அட்டஸ்டேஷன் எனப்படும் சான்றளிப்பு நடைமுறையைத் தமிழக அரசு கைவிட்டுள்ளது. அசல் சான்றிதழ்களைத் திருத்தி, போலியாக நகல்களை உருவாக்குவதைத் தடுக்கும் விதமாக, நகல்களில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளிடம் கையொப்பம் பெறும் நடைமுறை இருந்து வந்தது. இதன் மூலம், அதிகாரிகளுக்கும் வேலைப் பளு அதிகரித்தது. விண்ணப்பதாரர்களும் அலைச்சல் ஏற்பட்டது. இதிலும் அதிகாரிகள் சிலர், ஒரு நகலில் கையொப்பம் இட, இவ்வளவு தர வேண்டும் என்று நிர்பந்தித்ததும் உண்டு.
என்னதான், இவர்கள் அசல் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்த்து, கையொப்பம் இட்டாலும், சான்றிதழ் சரி பார்ப்பு என்ற ஒன்று தனியாக நடந்து வந்தது. எனவே, உண்மையில் இந்த சான்றளிப்பினால் பெரிய பயன் எதுவும் இல்லை.
இந்நிலையில், இந்த நடைமுறையைத் தமிழக அரசு மாற்றியுள்ளது. அரசுத் துறை அதிகாரிகள் இனி ஆவணங்களுக்குச் சான்றளிக்க வேண்டாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுக்குப் பதிலாகச் சுயசான்று ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை ஒன்றைக் கொண்டு வர, மத்திய அரசு உத்தேசித்து இருப்பதன் அடிப்படையில் தமிழக அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது. இனி விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களில் அவர்களே கையொப்பம் இட்டுச் சமர்ப்பிக்கலாம்.
சுயசான்று ஆவணங்களுடன் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசின் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தின்போது, அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக