விசாவிற்காக காத்திருகின்றேன்
எந்த மக்களுக்கு இடையில் பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப் உணர்வு பெற்று வீறு கொண்டு எழுந்தவர்கள் வாழ்த்துக்கு உரியவர்கள்
தன் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை தான் எழுதிய விசாவுக்காக காத்திருகின்றேன் என்ற கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கிறார் அம்பேத்கர்
இந்தியாவில் தீண்டாமை இருப்பதை அயல்நாட்டினர் அறிந்திருக்கக்கூடும். உண்மையில் அது எவ்வளவு அடக்கு முறை நிறைந்தது என்பதை அவர்கள், அடுத்த வீட்டில் இருந்தாலும், அறிந்து கொள்ள இயலவில்லை என்றே
கூறலாம். அதிக எண்ணிக்கை கொண்ட இந்துக்கள் கொண்ட ஒரு கிராமத்தின் ஓர் ஓரத்தில் எவ்வாறு ஒரு சில தீண்டாதவர்கள் வசிக்க இயலும் என்பதையும், தினமும் கிராமத்தைச் சுற்றிச் சென்று, அங்கிருக்கும் அருவருக்கத்தக்க கழிவுகளை அகற்றியும், ஊர் மக்கள் பணிக்கும் சில்லறை வேலைகளைச் செய்து கொண்டும், இந்துக்களின் வீட்டு வாசல்களில் நின்று அவர்கள் இடும் உணவைப் பெற்றுக் கொண்டும், இந்து பனியாவின் கடையில் எட்டி நின்று கொண்டே தங்களுக்குத் தேவையான பொருட்களையும், எண்ணெய்யையும் வாங்கிக் கொண்டும், அந்தக் கிராமத்தை ஒவ்வொரு வழியிலும் தங்களின் வீட்டைப் போல் நினைத்துக் கொண்டிருந்தாலும் கிராமத்தார் எவரையும் தொட்டுவிடாமலும், தன்னை யாரும் தொட்டு விடாமலும் நடந்துக்கொள்வதைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு எளிதானதல்ல.
உயர்ஜாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறமுறயும் என்பதுதான் பிரச்சனை. இதைப்பற்றி ஒன்று பொதுவாக விவரித்துக் கூறலாம். அல்லது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை தனிப்பட்டவர்களின் அனுபவங்களைக் கூறலாம். இந்த இரு வழிகளே நமது இந்த நோக்கத்தை நிறைவேற்ற இயன்ற சிறந்த வழிகளாகும். முந்தையதை விட, பிந்தைய வழியே மேலானது என நான் உணர்கிறேன். இந்த அனுபவங்களைத் தேர்ந்து எடுக்கையில், எனது சொந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றையும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து சிலவற்றையும் எடுத்துக் கொண்டேன். எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவ நிகழ்ச்சிகளைக் கொண்டு இதனை நான் தொடங்குகிறேன்.
தண்ணீர் இன்றி உணவருந்த முடியாத இளம் வயதில் பட்ட கொடுமை!
பம்பாய் இராஜஸ்தானியின் இரத்னகிரி மாவட்டத்து, தபோலி தாலுகாவிலிருந்து வந்தது எங்கள் குடும்பம். கிழக்கு இந்தியக் கும்பெனியின் ஆட்சி இந்தியாவில் தொடங்கிய போதே எனது முன்னோர்கள் தங்களின் பாரம்பரியமான தொழிலை விட்டுவிட்டு கும்பெனியின் பட்டாளத்தில் பணியாற்ற வந்துவிட்டார்கள். என் தந்தையும் குடும்பப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, இராணுவப் பணியேற்றார். இராணுவத்தில் படிப்படியாக பதவி உதவி பெற்ற அவர் ஓய்வு பெறும்போது சுபேதார் அந்தஸ்தில் இருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் என் தந்தை, தபோலியில் தங்கலாம் என்ற எண்ணத்தோடு, எங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தபோலி வந்தார். ஆனால், சில காரணங்களுக்காக என் தந்தை தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். எங்கள் குடும்பம் தபோலியை விட்டுப் புறப்பட்டு சதாரா சென்று அங்கு 1904-வரை வாழ்ந்தது.
எனக்கு நினைவிருந்து நான் பதிவு செய்யும் எனது முதல் அனுபவ நிகழ்வு நாங்கள் சதாராவில் இருந்தபோது 1901-இல் ஏற்பட்டது. அப்போது என் தாயார் உயிருடன் இல்லை; இறந்துபோய் விட்டார். சதாரா மாவட்டம் கடாவ் தாலுகாவில் உள்ள கார்கோன் என்ற இடத்தில் அரசுப் பணியில் காசாளராகப் பணியாற்ற என் தந்தை சென்றுவிட்டார். பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்த நிலையில், பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு வேலை தரும் நோக்கத்தில் ஓர் ஏரியைத் தூர் வாரும் பணியை அங்கு பம்பாய் அரசு துவங்கி இருந்தது. எங்கள் தந்தை கார்கோன் சென்றபோது, என்னையும், என் அண்ணனையும், இறந்துபோன எனது அக்காவின் இரண்டு மகன்களையும் தனியாக, என் அத்தை மற்றும் அக்கம் பக்கத்து மக்களின் பொறுப்பில் எங்களை விட்டுவிட்டுச் சென்றார்.
நான் அறிந்த மனிதர்களில் என் அத்தை மிகவும் அன்பானவர் என்றாலும், எங்களுக்கு அவரால் எந்த உதவியும் இல்லை. மற்றவர்களைப் போலன்றி மிகவும் சிறிய உருவம் கொண்டவராக இருந்த என் அத்தைக்கு, அவரது கால்களிலும் ஏதோ ஒரு வகையான ஊனம் இருந்தது. மற்றவர்களின் உதவி இன்றி அவரால் இங்கும் அங்கும் நகர்ந்து செல்லவும் முடியாது. அநேகமாக அவரை யாராவது தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். எனக்குச் சகோதரிகள் இருந்தனர் என்றாலும், அவர்களுக்குத் திருமணமாகி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வெகு தொலைவில் வாழ்ந்து வந்தார்கள். எங்கள் அத்தையின் உதவியும் இன்றி சமைப்பது என்பதே எங்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. நாங்கள் நால்வரும் பள்ளிக்கு சென்று கொண்டும், வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டும் இருக்க வேண்டிய நிலையே நிலவியது. எங்களால் ரொட்டி சுடமுடியாது என்பதால் புலவு சோற்றை மட்டுமே நாங்கள் உண்டு வாழ்ந்தோம். அரிசியையும், கறியையும் சேர்த்து வேக வைத்து புலவு தயாரிப்பது எங்களுக்கு எளிதாக இருந்தது.
அவர் காசாளராக இருந்ததால் எங்களைக் காண அடிக்கடி சதாராவுக்கு வர எங்கள் தந்தையால் இயலவில்லை. அதனால் கோடை விடுமுறைக்கு கோர்கான் வந்து அவருடன் தங்கியிருக்கும்படி கேட்டு எங்களுக்குக் கடிதம் எழுதினார். எங்கள் வாழ்நாளில் அதுவரை நாங்கள் ரயிலையே பார்த்தது இல்லை என்பதால் அவரது அழைப்பு எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
நாங்கள் புறப்பட்டுச் செல்வதற்காக பலமான ஏற்பாடுகளைச் செய்தோம்.
இங்கிலாந்து நாட்டுத் துணியில் புதிய சட்டைகள் தைக்கப்பட்டன; அழகான, அலங்காரத் தொப்பிகள் வாங்கப்பட்டன; புதிய காலணிகள், பட்டுக் கரை போட்ட வேட்டிகள் அனைத்தும் எங்கள் பயணத்துக்காக வாங்கப்பட்டன. எவ்வாறு நாங்கள் பயணம் செய்து வரவேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எங்கள் தந்தை தனது கடிதத்தில் எழுதியிருந்தார். அத்துடன் எப்போது நாங்கள் வருகிறோம் என்பதை முன்கூட்டியே கடிதம் மூலம் தெரிவித்தால், தான் நேரில் ரயிலடிக்கு வந்தோ அல்லது தனது சேவகரை அனுப்பியோ கோர்கானுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஏற்பாட்டின்படி, நானும், என் அண்ணனும், என் அக்கா மகன்களும் சதாராவை விட்டுப் புறப்பட்டோம்.
எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என் அத்தையைப் பார்த்துக் கொள்வதாக வாக்களித்ததால் அத்தையை வீட்டிலேயே விட்டு விட்டுப் புறப்பட்டோம். ரயில்வே நிலையம் எங்கள் இடத்திலிருந்து 10-மைல் தொலைவில் இருந்தபடியால், ஓர் இரட்ரைக் குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு நாங்கள் ரயிலடிக்குச் சென்றோம். இந்த அருமையான வாய்ப்புக்காக நாங்கள் புதிய உடைகள் அணிந்து கொண்டிருந்தோம். நாங்கள் மகிழ்சியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டும்போது, எங்களைப் பிரியும் துயரத்தில் எங்கள் அத்தை கீழே விழுந்து புரண்டு அழுதார்.
ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்தவுடன், என் அண்ணன் பயணச் சீட்டுக்களை வாங்கியபின், எனக்கும், எங்கள் அக்கா மகன்களுக்கும் எங்கள் விருப்பம் போல் செலவு செய்ய கைச்செலவுக்காக தலா இரண்டு அணா கொடுத்தார். உடனே நாங்கள் ஆளுக்கு ஒரு புட்டி எலுமிச்சம்பழரசம் வாங்கி அருந்தியதன் மூலம் எங்கள் ஆடம்பரமான வாழ்க்கையைத் தொடங்கினோம். சிறிது நேரத்தில் ஊதிக் கொண்டு வந்த இரயிலில் உடனே நாங்கள் ஏறிக்கொண்டோம். இல்லாவிட்டால் எங்களை விட்டுவிட்டு இரயில் சென்றுவிடுமோ என்று நாங்கள் அஞ்சினோம். கோர்கானுக்கு மிக அருகில் உள்ள மாசூரில் நாங்கள் இறங்க வேண்டும் என்று எங்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
மாலை 5-மணிக்கு இரயில் மாசூரை வந்தடைந்தது. மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு நாங்கள் இரயிலை விட்டு இறங்கினோம். சில நிமிட நேரத்தில் அந்த நிலையத்தில் இரயிலை விட்டு இறங்கியவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று எதிர்பார்த்து நாங்கள் நால்வரும் இரயிலடியிலேயே காத்திருந்தோம். வெகுநேரம் காத்திருந்தும் எவரும் வரவில்லை. ஒரு மணி நேரம் கழிந்த பின் ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எங்களிடம் விசாரித்தார். பயணச் சீட்டு இருக்கிறதா என்று அவர் எங்களைக் கேட்டார். நாங்கள் எங்கள் பயணச் சீட்டுகளை அவரிடம் காட்டினோம். நீங்கள் ஏன் தயங்கி நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் எங்களைக் கேட்டார். நாங்கள் கோர்கான் செல்ல வேண்டும் என்றும், எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று நாங்கள் காத்திருப்பதாகவும், கோர்கானுக்கு எப்படி போவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவரிடம் நாங்கள் கூறினோம்.
நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். இந்துக்களின் வழக்கம் போல நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறிவிட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினரில் மஹரும் ஒன்று) அவர் முகம் திடிரென மாறிவிட்டது. அதிசயிக்கத்தக்க வெறுப்பு உணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மறைந்து எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டு வண்டி வாடகைக்குக் கிடைத்தால் கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்துவிட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக் கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை. இரண்டு மடங்கு கட்டணம் தருவதாக நாங்கள் கூறியபோதும் பயன் ஏதுமில்லை.
எங்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்ற தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று, “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டிவருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன் தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.
புறப்பட நாங்கள் தயாராகும்போது மாலை 6.30-மணி ஆகிவிட்டது. இருட்டுவதற்கு முன் நாங்கள் கோர்கானை அடைய முடியும் என்ற உறுதி மொழி எங்களுக்கு அளிக்கப்படும் வரை இரயில் நிலையத்தை விட்டுப் போகாமல் இருக்கவே நாங்கள் ஆவலாய் இருந்தோம். அதனால் பயண தூரம் மற்றும் கோர்கானை எந்த நேரத்திற்குள் சென்று அடையலாம் என்ற விவரங்களை மாட்டு வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். பயண நேரம் 3- மணிக்கு மேல் ஆகாது என்று அவர் எங்களுக்கு உறுதி அளித்தார். அவரது சொற்களை நம்பி எங்களது சுமைகளை மாட்டு வண்டியில் வைத்து விட்டு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு நன்றி கூறிவிட்டு, நாங்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டோம். எங்களில் ஒருவர் வண்டி மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொள்ள வண்டியை ஓட்டத்தொடங்கினோம். வண்டிக்காரர் வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.
இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கங்கே தண்ணீர் சிறிதளவு குட்டை குட்டையாக நின்றுகொண்டு இருந்ததைத் தவிர ஆறு முற்றிலுமாக வறண்டிருந்தது. அதைத் தாண்டிச் சென்றால் தண்ணீர் கிடைக்காது என்பதால் அங்கே தங்கி எங்களது உணவை முடித்துக் கொண்டு செல்லலாம் என்று வண்டிக்காரர் கூறினார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். வண்டி வாடகையில் ஒரு பகுதியைத் தனக்குத் தரும்படி கேட்ட வண்டிக்காரர் கிராமத்துக்குச் சென்று தனது உணவை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறினார். என் அண்ணன் அவருக்குச் சிறிது பணம் கொடுத்தார். விரைவில் வந்துவிடுவதாகக் கூறி வண்டிக்காரர் புறப்பட்டுச் சென்றார்.
எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம். வழியில் உண்பதற்காக நல்ல உணவைத் தயாரிக்கும்படி எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெண்களை எங்கள் அத்தை ஏற்பாடு செய்திருந்தார். உணவுக் கூடையைத் திறந்து நாங்கள் உண்ணத் தொடங்கினோம். கழுவுவதற்கு எங்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் இருக்குமிடத்திற்கு எங்களில் ஒருவர் சென்றார். ஆனால் அங்கிருந்தது தண்ணீரே அல்ல. தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்றுநீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரம்பும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று.
வண்டிக்காரர் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோதும், நீண்ட நேரம் கழிந்த பின்னும் அவர் வரவே இல்லை. அவர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவர் வந்து சேர்ந்த பின் நாங்கள் புறப்பட்டோம். நான்கு அய்ந்து மைல் தூரம் நாங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கைவிட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்.
ஆனால் இது பற்றி அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க எங்களுக்குத் துணிவு வரவில்லை. எங்களது இலக்கான கோர்கானை எவ்வளவு விரைவாக அடையமுடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதிலேயே நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வண்டி செல்வதையே நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். ஆனால் விரைவில் எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்து கொண்டது. இருளைப் போக்கும் விளக்குகள் எதுவும் சாலையில் இல்லை. சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. நாங்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த இயன்ற ஓர் ஆணையோ, பெண்ணையோ அல்லது கால் நடையையோ கூட நாங்கள் சாலையில் எங்களைக் கடந்து செல்வதையோ எதிர் வருவதையோ பார்க்கவில்லை. எங்களைச் சூழ்ந்திருந்த தனிமை எங்களுக்கு அச்சத்தை அளித்தது. எங்களது ஆவல் அதிகமாக ஆக, ஆக நாங்கள் தைரியத்தை வரவழித்துக் கொண்டோம்.
மாசூரிலிருந்து வெகு தூரம் 3-மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்துவிட்டோம். ஆனால் கோர்கான் வந்த அடையாளமே தெரியவில்லை. எங்களுக்குள் ஒரு விந்தையான எண்ணம் எழுந்தது. வண்டிக்காரர் எங்களை ஏதோ தனியான இடத்துக்குக் கொண்டு சென்று எங்களைக் கொன்றுவிட சதித் திட்டம் தீட்டி இருப்பாரோ என்று நாங்கள் அய்யப்பட்டோம். நாங்கள் நிறைய தங்க நகைகள் போட்டிருந்தது எங்கள் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கோர்கானுக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் ஏன் கோர்கானை அடைய இவ்வளவு தாமதம் ஆகிறது என்றும் நாங்கள் அவரைக் கேட்டோம். கோர்கானுக்கு இன்னும் அதிக தூரமில்லை; விரைவில் நாம் அங்கு சென்றடைந்துவிடுவோம் என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
இரவு 10- மணி ஆனபோதும் கோர்கான் வராததால் சிறுவர்களாகிய நாங்கள் அழத் தொடங்கியதுடன் வண்டிக்காரரைத் திட்டவும் தொடங்கிவிட்டோம். எங்களது அழுகையும், புலம்பலும் வெகு நேரம் நீடித்தது. வண்டிக்காரர் எந்தப் பதிலும் கூறவே இல்லை. திடீரென்று சிறிது தூரத்தில் விளக்கு ஒன்று எரிவதை நாங்கள் கண்டோம். “அந்த விளக்கைப் பார்த்தீர்களா? சுங்கச் சாவடி விளக்கு அது. இரவு நாம் அங்கே தங்குவோம்” என்று வண்டிக்காரர் கூறினார். எங்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டதில் எங்கள் அழுமை நின்றது. அந்த விளக்கு தொலைவில் இருப்பதாகவே தோன்றியது; அதை நாங்கள் விரைவில் அடைய முடியும் என்று தோன்றவில்லை. சுங்கச்சாவடி குடிசையை அடைய இரண்டு மணிநேரம் ஆனது. இந்த இடைவெளி எங்கள் ஆவலை அதிகரிக்கச் செய்ததால் நாங்கள் வண்டிக்காரரிடம் அந்த இடத்தை அடைய ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது நாம் அதே சாலையில் சென்று கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பலவிதமான கேள்விகளையும் கேட்டுக் கொண்டே வந்தோம்.
இறுதியில் நடுஇரவு நேரத்தில் வண்டி சுங்கச்சாவடி குடிசையை வந்தடைந்தது. அது ஒரு மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது; ஆனால் மலையின் அந்தப் பக்கத்தில் இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, இரவு தங்குவதற்காக வந்திருந்த பல மாட்டு வண்டிகள் அங்கு இருந்ததை நாங்கள் கண்டோம். எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால் நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது என்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார்.
அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டும் அவர் எங்களிடம் சொன்னார்.
மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு, வண்டி தரையில் சாய்த்து வைக்கப்பட்டது. வண்டிக்குள் இருந்த பலகை மேல் எங்கள் படுக்கைகளை விரித்துக் கொண்டு நாங்கள் படுத்துக் கொண்டோம். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோம் என்பதால் நடந்ததைப் பற்றி நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எங்களால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்க வேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம். அதுதான் அன்றிரவு இறுதியாக எங்கள் மனதில் தோன்றிய சிந்தனையாகும். பாதுகாப்பான இடத்திற்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம் என்று நான் சொன்னேன். என்றாலும் என் அண்ணன் அவ்வாறு கருதவில்லை என்று தெரிந்தது. நாம் நால்வரும் ஒரே நேரத்தில் உறங்குவது சரியல்ல என்றும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறிய அவர், ஒரு நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே உறங்கலாம் இரண்டுபேர் விழித்துக் கொண்டிருக்கலாம் என்று யோசனை சொன்னார். இவ்வாறு அந்த இரவை நாங்கள் அந்த மலை அடிவாரத்தில் கழித்தோம்.
விடியற்காலை 5-மணிக்கு எங்கள் வண்டிக்காரர் வந்து நாம் கோர்கானுக்குப் புறப்படலாம் என்று கூறினார். நாங்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டோம். காலை 8-மணிக்கு முன் நாங்கள் நகரமாட்டோம் என்று அவரிடம் கூறிவிட்டோம். எங்களை எந்த ஆபத்திலும் உட்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. வண்டிக்காரர் பதிலேதும் கூறவில்லை. எனவே காலை 8-மணிக்குப் புறப்பட்ட நாங்கள் 11-மணிக்கு கோர்கானைச் சென்றடைந்தோம்.
எங்களைக் கண்ட எங்கள் தந்தை வியப்படைந்தார். நாங்கள் வரப் போவதைப் பற்றிய தகவல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். அவருக்குக் கடிதம் எழுதிவிட்டுத்தான் வந்ததாக நாங்கள் அவரிடம் கூறினோம். எங்கள் தந்தையின் பணியாளரின் தவறு என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எங்களின் கடிதத்தை அந்தப் பணியாளர் எங்கள் தந்தையிடம் கொடுக்கத் தவறிவிட்டார்.
இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அது நிகழ்ந்தபோது எனக்கு 9-வயதிருக்கும். ஆனால் அது என் மனதில் மறையாத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பே நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், தீண்டத்தகாதவர்கள் சில அவமானங்களுக்கும், பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திருந்தேன்.
எடுத்துக்காட்டாக, என்னுடைய தர வரிசைப்படி எனது வகுப்பறையில் மற்ற மாணவர்களிடையே நான் உட்கார முடியாது. வகுப்பறையில் ஒரு தனியான கோணிப்பை மீதுதான் உட்கார வேண்டும் என்றும், பள்ளியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர் நான் பயன்படுத்திய கோணித்துணியைத் தொடவும் மாட்டார் என்பதையும் நான் அறிவேன். ஒவ்வொரு நாள் மாலையும் நான் அந்தக் கோணித் துணியைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் வீட்டிலிருந்து அதைப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
பள்ளியில் தீண்டத்தக்க பிரிவுப் பிள்ளைகள் தாகம் எடுக்கும்போது தண்ணீர்க் குழாயிடம் சென்று அதைத் திறந்து தண்ணீர் குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்வதை நான் அறிவேன். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஆசிரியரின் அனுமதி மட்டுமே. ஆனால் எனது நிலைமையே வேறு. நான் அந்த தண்ணீர்க் குழாயைத் தொட முடியாது. தீண்டத்தக்க ஒருவர் குழாயைத் திறந்துவிட்டால் தவிர, எனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆசிரியரின் அனுமதி மட்டும் போதாது. தண்ணீர்க்குழாயைத் திறந்து விடப் பள்ளி ஊழியர் அங்கே இருக்க வேண்டும்; தண்ணீர் திறந்து விடுவதற்கு அந்தப் பணியாளர் ஒருவரைத்தான் பள்ளி ஆசிரியர் பயன்படுத்துவார். அந்தப் பணியாளர் இல்லையென்றால் நான் தண்ணீர் குடிக்காமலேயே போக வேண்டியதுதான். பணியாளர் இல்லை என்றால் எனக்குத் தண்ணீர் இல்லை என்றுதான் சுருக்கமாகக் கூறவேண்டும்.
வீட்டில் என் சகோதரிகள் துணிகளைத் துவைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். சதாராவில் துணி வெளுப்பவர் இல்லாமல் இல்லை அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் முடியாது என்பதுமில்லை. தீண்டத்தகாதவரின் துணிகளை எந்தத்துணி வெளுப்பவரும் வெளுக்கமாட்டார் என்பதால், எங்கள் துணிகளை என் சகோதரிகளே வெளுப்பார்கள். எங்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு முடிவெட்டுவது, முகச் சவரம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளையும் எங்கள் மூத்தச் சகோதரியே செய்வார்; எங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சிறந்த முடித்திருத்தக் கலைஞராகவே ஆகிவிட்டார். சதாராவில் முடிதிருத்துபவர்கள் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் இயலாது என்பதுமில்லை. ஆனாலும் எந்த முடிதிருத்துபவரும் தீண்டத்தகாத ஒருவருக்கு சவரம் செய்ய ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதால் தான் இப்பணியை என் சகோதரி செய்து வந்தார். இவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் கோர்கான் செல்லும்போது நேர்ந்த நிகழ்ச்சி இதற்கு முன் நான் எப்போதுமே அனுபவித்திராத பேரதிர்ச்சியை எனக்கு அளித்தது. தீண்டாமையைப் பற்றி என்னை அந்த நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன், தீண்டாமை என்பது பல தீண்டத்தகாதவர்களுக்கும், தீண்டத்தக்கவர்களுக்கும் சாதாரணமான விஷயமாக இருந்ததாகும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக