Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 பிப்ரவரி, 2016

தலித்களின் இயற்கைக் கூட்டணி – அ. மார்க்ஸ்

தலித்களின் இயற்கைக் கூட்டணி – அ. மார்க்ஸ்
“தமிழகத்தில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு தலித்தை முதல்வராக்கி இருப்பார்கள்…” என தொல். திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளது (தி இந்து பிப் 2, 2016) மிகவும் சரியானது.
காங்கிரசுக்கு எப்போதும் தலித்களை உள்ளடக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு வேளை அது காந்தியில் தொடங்கி இருக்கலாம். பெரிய அளவில் ஆலயப் பிரவேசத்திலும் தீண்டாமை ஒழிப்பிலும் பிற மேல் சாதியினரை அந்தக் கட்சி அளவிற்கு இறக்கியது யாருமில்லை.
தொண்ணூறுகளில் தென் மாவட்டக் கலவரங்கள் நடைபெற்றபோது தலித்களுக்கு ஆதரவாக கருப்பையா மூப்பனார் மாநாடொன்றைக் கூட்டியது நினைவுக்கு வருகிறது.நிச்சயமாக கருணாநிதிக்கோ இல்லை
ஜெயலலிதாவுக்கோ இல்லை தமிழ்த் தேசியர்களுக்கோ அப்படி ஒரு கலவர காலகட்டத்தில் தங்களை தலித்களோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் தைரியம் கிடையவே கிடையாது.
தென்மாவட்டக் கலவரம் தொடங்கி தருமபுரி நேற்றைய திருநாள் கொண்ட சேரி வரைக்கும் கருணாநிதியும் ஜெயாவும் ஆதரவாகப் போராட்டம் நடத்தாதது இருக்கட்டும் வாயைக்கூடத் திறந்தது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
திருமாவளவன் அவர்களை முன்னிறுத்தி அரசியல் அரங்கில் அவருக்கு உரிய பங்கை அளித்தது என்பது கூட முதலில் கருப்பையா மூப்பனார்தான்.
ஒவ்வொரு கட்சியும் தலித் பிரிவு என ஒன்றை வைத்துக் கொண்டுதான் உள்ளன. ஆனால் அது போல ஒரு ஏமாற்றும் பச்சை அயோக்கியத்தனமும் எதுவும் இல்லை. அவர்களை சுதந்திரமாக தலித்களுக்கான போராட்டங்களை எடுக்க எந்தக் கட்சிகளும் அனுமதித்தது இல்லை.

இதற்கு ஒரு விதிவிலக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான். அவர்களது ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ முக்கியமான பல போராட்டங்களை தலித்களுக்காக நடத்தியுள்ளது. உத்தபுரம் ஊரறிந்த உண்மை. நானே அவர்களோடு அங்கு மூன்று முறை சென்றுள்ளேன். தருமபுரியிலும் அவர்களின் பங்கு இருந்தது. உசிலம்பட்டி கவுரவக் கொலை பிரச்சினையை வெளியில் கொண்டு வந்ததில் அவர்களின் பங்கு முக்கியம். அப்பகுதி ஆதிக்க சாதியினர் அர்ஜுன் சம்பத்தை வைத்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பெரிய அளவில் ஒரு பொதுக்கூட்டமே நடத்தினர்.
கடைசியாக ஒன்று. நான்கு கட்சிக் கூட்டணியில் தலித் ஒருவரை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதை முகநூலிலும் வெளியிலும் பலரும் பேசியுள்ளனர். அதுவும் கூட இங்கு மட்டுமே அது சாத்தியம் என்பதால்தான் என்பதை மனதிற் கொள்ள வேண்டும். வேறு எந்தக் கட்சியிலும் அது சாத்தியமில்லை என்பதால்தான் அதை இங்கே வைக்கின்றனர். இங்கே மட்டுமே வைக்கின்றனர். ஆனால் அப்படி அங்கு வைக்க இயலாதது குறித்து அவர்கள் காக்கும் மௌனம் நேர்மையற்றது.
யாராவது திமுகவிடம் இந்தக் கோரிக்கையை வைக்கிறார்களா பாருங்கள். அங்கே மு.க பிறகு ஸ்டாலின் அழகிரி கனிமொழி உதயநிதி… இதைத் தாண்டி நாலு கட்சிக் கூட்டணியில் தலித் முதல்வர் பற்றிப் பேுசுபவர்கள் யாரையும் முதல்வர் வேட்பாளராக அங்கே கண்டு பிடிக்க இயலாதே. திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கூட அங்கே இந்தக் கோரிக்கையை வைத்ததில்லையே.
மற்றபடி தலித் போராட்டங்களை உண்மையான தீவிரத்துடன் யாரேனும் எடுத்துள்ளார்கள் என்றால் அவர்கள் மா -லெ குழுவினர்தான். திருநாள் கொண்ட சேரியிலும் கூட சி.பி.ஐ (எம் எல்) குழுவினரின் பங்கு முக்கியமானது. மற்ற மா-லெ குழுவினரும் அதுபோல ஆங்காங்கு செயல்பட்டுள்ளனர்.
ஆக தலித்களின் இயற்கைக் கூட்டணி இடதுசாரிகள்தான். ஆயிரம் குறைபாடுகளைச் சொல்லமுடியும் என்றாலும் கூட வேறு எந்தக் கட்சிகளைக் காட்டிலும் இன்றுள்ள நிலையில் இடதுசாரிகளே தலித்கள் மற்ரும் சிறுபான்மையினரின் இயற்கைக் கூட்டணியாக இருக்க முடியும். தமிழகத்தைப் பொருத்தமட்டில் காங்கிரஸ் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில் இடதுசாரிகளுடந்தான் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக