புற்று, நீரிழிவு, இருதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கான 108 உயிர் காக்கும் மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு முறையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குரைஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விரைவில் இதனை விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியாவில் 4.1 கோடி நீரிழிவு நோயாளிகளும், 5.7 கோடி இருதய நோயாளிகளும், 22 லட்சம் காச நோயாளிகளும், 11 லட்சம் புற்றுநோயாளிகளும், 25 லட்சம் எச்.ஐ.வி. நோயாளிகளும், 6 கோடி ரத்த அழுத்த நோயாளிகளும் உள்ளனர்.
இந்நிலையில், நீரிழிவு, இருதநோய் உள்ளிட்ட நோய்களை குணமாக்கும் 108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது.
மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்கினால், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், லாபம் ஈட்டுவதற்காக, தங்கள் விருப்பம்போல் மருந்துகளின் விலையைக் கடுமையாக உயர்த்தும். அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
ஏற்கெனவே, நோயால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள லட்சக்கணக்கான நோயாளிகள், அரசின் இந்த முடிவால், மற்றோர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இதனால், இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி நியூ இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக