகரமாக ஓடிய இவரது நாடகம் ரேச்சல் ஒரு அமெரிக்கர் என்ற போதிலும் அமெரிக்காவில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்திவரும் இரேலிய ஆதரவு யூத குழுவினர் இந்த நாடகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆலன் ரிக்மேனின் மறைவிற்கு ரேச்சல் கோரியின் குடும்பம் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது “நேற்று நாங்கள் கண்விழிக்கும்போது எங்களது நண்பரான ஆலன் ரிக்மேன் புற்றுநோயால் மரணித்ததை அறிந்து மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானோம். ரிக்மேன் ரேச்சலை ஒரு முறை கூட சந்தித்திருக்கவில்லை என்றாலும் எங்களது மகள் / சகோதரியான ரேச்சலுக்கு சிறந்த நண்பராவர். ” My Name is Rachel Corrie” என்ற நாடகத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியது அவர்தான்.” என்று கூறியுள்ளனர். மேலும் அவர் எங்கள் குடும்பத்தினராலும் மற்றவர்களாலும் மிகவும் விரும்பப்படுபவர் என்றும் கூறியுள்ளனர்.
ஹாரி பாட்டர் கதைகளில் Half Blood Prince என்று அழைக்கப்படும் இவர் தன் செயலிலும் இளவரசர் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக