பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியரான சந்தீப் பாண்டே பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐ.ஐ.டி யில் இரண்டரை வருடங்களாக வருகை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் தன்னை
பல்கலைக்கழகத்தை விட்டு விரட்ட முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தன்னை நச்சலைட் எனவும் சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர் எனவும் தன் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றும் தன்னை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றி விடவேண்டும் என்று முன்பே அவர்கள் முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 6 ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டதாக முறையான தகவல் அவரை வந்து சேர்ந்தது எனவும் ஆனால் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தன் மீது வைக்கப்படும் எந்த ஒரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்று கூறிய அவர் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தன்னை நீக்குவதற்கான எந்த காரணங்களும் முறையாக குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார். அப்படி அவர்கள் குறிப்பிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் தற்கொலை, நாட்டு மக்களின் வறுமை நிலை பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற தலைப்புகள் குறித்து தான் பல்கலைக்கழகத்தில் விவாதிப்பதாலும் தங்கள் உரிமைக்குபோராடும் சிறு விவசாயிகளுடன் சேர்ந்து போராடுவதாலும் நில அபகரிப்பு சட்டத்தை எதிர்த்ததாலும் தன்னை பல்கலைக்கழகத்தில்இருந்து அகற்ற நினைகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
தனது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மாணவர்களிடம் வலதுசாரி சிந்தனைகளை விதைப்பதில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் தான் இல்லாவிட்டால் மாணவர்கள் மத்தியில் தங்களுக்கு அதிக ஆதரவு திரட்ட முடியும் என்பதாலும் இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நம் கல்விக்கூடங்கள் மீது ஒருவித கருத்தியல் போர் நடத்தப்படுகிறது என்று கூறிய அவர் ஆர்.எஸ்.எஸ். தங்கள் கொள்கைகளை மாணவர்களிடம் பரப்ப அனைத்து கல்விக்கூடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது என்று கூறியுள்ளார். தங்கள் கொள்கைகளை பரப்ப கொஞ்சம் கூட தகுதியற்ற நபர்கள் உயர்பதவிகளில் அமர்த்தப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் கல்வியின் தரம் இன்று மிக மோசமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக