Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 மே, 2015

வியாபாரம் அல்ல உங்கள் குழந்தையின் படிப்பு ...

பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தில் மாணவர்களுக்கு இணையாக பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு. பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களால் அடைய இயலாத
கனவுகளை தங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசை. நடுத்தர, ஏழை வர்க்கத்தினருக்கு தாங்கள் படும் சிரமங்களை தங்கள் குழந்தை படக்கூடாது என்று பயம். இன்னும் சிலருக்கோ ‘உயர்வான கல்வி’ (மருத்துவம், பொறியியல்) என்று பெரும்பான்மை பொது சமூகம் வரையறுத்த கல்வித் தகுதிகளை எப்படியாவது தங்கள் குழந்தைகள் அடைந்துவிட வேண்டும் என்று நோக்கம். அரிதினும் அரிதாக வெகு சிலரே தங்கள் குழந்தையின் விருப்பம் அறிந்து படிக்க விடுகின்றனர். சரி, என்ன செய்ய வேண்டும் பெற்றோர்?
* உங்கள் குழந்தை உயர் கல்வி பெற வேண்டும். நன்றாக சம்பாதித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்கிற உங்கள் அப்பழுக்கில்லாத எதிர்பார்ப்பு நியாயமானதே. ஆனால், எதிர்பார்ப்பு என்பது வேறு; அழுத்தம் என்பது வேறு. உங்கள் எதிர்பார்ப்பு குழந்தையின் மீதான அழுத்தமாக ஒருபோதும் மாறிவிட வேண்டாம்.
எனவே, இது இல்லை எனில் அது. அது இல்லை என்றால் இன்னொன்று என்று குழந்தைகளுக்கு வாய்ப்புகளை கொடுங்கள். அவகாசம் அளியுங்கள். அவர்கள் சாதிப்பார்கள்.
* எப்போதும் குழந்தைகளிடம் ‘நன்றாக படியுங்கள்’ என்று சொல்லிப் பழகுங்கள். ‘நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும்’ என்று சொல்லாதீர். இயல்பாக புரிந்து கொண்டு படிப்பதே நல்லது. அது உளவியல் ரீதியாக ஆரோக்கியமான அறிவு வளர்ச்சியும்கூட. ஆனால், வெறுமனே மனப்பாடம் செய்து எழுதுவது வாந்தி எடுப்பதைப் போலத்தான். பொறியியல் மற்றும் கணினித் துறை கல்லூரிகளின் பேராசிரியர்கள் சமீப காலமாக சொல்லும் விஷயம் இது: “பிளஸ் 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த நிறைய மாணவர்கள் வளாக நேர்காணல்களில் தோல்வி அடைகிறார்கள். அவர்களை விட குறைந்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அதிகம் தேர்வாகிறார்கள். குறிப்பாக, மதிப்பெண்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வளாக நேர்காணல்களின் தொடக்க சுற்றிலேயே வெளியேறிவிடுகிறார்கள்” என்கிறார்கள்.
* குழந்தையின் படிப்பு வியாபாரம் அல்ல. முதல் போட்டு லாபம் எடுக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். கல்வியை வியாபாரம் ஆக்கிய பாவம் ஒருபோதும் உங்களை சேராதிருக்கட்டும்.
* குழந்தையுடன் நீங்கள் பழகிய இந்த 17 ஆண்டுகளில் அவர்களின் தனித்தன்மை, படைப்பூக்கம், ஆர்வம் என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் அவர்களை சாதிக்க விடுங்கள். இதைப் பற்றி அடிக்கடி ஆலோசிப்பது மூலம் இருதரப்பினருக்கும் தேர்வு முடிவுகள் குறித்த இறுக்கங்கள், மன அழுத்தங்கள் குறையும்.
* மிக, மிக முக்கியமாக பள்ளி இறுதித் தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் குழந்தைகளுடன் இருங்கள். மிக அதிக மதிப்பெண்களோ, மிகக் குறைந்த மதிப்பெண்களோ இங்கே நீங்கள் மட்டுமே குழந்தைகளின் மகிழ்ச்சி/துக்கம் ஆகியவற்றின் வடிகால் என்பதை மறந்துவிடாதீர்கள்.
* முடிவுகள் எப்படியாக இருந்தாலும் குழந்தைகளை ஊக்குவியுங்கள். தேர்வு முடிவுகளும் வகுப்பின் ஒரு பாடம் தான். பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டதைப்போல தேர்வு முடிவுகளில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுங்கள்.
* தேர்வு முடிவுகளையொட்டி ஒருபோதும் உங்கள் குழந்தையை வேறொரு குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். ஆப்பிள் பழம் ஆப்பிள் பழம் மட்டுமே. அது ஒருபோதும் ஆரஞ்சு ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக