Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 25 மே, 2015

நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? – வி. களத்தூர் ஃபாரூக்

நம்முடைய சமூகத்தில் இன்று பல்வேறு கருத்துகளை (மட்டுமே) தெரிவிக்கக்கூடிய சகோதரர்கள் பெருகி வருகிறார்கள். முஸ்லிமாக சமூகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு, அதற்கான செயல்திட்டம் என்ன என்று அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் பேசுகிறார்கள். முகநூலிலே எழுதுகிறார்கள். அதன்படி செயல்படுகிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.
பெரும்பாலான சகோதரர்கள் எந்த அமைப்பிலும் அல்லது களத்திலும் இறங்கி செய்யக்கூடிய பணிகளில் கவனம் செலுத்துவது “தேவை இல்லாத வேலை” என்ற கருத்து உடையவர்களாக இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அனைத்து சகோதரர்களிடம் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல ஆரோக்கியமான கருத்துகள், சிந்தனைகள் உள்ளன. அதை களத்தில் சாதிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்.
என்னுடன் கூட ஒரு நண்பர் அடிக்கடி உரையாடுவார். ஊர் பிரச்னைகள், சமூகம், நாட்டு நடப்பு, அரசியல் எனப் பல தரப்பிலும் விவாதிப்போம். அவரும் பல கருத்துகளை, நல்ல ஆலோசனைகளை கூறுவார். சில சமயம் பலர் செய்யும் விஷயங்களில் இதை இப்படி செய்யலாமே, அதை அப்படி செய்யலாமே என்று விமர்சிப்பார்.
நல்ல கருத்துகளை சொல்கிறீர்கள், நீங்களே சில நபர்களுடன் இணைந்து இதை செயல்படுத்தலாமே என்று கேட்டால் “நமக்கேன் வம்பு. நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?” என்று கேட்பார்.
“நமக்கேன் வம்பு” – இதுதான் இன்றைய பிரச்னை. சொல் என்பது வேறு செயல் என்பது வேறு. ஒரு விஷயத்தை இலகுவாக சொல்லிவிடலாம். ஆனால் அதை இலகுவாக செய்ய முடியாது என்று கூட சிலர் சொல்வதை கேட்கிறோம். செயலில் இறங்கி வேலை செய்ய வேண்டுமானால் நேர இழப்புகள், பொருளாதார இழப்புகள், குடும்ப பிரச்னைகள் எனப் பல பிரச்னைகள் உருவாகும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது.
அதனால் பல்வேறு வகையில் சிந்திக்கும் நாம் செயலில் காட்ட தயங்குகிறோம். அதனால் ஒரு உபயோகமும் இந்த சமூகத்திற்கு இல்லை. சிந்திக்கும் திறமையை எல்லோரும் சரியாக பயன்படுத்துவதில்லை. “சிந்தனையின் முடிவு செயல்தான்” என்கிறார் ரோலண்ட்.
இன்று முகநூலிலே எப்போதும் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் பலர். அவர்களில் பெரும்பாலானோர் களத்திற்கு வருவதில்லை. நமது கடமை கருத்து சொல்வதுதான் என்று நினைத்து விடுகிறார்கள் போல.
“செயலுக்கு வழி காட்டாத எல்லா சிந்தனையும் குறைப்பிரசவம், துரோகம்” என்கிறார் ரோலண்ட். மேலும் “நாம் சிந்திக்கக்கூடியவர்கள் என்றால் ஏன் செயல்வீரர்களாக இருக்க முடியாது?” என்று அழுத்தமாக அவர் பதிவு செய்கிறார்.
இன்று உண்மையில் செயலில் இறங்குவது மிகச் சிலரே. அதுவே இந்தச் சமூகத்திற்கு பாதுகாப்பாகவும், சமூகத்திற்கு சில நன்மைகளையும் தருகிறது என்றால் பலரும் செயலில், களத்தில் இறங்கினால் எப்படி இருக்கும்!
செயல், களம் என்று சொன்னால் உடனே தெருவில் இறங்கிப் போராடுவது என்றும் மட்டும் பொருளல்ல. மாறாக தனக்கு எந்த வகையில் சமூகத்திற்கு உழைக்க முடியுமோ அந்த வகையில் உழைக்க அனைவரும் முன்வர வேண்டும்.
உதாரணத்திற்கு எழுத்துத் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமூக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை பொது வெளியில் வெளிக்கொண்டு வருவது அவசிய தேவையாகும்.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அந்தக் காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் பழங்குடியின மக்களை அதிரடிப்படையினர் எப்படி சித்திரவதைகள் செய்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள் என்ற விஷயம் பொது வெளியில் வந்தது தோழர். ச. பாலமுருகன் எழுதிய “சோளகர் தொட்டி” என்ற நூலின் மூலம்தான். அதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் பிரச்னைகளை, அவர்களின் வழிகளை பலரும் உணர்ந்து குரல் கொடுக்க முன்வந்தார்கள். இதுபோல எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.
நம் எல்லோருக்குள்ளும் பல சிந்தனைகள், கருத்துகள், நல்ல பல ஆலோசனைகள் இருக்கின்றன. அதை செயலில் காட்ட வேண்டிய தேவை இன்று அதிகமாக இருக்கிறது.
இறுதியாக பண்டிதர் நேருவின் சரித்திரத்தை புரட்டும்போது வாசித்ததை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்:
“சிந்தனை மற்றும் கற்பனை உலகத்தில் வசிப்பதும் சுலபமான காரியம். ஆனால் மற்றவர்களுடைய துயரத்தை கண்ட பிறகும் உதவி செய்யாமல் தப்புவதற்கு முயற்சி செய்வது அவர்கள் எப்படி கஷ்டப்பட்டாலும் நமக்கென்ன என்று நினைப்பது துணிவு அல்லது சகோதர உணர்ச்சியின் சின்னமல்ல. சிந்தனை சரியானதென்றால் அது செயலுக்கு வழிகாட்ட வேண்டும்.”
வாருங்கள்!
சிந்தனைக்கான களம் நிரம்பி வழிகிறது!
செயலுக்கான களம் ஏங்கி நிற்கிறது!!

1 கருத்து:

  1. பெயரில்லா26 மே, 2015 அன்று 10:17 AM

    Ida patri Neenga solreenga sama comedy !

    itthana varusatthile Neenga sadichadu yenna ?

    Please publish!
    Summa sonna patthadu.

    பதிலளிநீக்கு