Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 27 மே, 2015

புறம்போக்கு (எ) பொதுவுடமை: திரையில் ஒரு மாற்றம்!


தமிழ் சினிமாக்களின் வழக்கமான மசாலா கதைகளுக்கு மாறாக புரட்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம்.

மாஸ் ஹீரோவுக்கான ஓப்பனிங் பாடல்களோ , நிறத்தையும் வர்க்கத்தையும் கிண்டல் செய்யும் காமெடி காட்சிகளோ, ஒரு வெள்ளைத்தோல் பெண்ணின் பின்னால் அலையும் நவயுக இளைஞனையோ காட்டாமல் படத்தின் துவக்கமே இந்தியாவின் ஆயுத மற்றும் மின்னணு கழிவுகளை பற்றிய எச்சரிக்கையுடன் துவங்கிறது.
இத்திரைப்படம் முழுக்க மாவோ சிந்தனையுள்ள ஓர் இயக்கத்தையும் சிறைச்சாலைகளையும் களமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை தாக்க முற்பட்டதற்காக ஓர் ஆயுதம் தாங்கிய போராட்ட குழுவை சார்ந்த பாலு என்ற ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் போது என்னை ஒரு போர் கைதியாக பாவித்து சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மூன்று தூக்குகள் என்று தண்டனை எழுதப்படுகிறது. மேலும் தூக்கிலிடுவதற்கு மிகவும் கைதேர்ந்த நபரைக் கொண்டுதான் தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவும் பிறப்பிக்கிறது.
அதன்படி பரம்பரையாக தூக்கு போடும் தொழில் செய்யும் லிங்கம் என்ற நபரை தேர்ந்தெடுக்கிறார் சிறைத்துறை DIG மெக்காலே. அதே நேரத்தில் இந்தத் தூக்குத்தண்டனை நிறைவேறக்கூடாது என அந்தப் புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்கு இரண்டு திட்டத்தை வகுக்கிறார்கள். ஒன்று பாலுவை தப்பிக்க வைப்பது. மற்றொன்று லிங்கத்தை கொலை செய்வது.
லிங்கம் ஒரு குடிகாரன். 24 மணி நேரமும் போதையில் இருக்கக்கூடிய இரயில்வே தொழிலாளி. அவனை மெக்காலே அழைத்துச் சென்று குடிக்க வைத்து விவரத்தை சொன்னவுடன் பித்து பிடித்தது போல மாறி விடுகிறான். பயம் தொற்றிக் கொள்கிறது. லிங்கம் சரியான சாப்பாடு, தூக்கமில்லாமல் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறான். இந்நிலையில் லிங்கத்தை அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய முயற்சிக்கும்போது அவன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறான்.
அவனைக் காப்பாற்றி தன்னுடன் இணைத்துக்கொள்கிறார்கள் குயிலி தலைமையிலான அந்த இயக்கத்தவர்கள். லிங்கம் இனி எவருக்கும் தூக்கு மாட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததை புரட்சிகர இயக்கம் பயன்படுத்துகிறது. அதை வைத்தே பாலுவை தப்பிக்க வைக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.
அந்த இயக்கத்தின் தலைவியான குயிலியின் திட்டப்படி லிங்கம் தூக்கு போட ஒத்துக்கொள்வது போல நடித்து சிறைக்குள் சென்று பாலுவிடம் மறைமுகமாக திட்டத்தை சொல்கிறான். ஆனால் பாலுவோ தான் சாகப் போகிறோம் என்ற பயமில்லாமல் சிறையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறார். பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத தூக்கு மேடையை சுத்தம் செய்ய லிங்கம் புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களை உள்ளே அழைக்க முற்படும்பொழுது அதை மெக்காலே திட்டவட்டமாக மறுத்து சிறைக் கைதிகளை வைத்தே வேலையை செய்யச் சொல்கிறார். தன் திட்டம் தகர்ந்து விட்டதை இயக்கத்திற்கு தெரிவித்து அடுத்த திட்டத்தை நோக்கி நகர்கின்றனர். சிறைக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள கண்கானிப்பு கேமராக்களை ஹேக் செய்து அதன் கட்டுப்பாடுகளை தன்வசமாக்கிக்கொள்கின்றனர், புரட்சிகர இயக்கத்தின் கணிப்பொறி வல்லுனர்கள்.
இதனிடையில் பாலுவை மக்கள் ஏன் நல்லவர்களாக பார்க்கின்றனர் என்ற லிங்கத்தின் கேள்விக்கு மெக்காலே நேரடியாக பாலுவிடத்திலேயே தான் செய்த குற்றங்களை கேட்டறிய சொல்கிறார். பாலு தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்.
இராஜஸ்தானில் கடுமையான பஞ்சம் நிலவிய காலம் அது. அரசாங்கம் மக்களுக்காக தானியங்களை வழங்க ஏற்பாடு செய்தது. ஆனால் அதை அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துள்ளனர். அதனைக் கடத்தி மக்களுக்கு கொடுக்கிறார் பாலு. அதன் பின் இந்தியாவில் வல்லரசு நாடுகள் தங்கள் ஆயுதக் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்படப் போகும் அழிவினை தடுப்பதற்காக குயிலி மனித வெடிகுண்டாக மாறுகிறார். ஆனால் இறுதியில் பாலுவே மனித வெடிகுண்டாக மாறி இராணுவத்தின் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். இந்தப் பின்னணி குயிலியின் மூலம் லிங்கத்திற்கு தெரிய வருகிறது.
பல கட்ட முயற்சிகளுக்குப் பின் ஆப்ரிக்க கைதிகள் இடமாற்றம் செய்யப்படும்பொழுது அவர்களுடன் சேர்ந்து பாலுவும் தப்பிக்கிறார். ஆனால் அந்த முயற்சியும் மெக்காலேயால் முறியடிக்கப்படுகிறது. பின்னர் உடனடியாக தூக்கு நாள் குறிக்கப்படுகிறது.
இந்நிலையில் தூக்கு நிறைவேற்றப்படும் தினத்தன்று பாலுவைக் காப்பாற்றி விடலாம் என்று நினைகின்றனர். ஆனால் மெக்காலேயின் சதியால் இரண்டு நாட்களுக்கு முன்பே தூக்கு நிறைவேற்றப்படுகிறது. ஆயுதக் கலாச்சாரம் இல்லாமல் இங்கு மக்களின் உரிமைக்காக போராடும் பலருக்கும் இதுதான் நிலைமை.
பாலுவாக ஆர்யாவும், குயிலியாக கார்த்திகாவும், லிங்கமாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கின்றனர். சினிமாவிலும் புரடசி என்ற புதுவேட்கையை விதைத்திருக்கிறார் இயக்குனர் ஜனார்த்தனன். அவரது முந்தைய படங்களும் இதுபோல சமூக நோக்கங்களை பேசியவையே. ஆனால் இந்தப் படத்தில் தெளிவான நேரடி அரசியலை பேசியிருப்பதற்கு அவரை பாராட்டலாம்.
இந்தியாவில் வாழும் உரிமை இழந்த மக்களுக்காக போராடுவதற்காக பல்வேறு அமைப்புகள் இயங்குகின்றன. அந்த இயக்கங்களை இந்திய அரசாங்கமும், காவல்துறையும் எப்படி பார்க்கின்றனர் என்பதை தெளிவாக சொல்லியிருக்கின்றனர். தன்னுடைய சொந்த மக்கள் பசியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று அரசாங்க கொள்ளையர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தானிய இரயிலை கடத்தி மக்களுக்கு செல்ல வேண்டிய தானியங்களை மக்களுக்கு கொடுக்கும் செயலைத்தான் இன்று தேசத்துரோக குற்றமாக பார்க்கின்றனர்.
முறையாக நீதிமன்ற உத்தரவுப்படி மக்களுக்கு சேர வேண்டிய நியாயமான உணவுகளை மக்களுக்கு அளிப்பதுதான் இன்று குற்றம் என்று சொல்லப்படுகிறது.
தங்களுக்கு வழக்கு கிடைக்கவில்லை என்பதற்காக சாலையோரத்தில் அனாதையாக படுத்துத் தூங்கும் அப்பாவிகளைப் பிடித்து அவர்களை தடாவிலும், பொடாவிலும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் UAPAவிலும் கைது செய்து, சிறையிலடைத்து, வெறும் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, தன் மனைவி, பெற்றோர், குழந்தைகளை இழந்து, குறிப்பாக தன் இளமைக் காலத்தை இழந்து இறுதியில் அவர் குற்றமற்றவர் என்று விடுதலையான பின்பும் இந்தச் சமூகம் அவருக்கு அளிக்கக்கூடிய வெகுமதி சமூகப் புறக்கணிப்புதான்.
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக போராடக்கூடிய போராளிகளையும், போராட்ட இயக்கத்தையும் தேசத்துரோகியாக பாவித்து அவர்களுக்கு மரண தண்டனை அளித்து தன் அரிப்பை அடக்கிக் கொள்கிறது ஆதிக்க வர்க்கம். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை மரண தண்டனை இலட்சியத்திற்கோ, புரட்சிக்கோ முடிவல்ல. இலட்சியவாதிகள் தூக்கிலிடப்பட்டாலும் இலட்சியத்தை ஒருபோதும் தூக்கிலிட முடியாது. புரட்சியாளர்கள் தூக்குக் கயிற்றை முத்தமிடுவதை விட துப்பாக்கிக் குண்டுகள் தன் நெஞ்சை கிழிப்பதையே விரும்புகிறார்கள்.
இவை அனைத்துமே இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதனை திரைக்குக் கொண்டு வந்த துணிவு இயக்குநர் ஜனாத்தனன் அவர்களுக்கு இருந்திருக்கிறது. வழக்கம் போல பொழுதுபோக்காக இல்லாமல் தமிழ் சினிமாவில் நல்லதொரு புரட்சியை இளைஞர்கள் மத்தியில் பரப்பிய பெருமை இப்படத்தையே சாரும். “மக்கள் உரிமைகளை மக்கள் பெறுவதற்காக போராடுகிறவர்கள் தீவிரவாதிகள் என்றால் நானும் தீவிரவாதியே!” என்ற முழக்கத்தை ஒவ்வொரு இளைஞனும் தன் நெஞ்சில் ஏந்தி தன் வாழ்வில் ஒரு பகுதியை நீதிக்கான போராட்டத்தில் செலுத்தாத வரை நமக்கும் நீதியென்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
நெல்லை ஆதில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக