Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 செப்டம்பர், 2015

பெருகும் கல்வி வியாபாரம் ...

ஒரு சமுதாயம் எவ்வாறு உருவாகிறது? ஒரு நாடு எவ்வாறு உருவாக்கப்படுகிறது? ஒரு தேசத்தில் மக்களுடைய மன நிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒரு வளர்கின்ற நாட்டில் புதிய தலைமுறைகளை எப்படி வளர்த்தெடுக்கப்படுடுகிறது? போன்றவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இன்று வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடுகள் என்று நாம் பெருமையாக பேசுகிற நாடுகள், கல்வியை முதன்மைப் படுத்தியதால்தான் வளர்ந்தன என்று சொல்வதற்க்கு பெரிய அளவில் அறிவோ, திறமையோ அவசியமில்லை.

நம் தேசம் வளர்ந்திருக்கிறதா? குறிப்பாக சுதந்திரம் பெற்ற பிறகு வளர்ந்திருக்கின்றதா என்று கேட்டால் நிச்சயமாக வளர்ந்திருக்கின்றது. இதில் தவறானது என்றோ, மிகையானக் கூற்று என்றோ சொல்ல முடியாது.
இந்தியா நிச்சயமாக வளர்ந்துள்ளது அதுவும் அசுர வேகத்தில் ஆம்! நம் தேசத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் நூறு கோடி மக்களுக்கு மேல் கைபேசியை வைத்திருக்கிறார்கள் என்பது வளர்ச்சில்லாமல் வேறென்ன?
நாளுக்கு நாள் அபரிமிதமான முறையில் பெருகிவருவது இந்த கைபேசி இது தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சியா? இந்த வளர்ச்சி தான் அவசியமானதா?
ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சி என்பது முன்னேற்றம் என்பது கல்வியில், அறிவு வளர்ச்சியில் மையப்படுத்தி ஒரு தேசம் வளர்ச்சி பெறுமானால் அது தான் தேசத்தின் உண்மையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றமாகும்.
நமது தேசத்தில், நமது கல்வி முறையில், நமது கல்விக் கூடங்களின், தாளாளர்களும் உண்மையான கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் எந்த விதத்திலாவது உதவுகிறார்களா என்றால் அது கேள்வி குறியே தவிர வேறில்லை. இவற்றை நம் நாட்டில் வளரவிடாமல் செய்பவர்கள் சமூகத்திற்க்கு எதிரானவர்கள்தானே?
நமது நாட்டிலுள்ள கல்வி நிலையங்களின் தாளாளர்கள் உண்மையில் சமூக குற்றவாளிகள். இவர்களை நம்பி தான் இன்று பெற்றோர்கள் தங்தகளுடைய குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். கல்வி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறவர்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகள் எந்த விதமாக வளர்வார்கள், எவ்வாறு கல்வியை கற்ப்பார்கள்?
மதிப்பெண்களை மட்டுமே முதன்மையாக மதிக்கப்படும் கல்வி முறை, சரியான ஒரு கல்வி முறைதானா என்ற கேள்வி ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் எழுகிறது.
மதிப்பெண்கள்தான் முதன்மை என்ற காரணத்தால் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பணத்தை முதலீடு செய்து மேல் தட்டு மக்களை ஈர்த்து வெகு வேகமாக வளர்கின்றன.
தனியார் கல்வி நிலையங்களின் பெருக்கத்தால் அரசுப் பள்ளிகளின் பயணங்கள் அபாயமான கேள்விக்குறியாக உள்ளது.
இன்னும் இருபது ஆண்டு காலத்திற்க்குள் அரசு இலவசமாக கல்வி தந்ததா என்று அரசு நடத்தும் பொது தேர்வில் ஒரு கேள்வியாகவும் எழலாம் அல்லது இதை ஒரு செய்தியாகவும் மாணவர்கள் படிக்க நேரிடலாம். இதற்க்கு காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் மாய்மாலங்கள் இவற்றிற்க்கு நூதனமான முறையில் ஆதரித்து வரும் மோடி அரசும், அம்மா அரசும் தான்.
இவர்கள் செய்யும் செயல்கள் தான் மக்களை நம்பசெய்கிறது. இந்த நம்பிக்கை தான் இந்த ஏமாறுகிற புத்திதான் சமூகக்குற்றவாளிகளான கல்வித் திட்டத்திற்க்கு முரணாகவும் இவை பாடத்திட்டத்தை போதிக்கின்றன.
பொதுவாகவே தனியார் கல்விக் கூடங்கள் அமைதியாக இரு, ஒத்துப்போ, கீழ்ப்படி, எதிர்த்து பேசாதே, போராடாதே என்ற சிந்தையை தினிக்கும் முறையில்தான் மாணவர்களை உருவாக்குகின்றன. இந்த முறை உண்மையில் மனித உரிமை மீறலை எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதற்க்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
தனி மனித ஆளுமையில் கல்வியும், கல்விக் கூடங்களும், ஆசிரியர்களும், எத்தகையதொரு பாதிப்பை நிகழ்த்த முடியும் என்பதை அறியாததால் நேர்ந்த விளைவு இது. தேசத்தில் கல்வியும், கல்விக் கூடங்களும், கல்வியாளரகளும், சரியில்லாதபோது நாளைய தேசமான மாணவர்கள் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்.
1980 -களில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை முதன் முறையாக தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்தபிறகுதான் கல்வி வியாபாரமானது. அந்த வியாபாரம் இன்று பல்கிப் பெருகி மொத்த சமூகத்தையும் சீர்குலைத்து கொண்டுள்ளது.
2008- 09 -ல் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 38000 இடங்கள் காலியாக இருந்தன. எந்த அடிப்படையில் வசதிகள் இல்லாத கல்விக் கூடங்களுக்கு அரசு எப்படி அனுமதியளிக்கிறது என்பதுதான் விநோதம்.
இந்நிலை அமெரிக்காவிலும் நீடிக்கிறது கல்வி வியாபாரத்தால் 2009 ல் ஆண்டு ஒன்றுக்கு 5320 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வருடம் வரை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
கல்வி இன்று பெரும் பணக்காரர்களின் கைகளிலும், அரசியல்வாதிகளின் கைகளிலும் தான் புழங்குகிறது. தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, முதல் மெட்ரிகுலேசன் பள்ளி, பி.எட் கல்லூரி, ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளி வரை 90 சதவிகிதம் அரசியல்வாதிகளுடையதுதான். இன்றைய சூழலில் தொழிற்ச்சாலைகளை தொடங்கி லாபம் ஈட்டுவதை விட பன்மடங்கு அதிகமாக லாபத்தை இதன் மூலம் ஈட்டமுடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
கல்விக் கூடங்கள் என்பது உற்பத்தி செய்கிற இடமாகவுமஸ, பணம் சம்பாதிக்கிற இடமாகவும் இருக்கிற நிலையில் சுய சிந்தனை, ஆளுமை திறன், பண்முகத்தன்மை, அறிவு வளர்ச்சி, உண்மை அரசியல், அறிவு பெருக்கம், இவைகள் அனைத்தும் சாத்தியமற்ற ஒன்றுதான்.
உண்மையில் சமூக குற்றவாளிகள், சமூக விரோதிகள் யாரென்று சிந்திக்க வேண்டும் இந்த தமிழக அரசு.
நூறு ரூபாய் ‘ பிக்பாக்கட் ‘ அடிப்பவன் சமூக குற்றவாளி என்றால் பாடம் நடத்தாத ஆசிரியர்களை, தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காத ஆசிரியர்களை, போதிய வசதிகளை ஏற்படுத்தாத அரசை, சீரிய முறையுல் கல்விக் கூடங்களை மேற்ப்பார்வையிடாத கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகளை பணம் ஈட்டுவதற்க்காக கல்வி நிறுவனங்களை நிறுவும் பணக்காரர்களை , என்ன பெயர் வைத்து அழைப்பது? என்ன விலைக் கொடுத்தாலும் மதிப்பெண் பெறவேண்டும் என்ற எண்ணுகிற பெற்றோர்களுக்கு என்ன பெயர் வைப்பது? சமூகப் பாதுகாவலர்கள் என்றா? படிப்பது தனியாரிடம், வேலை மட்டும் அரசாங்கம் தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிற மனோபாவம் சீரழிந்த மனதின் நிலைப்பாடு அல்லவா? இதற்கெல்லாம் முடிவு தான் என்ன?
தமிழ் சமூகம் கல்வி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கல்வியின் முழு பலனையும் ஒவ்வொரு குழந்தையும் பெறவேண்டும், கல்வி சமச்சீர் முறையில் பரவலாக்கப் படவேண்டும்.பொருள் உற்பத்திக்கும் கல்வி வழங்குவதிலும், பெறுவதிலும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். மேலும் தேசத்தில் கல்வி வியாபாரத்தை விரட்டியடிப்பதில் மாணவர்களின் புரட்சியும், மக்கள் தொடர் போராட்டமும், தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போது தான் தரமான கல்வி எளியவர்களும் பெறமுடியும். கல்வி பெயரால் விளையும் பெருவியாபாரமும் ஒழியும்.
கல்விக் குரலோடு
கீரனூர் ஷாநவாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக