பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன் 20.5.2014 அன்று நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக வந்த மோடி, அதன் வாயிற்படியைத் தன் தலையால் தொட்டு வணங்கினார். உள்ளே அடக்கமே உருவாக அமர்ந்திருந்தார். 87 ஆண்டுகள் பழமையான அந்த அரங்கில், பிரதமராக முடி சூட்டிக்கொள்ளப் போகிறோம் என்பதால் உணர்ச்சிமயமாகக் காட்சி தந்தார். அத்வானியின் பாராட்டுரைக்கு நன்றி தெரிவிக்கும்போது அவருடைய நா தழுதழுத்தது. பார்க்க எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
சரியாக, 17 நாட்கள் கழித்து ஜூன் 6-ம் தேதி தனது அமைச் சரவை சகாக்களை மக்களவையில் மோடி அறிமுகப்படுத்தும் போது, அவருடைய உண்மையான சொரூபம் சில விநாடிகளுக்கு வெளிப்பட்டது. அமைச்சர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி மற்றவர்கள் தெரிந்துகொள்ள அவகாசம் தராமல், வேகவேகமாகச் செய்து முடித்தவரிடம் எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அங்கில்லை என்று எதிர்க் கட்சியினர் சொன்னபோது கடுகடுத்தார்.
தான் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் புது பிரதமர் மட்டுமல்ல, புது நாடாளுமன்ற உறுப்பினரும் கூட என்ற தயக்கம்கூட அவரிடம் இல்லை. எதிர்க் கட்சிகளிடம் எடுத்த எடுப்பில் தன் முகத்தைக் காட்டினார். இதுவரை பிரதமர் பதவி வகித்தவர்களில், மோடி மட்டும்தான் நாடாளுமன்ற நடைமுறை முன்அனுபவம் இல்லாதவர். குஜராத்தில் முதல்வராகப் பதவி ஏற்றபோதும் அப்படித்தான், பேரவைக்கே அப்போதுதான் முதல் முறையாகச் சென்றார் மோடி.
எப்படியிருக்கிறது அவை?
மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் அவருடைய நாடாளு மன்றச் செயல்பாடு எப்படி இருக்கிறது? மோடி பிரதமர் பதவி வகித்த முதல் 5 மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதைவிட, அயல் நாட்டு நாடாளுமன்றங்களில் பேசியதுதான் அதிகம் என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. உண்மை.
தவிர்க்கவே முடியாத தருணங்களில்தான் நாடாளுமன்றத் துக்கு வருகிறார் மோடி. சரக்கு சேவை வரிகள் தொடர்பாகக் கொண்டுவந்த திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது கூட அவர் அவைக்கு வரவில்லை. எதிர்க் கட்சி உறுப்பினர்களை விடுங்கள், தன்னுடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் களுடனும், அமைச்சர்களுடனும்கூடப் பேசுவதில்லை மோடி. மோடி வெளிநாடு சென்றுவந்தால் அந்தப் பயணம்பற்றிய அறிக்கையைக்கூட வெளியுறவு அமைச்சர்தான் அவருக்குப் பதிலாக வாசிக்கிறார். மன்மோகன் சிங்கை மவுன மோகன் சிங் என்றே கேலி செய்தவர் மோடி. அவரைவிட அதிகமாகவே மவுனம் சாதிக்கிறார்.
ஆனால், இதில் எல்லாம் ஆச்சரியமே இல்லை. மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தவர் சக்திசிங் கோஹில். அவர் சொல்கிறார்: “குஜராத்தில் முதல்வராக இருந்தபோது பேரவையை எப்படி நடத்தினாரோ, பேரவையில் எப்படி நடந்துகொண்டாரோ அதையேதான் நாடாளுமன்றத்திலும் செய்கிறார் மோடி. ஒரு சமயம் எதிர்க் கட்சி உறுப்பினர்களை சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டு 12 சட்டங்களை 17 நிமிஷங்களில் நிறைவேற்றினார். அவர் முதல்வராக இருந்தபோது 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை, சம்பிரதாயத்துக்காக மட்டுமே கூட்டப்படும். இதுதான் குஜராத் மாதிரி” என்கிறார் கோயல்.
“குஜராத் சட்டப்பேரவையில் மோடி எப்போதும் உரையாற்றியதே இல்லை. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதுகூட முதல்வர் என்ற வகையில் அவர் உரையாற்றியதில்லை. அவரது பொறுப்பிலிருக்கும் துறைகள்குறித்த கேள்விகளுக்குக்கூட அவர் பதிலளிக்க மாட்டார். எதிர்க் கட்சிகள் எழுப்பும் முத்திரையிட்ட கேள்விகளில் மூன்றில் ஒரு பங்கு பேரவைக்கே வராது. ஒவ்வொரு தொடரிலும் எதிர்க் கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது வழக்கமாகவே இருந்தது. அவர் முதல்வராக இருந்த காலத்தில் குஜராத் சட்டப்பேரவை ஆண்டுக்கு மொத்தம் 23 நாட்கள்கூடக் கூடியதில்லை” என்கிறது காங்கிரஸ் கட்சி.
காந்திநகர் ஆகிடாது டெல்லி
ஆனாலும், டெல்லியை முழுமையாக காந்திநகர் ஆக்கிட முடியவில்லை மோடியால் என்றே சொல்ல வேண்டும். இரட்டை அடுக்கு நாடாளுமன்றம், பல கட்சிகளைக் கொண்ட வலுவான எதிர்க் கட்சி, அவையில் நடப்பதைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துவரும் தேசிய ஊடகங்கள் இருப்பதால் குஜராத்தில் நடத்தியதைப் போல டெல்லியில் நாடாளுமன்றத்தை மாற்ற முடியவில்லை. மோடி பேசாவிட்டாலும் எதிர்க் கட்சிகள் பேசுகின்றன. இரு அவைகளும் எப்போதையும்விட அதிகம் பணியாற்றுகின்றன.
ஆனாலும், உள்ளடி வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒன்றை மற்றதற்கு எதிராக நிறுத்தும் முயற்சி நடக்கிறது. நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று காட்டியே அவைக்கு வந்தவர், அந்தக் கோயிலில் ஒரு கருவறைதான், ஒரு தெய்வம்தான் இருக்க வேண்டும்; அதற்கு எந்த எதிர்ப்பும் கூடாது என்று கருதுகிறார். மசோதாக்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற போர்வையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுக்களின் பரிசீலனைகளுக்கே மசோதாக்கள் அனுப்பப்படுவதில்லை.
புதிய மசோதாக்கள் கூடுதல் அவை நடவடிக்கையாக அவையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சில சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதா, நிதி மசோதா என்ற பெயரில் கொண்டுவரப்படுகின்றன. மாநிலங்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால் எதிர்க் கட்சிகள் அதைத் தடுத்து நிறுத்திவிடும் என்பதற்காக ‘நிதி மசோதா’ என்று கூறுகின்றனர். அது மாநிலங்களவையில் தோற்றாலும் மீண்டும் மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றி சட்டமாக்கிவிடலாம்.
பதுங்கலும் பாய்ச்சலும்
புதிய நாடாளுமன்றத்தின் முதல் இரு தொடர்களில் எதிர்க் கட்சிகள் நிதானம் காத்தன. ஆனால், 2014 குளிர்காலக் கூட்டத் தொடரிலிருந்து தாக்குதலில் இறங்க ஆரம்பித்துவிட்டன. சமீபத்திய நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 திருத்தங்களை எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து கொண்டுவந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 முறைதான் இப்படி நடந்திருக்கிறது. இந்த முறை இப்படி நடக்க தன்னுடைய ‘அரிதான உரை’யில் காங்கிரஸையும் கம்யூனிஸ்ட்டுகளையும் வம்புக்கு இழுத்த மோடியின் பேச்சே காரணம்.
இந்த திருத்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த சீதாராம் யெச்சூரி, “நான் பேசுவதை மோடி கேட்க இங்கிருந்தால் திருத்தத் தீர்மானத்தை விலக்கிக்கொள்வேன். ஆளும் தரப்பினர் மோதலை விரும்புகின்றனர், எனவே, மோதிப்பார்ப்போம்” என்று கூறி அதில் உறுதியாக இருந்தார். ஒருவரே எல்லாம் என்ற பிரதமரின் யுகத்தில் எதற்கும் தயார் அணுகுமுறையில் எதிர்க் கட்சிகள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதுதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக