35 வயது நிரம்பிய முஹம்மது அப்சல் பெங்களூர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் ப்ராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். அவரின் வீட்டு கதவு இரவு மூன்று மணியளவில் பலமாக தட்டப்பட்டது. என்னவென்று பார்க்க கதவை திறந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. தங்களை டெல்லி போலீஸ் என்று கூறிய ஒரு கும்பல் வீட்டினுள் புகுந்தது. தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் காண்பிக்காத அவர்கள் அங்கிருந்தவர்கள் முன் துப்பாக்கியை நீட்டினர்.
கடந்த வெள்ளியன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் புஷ்ரா தபசுமின் கணவர் முஹம்மது அப்சலும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை கைது செய்தவர்களும் கைது செய்த விதமும் தனக்கு பெரும் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்சலின் மனைவி புஷ்ரா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளி அதிகாலை 3 மணியளவில் எங்கள் வீட்டின் கதவை யாரோ மிக பலமாக தட்டும் சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க என் கணவர் சென்றார். கதவை திறந்த அவரை கீழே தள்ளி ஒரு கும்பல் எங்கள் வீட்டினுள் நுழைந்தது. அவர்கள் யார் என்று கேட்டதற்கு தங்களை டில்லி காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர்கள் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையோ அல்லது அடையாள அட்டையையோ காண்பிக்கவில்லை. மாறாக எங்கள் முன் துப்பாக்கியை நீட்டினர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், ” என் கணவரின் தலையில் துப்பாக்கியை வைத்து ஆயுதங்கள் எங்கே என்று கேட்டனர். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றே எங்களுக்கு புரியவில்லை. பின்னர் வீட்டு முழுவதும் சோதனை செய்த அவர்கள் என் கணவரின் மடிக்கணினி அலைபேசி ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். எனது கணவர் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர். நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பவரும் கூட. அவர் தன் வாழ்நாளில் எந்த ஒரு சமூக விரோத செயலிலும் ஈடுபட்டிருக்க வில்லை” என்றும் தெரிவித்தார்.
தங்கள் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை என்று அறிந்த பின்னர் என்னிடம் வெற்று காகிதத்தை நீட்டி அதில் கையெழுத்திட வற்புறுத்தினர். என் வீட்டில் அவர் செய்த சோதனையில் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று எழுத்து மூலம் தாருங்கள் நான் கையெழுத்து இடுகிறேன் என்று கூறியும் என்னை வெற்று காகிதத்தில் கையெழுத்திட வைத்தனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தன் கணவரின் மடிக்கணினி மற்றும் அலைபேசியுடன் அவரின் கார் மற்றும் பைக்கையும் காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அதில் அவர்களே ஏதாவது வைத்துவிட்டு தன் கணவர் மேல் குற்றம் சுமத்திவிடுவார்களோ என்று தான் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக