Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 மே, 2015

புதுப் புது புறக்கணிப்புகள் ..!!!

“புறக்கணிப்பு ” இந்த சொல்லாடலை முஸ்லிம் சமூகம் ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு தளங்களில் பேசியும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் வந்துள்ளதை வரலாறு நெடுக காண முடிகிறது.
அப்படியான புறக்கணிப்பை பெருமையோடு மார்தட்டி கொண்டு சபைகளில் முழங்குவதையும் வழமையாக்கியுள்ளோம் . புறக்கணிப்பின் வரலாறுகளை கொஞ்சம் தோண்டவும் .. தூசு தட்டவும் சுதந்திர வரலாற்றிற்கு செல்ல வேண்டியிருக்கிறது .
இந்தியச் சூழலில் சுதந்திர தாகத்தை நெஞ்சில் ஏந்தி தன் எண்ணிக்கையில் சரிபாதி மக்களை சுதந்திரத்திற்காய்
தியாகம் செய்த  பெருமை முஸ்லிம்களுடையது . அதன் போராட்ட வடிவங்கள் வெவ்வேறானவை . அதன் ஒரு பகுதியே “புறக்கணிப்பு “. ஆங்கிலேயர் முஸ்லிம்களுக்கு வழங்கி கௌரவித்த “சர்” பட்டங்களை தூக்கி எறிந்ததும் , “ஆங்கிலம்” கற்பது ஹராம் என்று ஃபத்வா வழங்கியதுமான புறக்கணிப்பின் பெரிய வரலாற்றை நினைவில் கொள்ள வேண்டும் .
உலக அரங்கில் ஒரு சமூகம் 400 ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய இறக்குமதியை  தடை செய்து மார்க்கம் விதித்த கடமை போன்று அதனை செயல்படுத்தி வரலாற்றில் பின்னோக்கி நகரத் துவங்கிய வரலாறு உண்டெனில் அதன் பெருமை முஸ்லிம்களையே சாரும் .
ஆம் ..1400 களின் இடையிலேயே  ஐரோப்பாவால் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு இயந்திரத்தை(Printer) பயன்படுத்துவது ஹராம் என ஃபத்வா வழங்கியதன் விளைவு அச்சு இயந்திரம் (Printer) இஸ்லாமிய உலகை 1800களிலேயே  வந்தடைகிறது . அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி 1400 களிலேயே மிக வீரியமாக அழைப்புப் பணியை மேற்கொண்டிருக்க முடியும்
துரதிர்ஷ்டவசமாக அத்தகைய வாய்ப்பை முஸ்லிம்கள் புறக்கணித்து விட்டனர் . இதன் நியாயங்கள் மீதான கருத்தியலுக்குள் செல்வது அவசியமற்றது .இருந்தாலும் வரலாறு நெடுக இப்படியான பாரிய புறக்கணித்தலை இஸ்லாமிய சமூகம் முன்னெடுத்திருக்கிறது .
நிகழ்காலத்தையும் கொஞ்சம் அலச வேண்டியிருக்கிறது .சமீபத்தில் தேசம் முழுக்க அதிலும் குறிப்பாக தமிழகத்தில் “புறக்கணிப்பீர்” என்ற வாசகம் மிகப் பிரபலமாகிவிட்டது . ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த குரல் “வாங்க மறவாதீர்கள் ” என்பதகாத்தான் இருக்க முடியும் . இப்பொழுது அந்த இடத்தை புறக்கணிப்பீர் என்ற சொல் ஆக்கிரமித்திருக்கிறது .
சமீப காலமாக தமிழகச் சூழலில் “ஆளுக்கொரு ஆளுமை”யின் இயங்கியலில் தங்கள் அமைப்பிற்கெதிரான ஊடகங்களின் மீதோ, வேறொரு அமைப்பின் மீதோ இந்த “புறக்கணிப்பீர்”எனும் போர் தொடுப்பது ஏறக்குறைய ஃபர்ள் ஆகிவிட்டது . தின மலர்/தந்தி/கரனை புறக்கணிப்பீர், நக்கீரனை புறக்கணிப்பீர் அதை புறக்கணிப்பீர் இதை புறக்கணிப்பீர் என புறக்கணிப்பு போர் நிலவி வருவது பெரும் அக்கப்போராகவே உள்ளது .
அறிவுத்தளத்தில் ஒன்றை புறக்கணிப்பது என்பது நிச்சயமாக விளைவுகள் மொத்தத்தினையும் தன் தலையில் வாரிப் போட்டுக்கொள்ளவே உதவும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினை காட்டுமிராண்டிகளாகவும்,ரவுடிகளாகவும்,பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் ஊடக உலகில் இப்படியான புறக்கணிப்புகள் எதிரிகள் திட்டமிட்டு தீட்டிய வாளுக்கு கூர்மை சேர்க்கவே வழிவகுக்கும் . புறக்கணிப்புகள் ஆரோக்கியமாக இருக்குமெனில் அல்லது தீர்வைத் தருமெனில் அல்லது பெரிய அசம்பாவிதத்தை தடுக்குமெனில் புறக்கணிப்பை மிக வீரியமாகவே முன்னெடுக்கலாம் .
உதாரணமாக கொக்கொக்கோலாவை புறக்கணிப்பதென சமூகம் முடிவெடுத்தது . அதனை யாரும் அமைப்பாக்கவில்லை , இயக்கமாக முன்னெடுக்கவில்லை . தனிநபர் அக்கறையாளர்களும் , விரல்விட்டு எண்ணும் சில தொழிலதிபர்களும் அதனை புறக்கணித்து நிராகரித்தனர் .அதன் தீமைகளை அப்பட்டமாக அறிந்து வைத்துள்ளோம்.  உடல் ரீதியான தீமைகளை தரக்கூடிய பூச்சிக்கொல்லிகளும் ..,ஃபலஸ்தீனத்தின் நமது பிஞ்சுகளை கொன்று குவிக்கும் உயிர் கொல்லிகளுமான இருவேறு ஆபத்துகளில் நேரடியாக உதவக்கூடிய கொக்கொக்கோலாவிற்கு எதிராக பாரிய போராட்டத்தையும் , அமைப்பையும் ,புறக்கணிப்பையும் நவீன புறக்கணிப்பின் சமூகம் மென்மைப் போக்கினையே கடைபிடித்து வந்திருக்கிறது .
யூதர்கள் செய்த சதிச் செயல்களுக்கு யூதர்களின் கண்டுபிடிப்புகளான சமூக வலைதளங்களையும், இணையத்தையும், அவர்களின் கட்டுபாட்டு இயந்திரங்களான  ஊடகங்களையும் புறக்கணிப்பது என்பது எத்தகைய அறிவார்ந்த போராட்டம் என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை . நபிகளாரை கேலியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட. பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலுக்கு பின்னால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை அதன் ஆதரவு பத்திரிக்கைகளும் வீரியமாக செய்ய முனைந்தனர் . பிரான்ஸ் நாட்டு இஸ்லாமியர்கள் ” நம் மீது அவதூறுகளை பரப்புகின்றனர் எனவே முஸ்லிம்களே புறக்கணிப்பீர்” என்ற போரை சமூகத்தின் முன் வைக்கவில்லை . மாறாக “யார் முஹம்மது ..(Who is Muhammad)??” என்ற பிரச்சாரத்தை சமூகத்தின் முன்னும் , சமூக வலைதளங்களிலும் மிக வீரியமாகவே எடுத்துச் சென்றனர் . இதன் விளைவு எத்தனை நபர்களுக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று வெறுப்பை விதைக்க நினைத்தார்களோ அதனைவிட அதிகமான நபர்களுக்கு முஹம்மது யார் என்பதை விளக்க முடிந்தது .
ஆப்கனின் தாலிபான்களது ஆட்சியை நம்மவர்கள் உட்பட கடுமையாக விமர்ச்சித்தது உண்டு . அவர்கள் பழமைவாதிகள் என திரிபுவாதம் பேசியதுண்டு . அங்கே தொலைக்காட்சிக்கு தடை, புகைப்படக் கருவிக்கு தடை என இப்படி பல தடைகள் . ஆனாலும் தாலிபான்களின் ஊடக கண்காணிப்பு அலுவலகத்தில் எண்ணற்ற தொலைக்காட்சிகளும், உலகில் உள்ள அத்துனை சேனல்களும் ஒளிபரப்பாகிறது . இதன் மூலம் உலக நடப்புகளை தொடர்ச்சியாக அறிந்து வருகிறார்கள் . புறக்கணிப்பின் வாசல்களை அறிவுதளத்தில் இறுக்க  மூடுவதென்பது அறிவு தளத்திற்கு முற்றாக தாழிடுவதற்குச் சமம் .
தி மெசேஜ் திரைப்படம் வெளியானபோது கூட இஸ்லாம் சினிமாவை ஆதரிக்கிறதா இது தவறல்லவா …??? இவை விரோதமானவை என்பதுமான கேள்விகள் எழாமல் இல்லை . இவற்றையெல்லாம் கடந்துதான் அந்தப்படம் வெகுஜன மக்களின் உள்ளங்களை ஈர்த்து நிற்கிறது .
ஓர் இருட்டறை மூன்று மணி நேரம் இஸ்லாம் தீவிரவாத மதம் என ஓலமிட்டு மூளைச்சலவை செய்யும் எனில் , வெறுப்புக் கோட்பாட்டை (Hate Policy) விதைக்கும் எனில் அதே இருட்டறையில் இஸ்லாத்தின் சமூக அக்கறையையும், தனிமனிதன் சார்ந்த வாழ்வியல் கூறுகளையும் மனதில் பதிவேற்ற ஏன் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது . அறிவுத் தளத்தில் ஏற்பட்ட பின்னடைவை என்றைக்கு சரி செய்யப் போகிறோம் என்ற கேள்வியை சமூகத்தின் முன் சற்று அழுத்தமாகவே எழுப்ப வேண்டியிருக்கிறது .
சட்டம் மனிதனின் கைகளால் இயற்றப்பட்டவை எனவே சட்டத்துறையையும்,நீதித்துறையையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் ..அரசியலில் ஜனநாயகம் இருக்கிறது எனவே அதனை ஹராம் என்று அரசியலை புறக்கணிப்பதுமான வேலைகளை இன்னமும் சின்னஞ்சிறு குழுக்கள் செய்து கொண்டுதான் வருகின்றன . இத்தகைய புறக்கணிப்பை கையாண்டு எத்தகைய நீதியையும் ,உரிமைகளையும் பெறப்போகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்களிடம் பதில் இருக்காது .
முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான புறக்கணிப்பில் ஈடுபட்டதன் விளைவு பல்வேறு இன்னல்களையும், தலைமுறைதாண்டிய பின்தங்கிய நிலையிலும் வாய்ப்புகளை கேட்டு வீதிகளில் களமாடுவதை காண முடிகிறது . இந்த நிலையிலும் மீண்டுமொரு புறக்கணிப்பு போரை தொடுப்பது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகல்ல ..!! ஊடகங்களை ஆக்கிரமித்துள்ள ஜியோனிஸமும், பார்ப்பனியமும் தங்களுக்கெதிரான பிரச்சாரத்தை முடக்க அந்த ஊடகத்தை புறக்கணிக்கும் அதே வேளையில் அதனை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் தீவிரம் காட்டுகின்றனர் . இந்துத்துவாதிகள் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தி புறக்கணித்த நிகழ்வு நாம் அறிந்ததே . அதனை புறக்கணிக்க இந்துத்துவாதிகள் விடுத்த அழைப்பை முகம் சுழிக்காது சங்கப்பரிவாரங்களின் அரசியல் கட்சிகள் ஏற்று உணர்வுகளுக்குள் உறவாடி நின்றனர் . ஆனாலும் இந்துத்துவத்தின் மென்மைப்போக்கை  நிலைநாட்ட சமூக ஆர்வலர்களின் பெயரிலும் , மோடி ஆதரவாளர் என்ற பேரிலும் அதே ஊடகத்தில் புகுந்து கருத்தை திணித்து காட்டு கத்தல்களை தொடர தெளிவான திட்டம் அவர்களிடம் இருந்தது . இப்படியான திட்டமிடல்  நாம் சிந்தனைக்குள் எழுவதே மிக ஆச்சரியமான விடயம் .
ஊடக உலகில் தற்பொழுதே தவழும் பிள்ளையான முஸ்லிம் சமூகம் வெறுப்பு பிரச்சாரங்களை தீவிரமாக கண்டிப்பதுடன் அதனை புறக்கணிக்க விடுக்கும் அறைகூவலை நிறுத்த வேண்டும் . புறக்கணித்தல் என்பது அறிவு தளத்திற்கு விடும் முட்டுக்கட்டையாகவே அமையும் . எனவே முஸ்லிம் சமூகம் புறக்கணிப்பை கைவிடுத்து ஆரோக்கியமான நகர்தலை அறிவுத்தளத்தில் முன்னெடுப்பது அவசியமான ஒன்று .
புறக்கணிப்பது தீர்வை தராவிடில் ..
புறக்கணிப்பை புறந்தள்ளுவதே ஆகச் சிறந்தது .
- அஹ்மது யஹ்யா அய்யாஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக