நாடு முழுவதும் ஜிஹாதிய நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி பிப்ரவரி 2008ல் கர்நாடகா காவல்துறை 17 நபர்களை கைது செய்தது. தற்போது இவர்கள் நிரபராதிகள் என்று ஏப்ரல் 30 அன்று விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் யஹ்யா கம்முகுட்டி.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யஹ்யா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்.
பெங்களூரில் உள்ள விப்ரோவில் பணியாற்றினார். இவர்களை சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி காவல்துறை கைது செய்தது. தற்போது இதுதான் யஹ்யாவின் அடையாளமாக உள்ளது. வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி கோபால் கிருஷ்ண கோல்லி, யஹ்யாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியுள்ளதாக கூறி அவரை விடுவித்துள்ளார். அத்துடன் காவல்துறையின் கூற்றில் உள்ள பல குழப்பங்களையும் நீதிபதி கோடிட்டு காட்டியுள்ளார்.ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யஹ்யா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்.
பெங்களூரில் உள்ள குரப்பனபாளைய என்ற இடத்தில் வைத்துதான் இன்ஸ்பெக்டர் ஒருவர் யஹ்யாவை கைது செய்துள்ளார். ஆனால் அவரின் அடையாளத்தையோ அல்லது புகைப்படத்தையோ விசாரணை அதிகாரியான எஸ்.எஸ். கோட்டே அந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கவில்லை. குரப்பனபாளைய பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தனர் என்றும் யஹ்யாவை சாலையில் வைத்து கைது செய்ததாகவும் விசாரணை அதிகாரி பின்னர் தெரிவித்தார். மேலும் தன்னுடைய விசாரணையை தவிர்த்து சிமி இயக்கத்துடன் யஹ்யாவை தொடர்பு படுத்தும் வேறெந்த ஆதாரமும் இல்லை என்றும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், யஹ்யா மீது நடத்தப்பட்ட உண்மை அறியும் சோதனையின் அறிக்கை தாங்கிய சிடியை விசாரணை அதிகாரியிடம் மருத்துவர் ஏன் கொடுத்தார் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்துடன் ரகசிய கூட்டங்கள் நடைபெற்ற கோவா மற்றும் ஹூப்ளி ஆகிய இடங்களுக்கு யஹ்யா சென்றார் என்ற காவல்துறையின் கூற்றை அரசு தரப்பு சாட்சிகள் மறுத்தனர்.
1990களின் ஆரம்பத்தில் சிமி இயக்கத்துடன் தான் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொள்ளும் யஹ்யா, வேலை கிடைத்து பெங்களூர் வந்த பிறகு அந்த இயக்கத்துடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். 2001ல் சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட பிறகு அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.
கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து நவம்பர் 2010ல் வழக்கு விசாரணை ஆரம்பித்ததாக கூறுகிறார். மூன்று வருடங்கள் கழித்துதான் ஏதேனும் தவறை செய்தேனா என்று கேட்டார்கள் என்று விரக்தியுடன் கூறுகிறார். பின்னர் நான்கு வருடங்கள் நடைபெற்ற விசாரணையிலும் தடைகளும் குழப்பங்களும் இல்லாமல் இல்லை. வீடியோ கான்ஃபரன்ஸ் சாதனங்கள் வேலை செய்யவில்லை என்று கூறி ஒன்பது மாதங்கள் விசாரணையை நிறுத்தியுள்ளார்கள். அரசு தரப்பு சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக அடையாளம் கூட காட்டவில்லை என்பதையும் யஹ்யா சுட்டிக் காட்டுகிறார்.
விசாரணை மந்தமாக நடைபெறுவது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி யஹ்யா ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த காலக்கட்டத்தில் 17 நாட்களில் 107 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் யஹ்யாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்தில் வெறும் பத்து முதல் பதினைந்து நபர்களை மட்டுமே விசாரணை செய்தனர்.
இன்று தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என்று நிரூபிக்கப்பட்டதை குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும் தான் இழந்த ஏழு வருடங்களை திரும்ப யார் தருவார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் யஹ்யா.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மூவரை தவிர்த்து மற்றவர்கள் மீது ஏனைய வழக்குகள் இருப்பதால் அவர்கள் தொடர்ந்து சிறையில்தான் இருப்பார்கள்.
மே 10, 2008 அன்று இவர்களை ஹூப்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் அன்றைய தினம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதன் பழியும் முஸ்லிம்கள் மீதே சுமத்தப்பட்டது. ஆனால் விசாரணையின் போது இந்துத்துவ இயக்கங்களின் துணையுடன் ஜம்பாகி என்பவன்தான் இதனை செய்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த வருடம் சிறையில் நடைபெற்ற ஒரு மோதலில் ஜம்பாகி தாக்கப்பட்டதில் மரணம் அடைந்தான்.
(புகைப்படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ். புகைப்படத்தில் வலமிருந்து இரண்டாவது நபர் யஹ்யா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக