மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பதவியேற்ற நாள் முதல் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முக்கியத்துவம் பெறுவதும், அன்னிய முதலீடு தலைப்புச் செய்தியாவதும் வழக்கமாகிவிட்டன.
அமெரிக்க பயணத்திற்கு முன்பாக இந்தூரில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் கூடிய உச்சி மாநாட்டில் நாட்டின் வளங்களை அன்னிய நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
‘மேக் இன் இந்தியா’ - (இந்தியாவில் தயாரிப்போம்!) இந்த கோஷம் நல்ல சிந்தனையுடன் கூடிய திட்டமாக நமக்கு தெரியலாம். ஆனால் இது முழுக்க முழுக்க இந்திய தொழில்களை நலிவடையச் செய்து, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நாட்டின் வளங்களை அள்ளிச் செல்ல வழி வகுக்கும் திட்டமே ஆகும். சர்வதேச முதலீடுகள் என்ற பெயரில் நாட்டின் வளங்களை (எஞ்சியிருக்கின்ற) சுரண்டிக்கொள்ள அனுமதி அளிப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம்.
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைப்பதால் உற்பத்திப் பெருக்கமும், வேலைவாய்ப்பும் ஏற்படும் என்ற மோடி கூற்றின் நம்பகத் தன்மை, சமீபத்தில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலை மூடல் அறிவிப்பின் மூலம் வெளிப்பட்டது.
வெறும் 600 கோடி முதலீட்டுடன் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகை மூலம் ஆயிரக்கணக்கான கோடி லாபம் சம்பாதித்த நோக்கியா, அரசுக்கு செலுத்த வேண்டிய 4000 கோடி வரி பாக்கியை கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, இவ்வாறு மிரட்டினால் கடையை காலி செய்வோம் என பதில் மிரட்டல் விடுத்து தற்போது ஆலையை மூடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் யாருக்கு லாபம்? நாட்டின் வளர்ச்சிக்கு நோக்கியா எந்த அளவுக்கு உதவியது? வெறும் ஏற்றுமதிக்காக மட்டுமே இந்தியாவில் ஆலையை தொடங்கிய நோக்கியா பின்னர், விற்பனை சந்தையாகவும் மாற்றி, எந்த வரியையும் கட்டாமல் தண்ணி காட்டிவிட்டு செல்கிறது.
இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். காரணம் சிறப்பு பொருளாதார மணடலத்தில் இந்திய தொழிலாளர் சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்ற விதிவிலக்கே காரணம்.
இந்நிலையில் அன்னிய, கார்ப்பரேட் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர் உரிமைகளை முடக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்திருத்தம் கொண்டுவரும் முயற்சியை சீர்த்திருத்தம் என்ற பெயரில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தொழிலாளர்களை நசுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களை இணையதளம் தொடக்கம், வெற்றுக் கோஷங்கள் (வேலையே வெல்லும்) மூலம் ஏமாற்றும் போக்கினை கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஆளும் பாஜக அரசு மேற்க்கொண்டு வருகிறது.
தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களான அப்ரண்டீஸ் தொழிற் பழகுநர் சட்டம் 1961, தொழிற்சாலைச் சட்டம் 1948 மற்றும் தொழிலாளர் சட்டம் 1988 ஆகியவற்றில் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அன்னிய நிறுவனங்களும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், சில சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளன.
இந்த திருத்தங்களின்படி, தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் விதத்தில், கூடுதல் பணி நேரமான வாரத்தில் 50 மணி நேரத்தில் இருந்து 100 மணி நேரமாக உயர்த்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் வகை செய்கிறது. அதாவது தினமும் 8 மணி நேரம் வேலையை, 12-15 மணி நேர கட்டாய பணியாக வகை செய்கிறது.
தொழிலாளர் சட்டம் 1988ல், 90 நாட்கள் வேலை செய்தால் தொழிலாளர் சட்டப்படிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இருப்பதை, 240 நாட்களாக உயர்த்தியும், 19 தொழிலாளர்கள் வேலை செய்தாலே தொழிற்சாலைச் சட்டமும், தொழிலாளர் சட்டமும் செல்லுபடி ஆகும் என்பதை 40 தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்களே தொழிற்சாலை சட்டங்கள் கடைபிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்று மோடி அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அதிகாரிகளிடம் நிலவும் லஞ்சம் காரணமாக தொழிற்சாலை சட்ட விதிகள் முறையாக செயல்படுவதில்லை என்பதே உண்மை நிலை.
பல்வேறு முதன்மைத் தொழிற்சாலைகளில் கூட தொழிற்சாலை சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாததால், விபத்துகளில் தொழிலாளர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆய்வு முறையைக் கூட தொழிற்சாலை ஆய்வாளர் ஆய்வு ரத்து அறிவிப்பின் மூலம் மோடி அரசு தடுக்க நினைக்கிறது.
அதைப்போன்று அப்ரண்டீஸ்களுக்கு (பழகுநர்), தொழிற்பயிற்சி அளிப்பது தொழிற்சாலைகளுக்கு சட்டப்படிக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, காண்டிராக்ட் முறையை நிரந்தரமாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைவரையும் அப்ரண்டீஸ்களாக்கி தொழிலாளிகளாக நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை.
ஏற்கனவே சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழிற்சாலை சட்டம், தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு அளித்ததன் விளைவை, ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை தொழிலாளர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மேக் இன் இந்தியா என்ற திரைக்குப் பின்னால், இவ்வளவு படுமோசமான தொழிலாளர் உழைப்பை குடிக்கும் மோடியின் அறிவிப்புகள் அப்பட்டமான, சர்வாதிகார தொழிலாளர் உரிமை பறிப்புகளாகும்.
பெரும்பான்மை என்ற மமதையில் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்போது, தொழிலாளர்களுக்கு எதிரான இத்திருத்தங்களை எதிர்த்து, உழைக்கும் மக்களும் மனித நேயர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.
களந்தை ரஹீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக