பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டமும், புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் துறைமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குதரத்துல்லா தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, பொதுச்செயலாளர் அப்துல்சமது, பொருளாளர் பி.எம்.ஆர்.சம்சுதீன், மாநில துணை தலைவர் குணங்குடி அனிபா, துணை பொதுச்செயலாளர் ஹமீது, மாநில செயலாளர் ஹாஜாகனி, கோவை சையது, மூத்த தலைவர் ஹைதர் அலி ஆகியோர் பேசினார்கள். ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான ஜவாருல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
அனுமதி வழங்கக்கூடாது
தமிழக முதல்-அமைச்சராக 5-வது முறையாக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவிற்கு இக்கூட்டம் வாழ்த்து தெரிவிக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் என்பது உயர்த்தப்படும் என்று அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. அதை 7 சதவீதமாக உயர்த்தி அறிவித்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையாளம், தெலுங்கு, உருது போன்ற சிறுபான்மை மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் தருவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாரணமங்கலத்தில் அமைந்துள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் நிலக்கரியை பயன்படுத்தி 50 மெகாவாட் அனல் மின் நிலையம் உற்பத்தி திட்டம் சுற்றுப்புற சூழலுக்கும், பொதுமக்கள் வாழ்வு ஆதாரத்தை சிதைக்கும் வகையிலும் எதிர்நோக்கி இருப்பதால், இந்த திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கக்கூடாது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் இலியாஸ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக