Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 12 ஜனவரி, 2016

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – அனிஷா யூனுஸ்


கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – அனிஷா யூனுஸ்

சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.

உலகமே கொண்டாடும் கணித மேதை இராமானுஜம் கூட தன்னுடைய பள்ளிப்படிப்பு முதல் இளங்கலை வரை மற்ற எல்லா படிப்புக்களிலும் தோல்வியை மட்டுமே கண்டவர். இதனைப் படிக்கும்போது இன்றைக்கு ஆங்கில வழிக்கல்வி போல, அன்றைக்கிருந்த தெலுங்கு வழிக்கல்விதான் இதற்குக் காரணமாக இருந்திருக்குமோ என்னும் கேள்வி எழாமல் இல்லை. கேம்பிரிட்ஜில் ஆய்வுக்கல்வியின் போதும் ஜி.எச்.ஹார்டி அவருக்கு நண்பனாக இருந்ததை விட ஆசானாக அமைந்ததே ராமானுஜத்தை மெருகேற்ற உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவனித்துப் பாருங்கள், ஜி.எச்.ஹார்டிக்கு எந்த வயதிலும் தாய்மொழிவழி கற்பதில் தடை இருந்ததில்லை. நம் தாய்மொழியைப் பற்றிய நம் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் அலசிப் பாருங்கள்.
ஆங்கிலவழிக்கல்வி சாதகமானதா பாதகமானதா எனப் பல கோணங்களில் ஆராயும் இந்த ஆவணம், ஒரு பக்கத்தையும் புரட்டாமல் விடவில்லை. உதாரணத்திற்கு, 1947இல் சுதந்திர இந்தியாவின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தாராசந்த் குழுவின் பரிந்துரையும் சரி, 1948இல் பல்கலைக்கழக கல்வியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணனின் குழுவின் பரிந்துரையும் சரி உடனடியாக இந்தியாவில் கல்வியனைத்தும் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தின, அதன் பின் கடந்த 2005 வரைக்கும் நிறுவப்பட்ட, பல சமயங்களில் பன்னாட்டு கல்வியாளர்களும் உடனிருந்து ஆய்வு செய்த அத்தனை குழுக்களும் உடனடியாக அமுல் செய்ய வேண்டிய பணி என முழுமூச்சாய் பரிந்துரைத்தது தாய்மொழி வழிக்கல்வியைத்தான் எனும்போது மனம் பதறத்தான் செய்கின்றது. 65 வருடங்கள் தாண்டிய பின்னும், இத்தனை அறிக்கைகள் கிடைத்த பின்னும் ஏன் மத்திய மாநில அரசுகள் ஆங்கிலவழிக்கல்வியையே நம் மேல் திணிக்கின்றன என்பதற்கான அரசியலையும் அலசிச் செல்கிறது இந்த ஆவணப்படம். பதிலே இல்லை.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் மஹ்ராஷ்டிரத்தில் சிவில் தேர்வுகளில் கூட உருது மொழியிலும் ஹிந்தி மொழியிலும் கையெழுத்துப் பிரதியாக பதிப்பிக்கப்பட்ட கேள்வித்தாள்களும் அதிலிருந்த பிரச்சினைகளும், அதே தேர்வுகளின் போது ஆங்கில கேள்வித்தாள்கள் மட்டும் கணிணியில் அச்சாகி வந்ததையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். இவையெல்லாம் ஏனோ பத்தோடு பதினொன்று எனக் கடந்து செல்ல இயல்வதில்லை. இங்கே ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பதை யாரும் தடை சொல்லவில்லை, ஆனால் ஆங்கில மொழியே சரியாக இன்னும் உள்வாங்காத சமூகத்தில் ஆங்கில மொழி வாயிலாகவே இன்ன பிற பாடங்களையும் கற்கவேண்டும் என்னும் திணிப்பின் பின்னே இருக்கும் புதிய மனு தர்மக் கொள்கையைத்தான் எதிர்க்க வேண்டி உள்ளது.எல்லாவற்றிலுமே அரசியல், வர்ணாசிரமம் எனக் குறை கண்டு பிடிப்பதே இப்போது வழக்கமாகிப் போயுள்ளது என்பவர்கள் அரசுப்பள்ளிகளில் படிக்கும் முற்படுத்தப்பட்ட சமூகக்குழந்தைகளையோ, தனியார் பள்ளிகளில் படிக்கும் பாம்பாட்டியின் குழந்தைகளையோ ஒரு படம் எடுத்து பகிர்ந்திடுங்கள் பார்ப்போம்…
கருவில் இருக்கும்போதும், வளர்ந்து ஈராண்டுகள் வரையிலும் தமிழ் மொழியையோ அல்லது உருதூ மொழியையோ கேட்டுக் கேட்டு விளங்கி வளரும் பிள்ளைகளுக்கு திடீரென ஒரு புதிய மொழியின் கீழேயே அத்தனை பாடமும் கற்றுத் தேறவேண்டும் என திணிப்பதுதான் பிரச்சினை. அதுவும் ஆங்கிலத்தை வழக்கு மொழியாக உபயோகப் படுத்தாத சூழலில் கற்பிக்கும் ஆசிரியரே திணறும் மொழியில் குழந்தைகள் எப்படி உள்வாங்க முடியும். தற்போதைய காலகட்டத்தில் நகரில் வாழும் சில பெற்றோரால் வீட்டிலும் சரளமாக ஆங்கிலம் பேச இயலும்… ஆனால் தமிழகத்தில் அவ்வாறு எத்தனை குடும்பங்களில் இது சாத்தியம்?? கடந்த வருடம் மட்டும் ஆறாயிரத்தி சொச்சம் பள்ளிகளில் ஆங்கில வழி பயிற்றுவித்தல் கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் பயிற்றுவிக்கும் எத்தனை ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தாய்மொழி போல் சரளமாக வரும் சொல்லுங்கள் பார்ப்போம்… தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 17000 பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகள் என ஆய்வு சொல்கின்றது, எனில் ஒரு தலைமையாசிரியரும் இன்னுமொரு பாட ஆசிரியரும் மட்டுமே உள்ள பள்ளிக் கூடங்களில் அந்த இருவருமே ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்தவர்கள்தான் என யாரால் சான்றிதழ் தர இயலும்…? அரசுப் பள்ளிகளை விடுங்கள், மெட்ரோ நகரமாகிய சென்னையிலேயே தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமை இன்றி தடுமாறும் அவலத்தை அனுபவத்தில் பல முறை கண்டுள்ளேன் நான்.
இதே போன்ற வழிமுறையினைப் பின்பற்றி கர்நாடக அரசு வருடத்திற்கு 50 முதல் 150 எண்ணிக்கையிலான அரசுப்பள்ளிக்கூடங்களின் கதவுகளை பூட்ட ஆரம்பித்து இன்று வரை 2557 பள்ளிகளுக்கும் மேல் பூட்டி விட்டது. இதில் நூற்றுக்கணக்கான தொடக்கப்பள்ளிகளும் அடக்கம். ஆங்கில மாயையை உருவாக்குவதும் அரசு. அரசுப் பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்களுக்கு சம்பளப் பணம் முதல் எல்லா விடயங்களிலும் சலிப்பையும் வெறுப்பையுமே தரும் அரசு, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தனியார் பள்ளிகளே சிறந்தது என மக்களை அந்தப் பாதையிலேயே முடுக்கிவிடும் அரசு, பின் நஷ்டக்கணக்கு காட்டியே அரசுப் பள்ளிகளை மூடுவது எதற்காக??? சிந்தியுங்கள்…
அரசியலையும், வரலாற்றையுமே விட்டுவிடுங்கள். சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கே எளிதாக, பூரணமாக, வலது கைப் பழக்கம் போல வராத ஒரு மொழியை வைத்து இன்னொரு மொழியையோ, அறிவியலையோ, கணிதத்தையோ கற்றுத்தரச் சொல்வது என்பது எத்தனை பெரிய மடத்தனம். என்ன செய்ய இருக்கின்றோம். எப்பொழுது இந்தப் பிரச்சினைகளையெல்லாம் புரிந்து தெளியப் போகிறோம். உண்மையில் என்றைக்கு அகலும் இந்த மாயை.
பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை படிக்கும் குழந்தைகளைக் கொண்ட ஒவ்வொரு பெற்றோரும் காண வேண்டிய தொகுப்பு இது. ச.சீ. இராசகோபாலன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, நளங்கிள்ளி போன்ற பல கல்வியாளர்களின் கருத்துக்களும், தெளிவான கருத்துக்களும் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் படைப்பில் கேட்கபட்டிருக்கும் அதே கேள்விதான் முன் நிற்கிறது.
காலுக்கேற்ற செருப்பா, செருப்புக்கேற்ற காலா… எதைத் தேர்வு செய்யப் போகிறோம்????
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுந்தகடை 9994262666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
- அனிஷா யூனுஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக