அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதுக்கு என்ற மடமைத்தனத்தை தமது கல்வி போராட்டத்தால் உடைத்தெறிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தின் சிறு தொகுப்பே இது.
இராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் இரண்டு சகோதரர்களுடன் பிறந்த சித்தி என்னும் பெயரை கொண்ட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இளம் பெண் தமது சிறு பிராயத்திலேயே படிப்பிலும்,விளையாட்டிலும் படுசுட்டியாக திகழ்ந்தார்.
இவரது அறிவாற்றலை கண்டு வியந்த பெற்றோர்கள்,இவரை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்று முடிவு செய்து தமது பெண்ணை ஊக்குவித்தனர்.இளங்கலை BA பட்டம் முடித்த நிலையில் திடீரென இவருக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள்.
திருமணத்தின் விளைவாக தானும் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார் இந்த இளம்பெண்.
மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் திடீரென சமீபத்திய ஹுத்,ஹுத் புயலை போல் மிகப்பெரிய சூறாவளி வீசியது.நல்லவனை போல் வேஷமிட்ட கயவனை நம்பி தமது பெண்ணை கொடுத்த பெற்றோர் கதி,கலங்கி நின்றனர்.
விதி யாரை விட்டது?கைக்குழந்தையுடன் விவாகரத்து பெற்றார் இந்த இளம்பெண்.
சிறுவயதிலேயே தமது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே?என்று மனமுடையாமல் தாம் விட்ட கல்வியை தொடர வேண்டுமென்ற லட்சியத்தில் உறுதியாய் நின்றார்.
இவரது தொடர் கல்வி லட்சியத்தை பெற்றோரை தவிர சுற்றத்தார் யாரும் ரசிக்கவில்லை.மாறாக கேலியும்,கிண்டலுமே செய்தனர்.
இருந்தாலும் தமது மகளின் லட்சியம் வெற்றிபெற வேண்டுமென்று விரும்பிய பெற்றோர் பேத்தியை தங்களின் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டு மகளின் உயர் படிப்புக்கு பச்சை கொடி காட்டினர்.
பல்வேறு தடைகளையும்,இடையூறுகளையும் தகர்த்தெறிந்து நீண்ட காலம் படித்துக்கொண்டே இருந்த இந்த இளம்பெண் தமது மகள் தற்போது 10ம் வகுப்பு படிக்கும் நிலையிலும் தனது படிப்பை தொடர்கிறார்…
சரி இந்த பெண் என்னதான் படித்துள்ளார் என்று விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்தான் இது.
MA…M.Phil….B.Ed….M.B.A முடித்து விட்டு தற்போது அரசு உதவி பெறும் பெண்கள் மேனிலைப்பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணி புரிந்து கொண்டே..Phd படித்துக்கொண்டிரு க்கிறார்.
கேலியும்,கிண்டலும் செய்த சுற்றத்தார் இந்த சாதனை பெண்ணை கண்டு வாய்பிளந்து நிற்கின்றனர்.
இன்று வரை தமது மகளின் லட்சிய பயணத்தில் துணை நிற்கும் பெற்றோரை கண்டு நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
34 வயதே நிரம்பிய இந்த இளம்பெண் இன்னும் நிறைய சாதனை புரிய நாமும் வாழ்த்துவோம்.
நமது வாழ்த்துக்கள் இந்த சாதனை பெண்ணுக்கு மட்டுமல்ல,அவரது பெற்றோருக்கும் சேர்த்து தான்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக