பரோடா பார்சி விடுதியில் பட்டபாடு!
1916-இல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன். உயர் கல்விக்காக மேதரு பரோடா மன்னர் அவர்களால் நான் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். 1913-முதல் 1917-வரை நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நான் பயின்றேன். 1917-இல் இலண்டனுக்குச் சென்ற நான் இலண்டன் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பயிலச் சேர்ந்தேன். ஆனால் என் கல்வியை முடிக்காமல் இடையில் இலண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் நிலை எனக்கு ஏற்பட்டது.
பரோடா சமஸ்தானத்தினால் நான் படிக்க வைக்கப்பட்டேன் என்பதால், அந்தச் சமஸ்தானத்திற்காகப் பணியாற்ற நான் கடமைப்பட்டிருந்தேன். அதன்படி நான் இந்தியாவை வந்தடைந்தவுடன் நேiடியாகப் பரோடாவுக்குச் சென்றேன். நான் பரோடாவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான காரணங்கள் நான் இங்கே சொல்ல வந்த விஷயங்களுக்குத் தொடர்புடையன அல்ல. அதனால் அவற்றைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. பரோடாவில் எனக்கு ஏற்பட்ட சமூக அனுபவங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் நான் அவற்றை விவரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சனையாகவே இருப்பான் என்பதையும் அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்துவிட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது.
விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். நான் பொய் சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். அமெரிக்காவுக்குப் படிக்க வந்த என் நண்பர்கள் பரோடாவில் இருந்தனர். அவர்களிடம் சென்றால் என்னை வரவேற்பார்களா? வரவேற்பார்கள் என்று என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. தங்கள் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவனை அனுமதித்ததற்காக அவர்கள் சங்கடப்பட நேரலாம். எங்கு போவது, என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே சிறிது நேரம் இரயில் நிலையத்திலேயே நின்று நின்றுக்கொண்டிருந்தேன்.
முகாமில் தங்குவதற்கு ஏதேனும் இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் இரயிலில் வந்த அனைத்துப் பயணிகளும் இரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டபடியால் நான் மட்டும் தனியாக இருந்தேன். எந்தச் சவாரியும் கிடைக்காத சில குதிரை வண்டிக்காரர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்த நான், முகாமில் ஏதேனும் தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராட்டுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த உள்ளத்துடனும் அச்சமற்ற மனத்துடனும் எனது சுமைகளைக் குதிரை வண்டியில் வைத்துவிட்டு பார்சி விடுதிக்குச் செல்லுமாறு கூறினேன்.
அந்த உணவு விடுதி இரண்டு மாடிக் கட்டடமாக இருந்தது. தரைத் தளத்தில் பார்சி முதியவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். அவர் அதன் பராமரிப்பாளர்; அத்துடன் அங்கு தங்கும் பயணிகளுக்கு உணவும் அளித்து வந்தார். வண்டி விடுதியை அடைந்ததும் அவர் என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். நான் மேலே சென்றபோது வண்டிக்காரர் எனது சுமைகளை எடுத்து வந்தார். நான் அவருக்குக் கூலி கொடுத்ததும் அவர் சென்றுவிட்டார். தங்குவதற்கு இடமில்லையே என்ற பிரச்சினை தீர்ந்து போனதால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் என் உடைகளைக் களைந்தேன்.
இதற்கிடையில் விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன்.
“எவ்வாறு நீ தங்க முடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வரவேண்டும்” என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பார்சி பெயரை உபயோகப்படுத்திக் கொள்கிறேன் என்று நான் கூறினேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக்கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
நீண்ட காலமாக எந்தப் பயணியும் அங்கு வந்து தங்கவில்லை போலும்; சிறிதளவு பணம் சம்பாதிக்க வந்த ஒரு வாய்ப்பையும் இழக்கவும் அவர் தயாராக இல்லை என்று தோன்றியது. தங்குவதற்கும், உணவு அருந்துவதற்கும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ருபாய் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கே நான் தங்க அவர் ஒப்புக் கொண்டார்; என்னை ஒரு பார்சி என்று அவரது பதிவேட்டில் குறித்துக் கொண்டார். அவர் கீழே இறங்கிச் சென்றதும் நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். பிரச்சனை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை. இந்த விடுதியில் நான் தங்கியிருந்ததற்கு ஏற்பட்ட சோகமான முடிவைப் பற்றி விவரிக்கும் முன்பாக, அங்கு நான் வாழ்ந்த குறுகிய காலத்தில் நான் எனது நேரத்தை எவ்வாறு கழித்தேன் என்பதை இங்கே விவரிக்கத்தான் வேண்டும்.
முதல் மாடியில் இருந்த விடுதியில் ஒரு சிறிய படுக்கை அறை இருந்தது. அதனையொட்டி தண்ணீர்க் குழாயுடன் கூடிய ஒரு சிறு குளியறை இருந்தது. எஞ்சியிருந்தது எல்லாம் ஒரு பெரிய கூடம் தான். நான் அங்கே தங்கியிருந்தபோது அந்தப் பெரிய கூடம் முழுவதும் பலகைகள், பெஞ்சுகள், உடைந்த நாற்காலிகள் போன்ற அனைத்து வகையான குப்பைக் கூளங்களால் நிரம்பி இருந்தது. அவைகளுக்கு இடையே நான் ஒருவன் மட்டும் தனி ஆளாக வாழ்ந்து வந்தேன். காலையில் விடுதிக்காப்பாளர் தேநீருடன் மாடிக்க வருவார். எனது காலைச் சிற்றுண்டி அல்லது உணவுடன் 9.30-மணிக்கு மறுபடியும் வருவார். இரவு எனக்காக உணவுடன் 8.30-மணிக்கு மூன்றாம் முறையாக அவர் வருவார். அவர் தவிர்க்க இயலாத நேரங்களில் மட்டுமே மேலே வருவார். அப்படி வந்தாலும் என்னுடன் அவர் பேசுவதற்கு தயங்கியதேயில்லை. எப்படியோ நாள்கள் கழிந்தன.
பரோமா மன்னரின் அக்கவுண்டன்ட் ஜெனரால் அலுவலகத்தில் நன்னடத்தைக் காலப் பணியாளராக நான் நியமிக்கப்பட்டேன். அலுவலகத்துக்குச் செல்ல காலை 10-மணி அளவில் விடுதியை விட்டுப் புறப்படுவேன்; அலுவலகம் முடிந்த பின் என்னால் வெளியில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ, கழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் என் நண்பர்களுடன் கழித்துவிட்டு இரவு 8-மணி அளவில்தான் விடுதிக்குத் திரும்புவேன். இரவைக் கழிக்க விடுதிக்குத் திரும்ப வேண்டுமே என்ற எண்ணமே என்னை மிகவும் அச்சுறுத்தியது.
ஓய்வெடுப்பதற்கு வானத்தின் கீழ் எனக்கு வேறு போக்கிடம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அந்த விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். விடுதியின் முதல் மாடியில் இருந்த பெரிய கூடத்தில் பேச்சுத் துணைக்கும் ஒரு மனிதரும் கிடையாது. நான் தனிமையில் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கூடம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இருளைப் போக்க மின் விளக்கோ, எண்ணெய் விளக்கோ கூட இருக்கவில்லை. எனது உபயோகத்துக்காக விடுதிக் காப்பாளர் ஒரு சிறிய அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வருவார். அதன் வெளிச்சம் சில அங்குல தூரத்துக்கு மேல் விழாது. ஏதோ ஒரு நிலவறையில் இருப்பதைப் போல் உணர்ந்த நான், பேசுவதற்கு மனிதர் எவராவது கிடைக்க மாட்டாரா என்று ஏங்கி இருந்தேன். ஆனால் எவரும் கிடைக்கவில்லை. மனிதர் நட்பு கிடைக்காமல் போன நிலையில் நான், புத்தகங்களை நாடினேன்; எப்போது பார்த்தாலும் நான் படித்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு படிப்பதில் மூழ்கி இருந்த நான் எனது தனிமையை மறந்தேன்.
ஆனால் அக்கூடத்தைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட வவ்வால்கள் பறப்பதும், கீச்சிடுவதுமான ஓசைகள் எனது கவனத்தைத் திசைதிருப்பி நான் எதை மறக்க நினைத்தேனோ விந்தையானதொரு இடத்தில் விந்தை நிறைந்த ஒரு சூழ்நிலையில் நான் இருப்பதை நினைவுபடுத்தி என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அது நிலவறை போன்றிருந்தாலும், அது தங்குவதற்கான ஓர் இடம் என்பதால், எந்த இடமும் இல்லாத நிலையில் அந்த இடமாவது இருக்கிறதே என்ற எண்ணத்தால் என் வருத்தத்தையும், கோபத்தையும் நான் அடக்கிக் கொண்டேன்.
நான் பரோடா வரும்போது பம்பாயில் விட்டுவிட்டு வந்த எனது எஞ்சிய பொருள்களை எடுத்துக் கொண்டு வந்த என் அக்கா மகன் மனதை வருத்தும் என் நிலையைக் கண்டு பெருங் குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டான். அவனை நான் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. இந்த நிலையில் அந்தப் பார்சி விடுதியில் ஒரு பார்சி போல என்னைக் காட்டிக் கொண்டு நான் வாழ்ந்து வந்தேன். இவ்வாறு பார்சி போல காட்டிக் கொண்டு நீண்ட நாள்கள் அங்கே தங்கியிருக்க முடியாது என்பதையும், என்றாவது ஒரு நாள் நான் பார்சி இல்லை என்பது தெரியப் போகிறது என்பதையும் நான் அறிந்தே இருந்தேன். அதனால் அரசு வீடு ஒன்றைப் பெற நான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால் பிரதம மந்திரியோ என் கோரிக்கையை நான் நினைத்தது போல் அவசரமானது என்று கருதவில்லை. எனது விண்ணப்பம் ஓர் அதிகாரியிடமிருந்து மற்றொரு அதிகாரிக்குச் சென்று கொண்டிருந்தது. எனக்கு இறுதியாகப் பதில் கிடைப்பதற்கு முன் விடுதியை விட்டு நான் வெளியேற வேண்டிய கடுமையான நெருக்கடி எழுந்தது.
நான் விடுதிக்கு வந்து தங்கத் தொடங்கிய 11-ஆவது நாள் அன்று காலை உணவை முடித்துக் கொண்டு உடை உடுத்திக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல எனது அறையை விட்டு வெளியே வந்தேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக அவற்றை நான் கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது, பெரும் எண்ணிக்கைக் கொண்ட மனிதர்கள் மாடிப்படிகளில் ஏறி வரும் ஓசை கேட்டது. தங்குவதற்காக வந்துள்ள சுற்றுலாப் பயணிகளாக அவர்கள் இருப்பார்கள் எனக் கருதிய நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப் பார்வையுடன், உயரமான தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர்.
என் அறை முன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூறமுடியவில்லை. என் போலித்தனத்தை என்னால் தொடர முடியவில்லை. உண்மையிலே நான் செய்தது ஒரு மோசடிதான்; என் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. நான் ஒரு பார்சி தான் என்று கூறி அந்த விளையாட்டைத் தொடர்ந்திருந்தால் கோபம் கொண்டிருந்த வெறி பிடித்திருந்த அந்தப் பார்சிக் கூட்டம் என்னைத் தாக்கி சாகடித்திருப்பார்கள் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
எனது அடக்கமும், அமைதியும் இந்த அழிவைத் தவிர்த்தது. எப்போது காலி செய்யப்போகிறாய் என்று அவர்களில் ஒருவர் கேட்டார். அப்போது எனது தங்குமிடத்தை எனது உயிரை விட மேலானதாக மதித்தேன். அக்கேள்வியில் பொதிந்திருந்த கருத்து கடுமையான ஒன்று. அதனால் நான் மவுனத்தைக் கலைத்து, இன்னும் ஒரு வாரம் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்குள் வீடு கேட்டு நான் அளித்த விண்ணப்பத்தின் மீது சாதகமான முடிவு ஏற்பட்டு விடும் என்று நான் கருதினேன். ஆனால் நான் கூறுவதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அந்தப் பார்சிகள் இருக்கவில்லை. அவர்கள் எனக்குக் கெடு நிர்ணயித்தார்கள். “மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன். எனது தங்குமிடம் என்றும், எனது மதிப்பு மிகுந்த உடைமை, எனக்கு மறுக்கப்பட்டது. அது சிறைக் கைதியின் அறையை விட எந்த விதத்திலும் மேலானதல்ல; என்றாலும் அது எனக்கு மதிப்பு மிகுந்ததாகவே இருந்தது.
அந்தப் பார்சிகள் சென்ற பிறகு இதிலிருந்து மீள ஒரு வழியைக் கண்டுபிடிப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டு சிறிது நேரம் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். விரைவில் அரசு வீடு ஒன்று கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; அவ்வாறு கிடைத்துவிட்டால் என் தொல்லைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதனால் இப்போது எனக்கு உள்ள பிரச்சினை ஒரு தற்காலிகப் பிரச்சினைதான்; அதனால் நண்பர்களிடம் செல்வது இதற்குத் தகுந்த தீர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன். பரோடா சமஸ்தானத்தில் தீண்டத்தகாதவர்களாக உள்ள நண்பர்கள் எவரும் எனக்கு இல்லை. ஆனால் மற்ற சமூகங்களைச் சேர்ந்த நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்து மற்றொருவர் இந்தியக் கிறிஸ்தவர். முதலில் இந்து நண்பர் வீட்டுக்கு நான் சென்று எனக்கு நேர்ந்ததை நான் கூறினேன். அருமையான மனிதரான அவர் என் கதையைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார் என்றாலும் அவர் ஒன்று மட்டும் கூறினார். “என் வீட்டிற்கு நீ வந்தால், என் வேலைக்காரர்கள் போய்விடுவார்கள்” என்று கூறினார். அவர் கோடிட்டுக் காட்டியதைப் புரிந்து கொண்ட நான் எனக்கு இடம் தருமாறு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியக் கிறிஸ்தவ நண்பர்களிடம் செல்ல நான் விரும்பவில்லை. தன்னுடன் வந்து தங்கும்படி அவர் என்னை முன்பொரு முறை அழைத்திருந்தார். ஆனாலும் பார்சி விடுதியிலேயே தங்கிக் கொள்வதாகக் கூறி அவர் அழைப்பை நான் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். இதன் காரணம் அவரது பழக்க வழக்கங்கள் என் மனம் எற்பவையாக இருக்கவில்லை என்பததான். இப்போது அங்கு செல்வது நானே கிண்டலை வேண்டிப் பெறுவது போன்றது.
எனவே நான் அலுவலகத்திற்குச் சென்றேன். ஆனால் ஒரு தங்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் இந்த வாய்ப்பை உண்மையில் என்னால் தவீர்த்துவிட முடியவில்லை. ஒரு நண்பரைக் கலந்து பேசிய பின், கிறிஸ்தவ நண்பரைச் சென்று சந்தித்து எனக்குத் தங்க இடம் தருவாரா என்று கேட்க முடிவு செய்தேன். நான் அவரை இவ்வாறு கேட்டவுடன் தன் மனைவி மறுநாள் பரோடா வருவதாகவும் இது பற்றித் தன் மனைவிடம் தான் கலந்து பேச வேண்டும் என்று அவர் பதிலளித்தார். அது ஒரு தந்திரமான பதில் என்பதைப் பின்னர் நான் அறிந்து கொண்டேன். அவரும் அவரது மனைவியும் மதம் மாறுவதற்கு முன் பார்ப்பன ஜாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மதமாற்றத்திற்குப் பின் கணவர் சிந்தனையில் தாராள மனம் கொண்டவராக மாறிவிட்டபோதும், மனைவி பழைமையான வழிகளிலேயே இருந்தார் என்பதும், தன் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவர் தங்க மனைவி இடம் அளிக்கமாட்டார் என்பதும் தெரிய வந்தது. இவ்வாறு எனது கடைசி நம்பிக்கையும் கருகிப் போனது. எனது கிறிஸ்தவ நண்பரின் வீட்டை விட்டுப் புறப்படும்போது மாலை 4-மணி ஆகிவிட்டது. எங்கே செல்வது என்பது ஒன்றே என் முன் இருந்த மாபெரும் கேள்வியாக இருந்தது. நான் பார்சி விடுதியை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்; ஆனால் நான் சென்று தங்குவதற்கு வேறு இடமில்லை. என் முன் இருந்த ஒரே வழி பம்பாய்க்குத் திரும்பிச் செல்வதுதான்.
பரோடாவில் இருந்து பம்பாய் செல்லும் ரயில் இரவு 9-மணிக்குப் புறப்படும். இடையில் நான் அய்ந்து மணி நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. எங்கு அதைக் கழிப்பது? விடுதிக்குச் செல்லலாமா? நண்பனிடம் செல்லலாமா? மீண்டும் விடுதிக்குச் செல்லும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. என் நண்பனிடமும் செல்ல நான் விரும்பவில்லை. எனது நிலை பரிதாபப்படத்தக்கதாக இருந்தபோதும், என்னைக் கண்டு எவரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. காமதி கார்டன் என்று அழைக்கப்படும் பொதுப் பூங்காவில் அந்த அய்ந்து மணி நேரத்தையும் கழிக்க முடிவு செய்தேன். இதுபோன்ற நம்பிக்கை இழந்த நிலையில் குழந்தைகள் நினைப்பதைப் போன்று எனக்கு நேர்ந்ததைப் பற்றியும், என் தாய் தந்தையைப் பற்றியும் எண்ணிக் கொண்டு நான் பூங்காவில் உட்கார்ந்திருந்தேன்.
இரவு 8-மணிக்குப் பூங்காவை விட்டு வெளியே வந்த நான் ஒரு வண்டி வைத்துக் கொண்டு பார்சி விடுதிக்குச் சென்று என் உடைமைகளைக் கீழே எடுத்து வந்தேன். விடுதிக் காப்பாளர் வெளியே வந்தார்; ஆனால் அவரோ நானோ ஒருவரிடம் ஒருவர் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. இத்தகைய துன்பத்திற்கு நான் ஆளானதற்குத் தானும் ஏதோ ஒரு வழியில் காரணமாக இருந்துவிட்டோம் என்று அவர் உணர்ந்தார். அவருக்குச் சேரவேண்டிய பணத்தை நான் கொடுத்தேன். அவர் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டார்; நானும் அமைதியாகவே விடை பெற்றுக் கொண்டேன். பெரும் நம்பிக்கையுடன் பரோடாவுக்குச் சென்ற நான், எனக்குக் கிடைத்த பெரிய பெரிய வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டேன். அது போர்க்காலம். இந்தியக் கல்விப் பணியில் பல வேலைகள் காலியாக இருந்தன. இலண்டனில் உள்ள செல்வாக்கு மிக்க பலரை நானறிவேன். ஆனால் எந்தவித உதவிக்காகவும் அவர்களை நான் நாடியதில்லை. என் கல்விக்குப் பணமளித்து உதவிய பரோடா மன்னருக்குச் சேவை செய்வதே எனது கடமை என்று நான் உணர்ந்திருந்தேன். ஆனால் 11-நாள்கள் மட்டுமே தங்கிவிட்டுப் பரோடாவை விட்டு நான் பம்பாய் திரும்பி செல்ல நேர்ந்தது.
தடிகளைக் கைகளில் ஏந்தி பத்துப் பன்னிரண்டு பார்சிகள் வரிசையாக என் முன் அச்சுறுத்தும் முறையில் நின்று கொண்டிருந்ததும் கருணையை வேண்டியும் அஞ்சிய பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்றிருந்ததுமான காட்சி 18-நீண்ட ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனத்திரையிலிருந்து மறையவே இல்லை. இன்று கூட அந்த நிகழ்ச்சியை என்னால் தெளிவாக நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அதை நினைவுபடுத்திப் பார்த்த எந்த ஒரு நேரத்திலும் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை. ஒரு இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்பவன், ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவன் தான் என்பதை அப்போதுதான் முதல் முதலாக நான் உணர்ந்து கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக