பெரம்பலூர்: அழிந்து வரும் வரலாற்று பொக்கிஷமான ரஞ்சன்குடிக்கோட்டையை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெரம்பலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து, 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது மங்கலமேடு கிராமத்தில், வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடிக்கோட்டை உள்ளது. கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இக்கோட்டை, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோட்டையை பற்றிய முழு வரலாறு, இதுவரை கண்டறியப்படவில்லை. ஜாகீர்தாரர்கள் இக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததும், சந்தாசாகிப் என்ற மன்னன் இங்கு ஆட்சி செய்ததற்கான வரலாற்று தகவல்கள் உள்ளன.
பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோட்டையின் வெளிப்புற சுவர்கள், வேலூர் கோட்டை போல் காணப்படுகிறது. மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோட்டையை சுற்றி, பகை நாட்டினர் ஊடுருவாமல் இருக்க, அகலமான அகழி அமைக்கப்பட்டுள்ளது. 44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டையின் மேல்புறத்தோற்றம் செஞ்சிக்கோட்டையை போல் கம்பீரமாக உள்ளது.
மதில் சுவரின், நான்கு புறங்களிலும் இடையிடையே பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் மீன் சின்னங்களும், போர் வாள்களும் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வழிபாட்டு மண்டப தூண்களில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற ஓவியங்கள், வெவ்வேறு விதமான கலை சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேல்புறத்தில், ராணியின் அந்தப்புரத்தை ஒட்டி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்புற கோட்டையில் ஆயுதக்கிடங்கு, போர் காலங்களில் தப்பி செல்ல சுரங்கப்பாதை போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் உட்புறம் இஸ்லாமியர்கள் வழிபாட்டு மசூதி ஒன்றும், அதன் அருகிலேயே சிவன், விநாயகர் உள்ளிட்ட இந்து கடவுள்களின் சிலைகளும் உள்ளது. கோட்டையிலிருந்து ஏராளமான பழங்கால வரலாற்று நாணயங்களும், பீரங்கி குண்டுகளும் அக்கால மன்னர்களின் பயன்பாட்டு பொருள்களும் கிடைக்கபெற்று, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பழம் பெருமை வாய்ந்த இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் மத்திய, மாநில அரசுகள் இந்த சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த அக்கரை கொள்ளவில்லை, என்பது வரலாற்று ஆர்வலர்களின் குற்றச்சசாட்டு.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சிறந்த வரலாற்று பொக்கிஷமாக தோன்றும் இக்கோட்டை, போதிய பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. எனவே, அழிந்து வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே பெரம்பலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக