உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாக உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.
உணவு தானியம், எண்ணெய் பயிர்கள், பால், சர்க்கரை, இறைச்சி ஆகியவற்றின் சராசரி உலக விலைகளைக் கொண்டு மாதந்தோறும் உணவு விலை குறியீட்டினை (Index) ஐ.நாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கணக்கிடுகிறது.
அந்தக் கணக்கின்படி 2014 செப்டம்பரில் உணவு விலை குறியீடு, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பரில் இருந்த விலைகளோடு ஒப்பிடுகையில் உணவுப் பொருட்கள் 6 சதவீதம் விலை குறைந்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் உணவுப் பொருட்களின் விலைகள் ஆறு மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருவதையும் இது காட்டுகிறது.
1990 களின் பிந்தைய காலப்பகுதியில் நடந்ததற்குப் பின்னர், இவ்வாறாக தொடர்ந்து ஆறு மாதங்கள் உணவுப் பொருட்கள் விலை குறைந்து வந்துள்ளது என்பது இதுவே முதல் முறை ஆகும்.
உலக அளவில் விவசாய உற்பத்தியும் மற்றும் பால் உற்பத்தியும் கூடியிருப்பது, ஏற்றுமதி சந்தையில் கிராக்கி குறைந்திருப்பது போன்றவை இதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.
உலக சந்தையில் விலை தொடர்ந்து குறைந்துவந்தாலும், இந்தியாவில் மக்கள் வாங்கக்கூடிய இடங்களில் உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என இடதுசாரி பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உணவு விலை குறைந்தாலும் இந்தியாவில் நுகர்வோருக்கு விலை குறையாமல் இருப்பதற்கு அரசாங்கத்தின் கொள்கைகளே துணை போவதும் ஒரு காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
செல்வந்தர்களிடம் இருந்து வரி வசூலித்து நிதி திரட்டாமல், ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய மானியங்களைக் குறைக்கின்ற ஒரு கொள்கையை இந்திய அரசு கடைப்பிடித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
நன்றி நியூஇந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக