பெரம்பலூர்,ஜன.25:100ஆண்டுகளுக்குப்பிறகு ரஞ்சன்குடிகோட்டையில் கிழக்கு கோட்டைச் மதில் சுவர் சீரமைப்புப்பணி இந்தியத் தொல்லியல்துறை சார்பாக நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில், வி.களத்தூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக் கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின் மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமானப்பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானைமறவன் என்ற குறுநிலமன்னரால் தொடங்கப்பட்டது. இதற்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின்மீது கட்டப்பட்டதால் துருவத்துக்கோட்டை என பல பெயர்கள் உண்டு.
சந்தாசாஹிப்&பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி&ஆங்கிலேய கூட் டுப்ப டைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. சிறப்புமிக்க இக்கோட்டையில் இன்றளவும் கோட்டையைச்சுற்றி அமைக்கப்பட்ட அகழிகள், விதானமண்டபம், பீரங்கிமேடை, கொடிமேடை, தண்டனைக்கிணறு, வெடிமருந் துக்கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர்கள் பிடியிலிருந்தபோது கட்டப் பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், குதிரைலாயம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 152 அடிஉயரமுள்ள கோட்டையின் உச்சியில் அமைக்கப்பட்ட குளம் ஆகியன அழியாமல் உள்ளன.
கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொல்லியத்துறை அலுவலர்கள் இந்தக் கோட்டை யைப் பார்த்து சென்றும், கோட்டைக்கான சீரமைப் புப் பணிகள் முழுமையாக நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்தியத் தொல்லியல் துறையின் தஞ்சைப்பிரிவு உதவி பராமரிப்பு அலுவலர் வாசுதேவன் கோட்டைக்கு வந்து பார்வையிட்டு பரிந்துரைத்த தன் காரணமாக மத்திய அரசின் ஒப்புதல் பெறப் பட்டு படிப்படியாக பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இதன்படி கடந்த 2013 ஜூலை மாதம் தொடங்கி 2014 மார்ச் மாதம் வரை கோட் டைக்குச் செல்கிற படிகள் சீரமைப்பு, புதர் களை அகற்றுதல், கோட் டைச் சுவர்களில் வேரூன் றிய மரக்கன்றுகளை அகற்றுதல் போன்ற பராமரிப்புப் பணிகள், இந்திய தொல்லி யல் துறையின் பராமரிப்பு நிதியை கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மேல்கோட்டையின் கிழக்குப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சரிந்து போயிருந்த கோட்டை மதில்சுவர் சீரமைக்கும் பணி இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு நடந்து வருகிறது.
கோட்டையின் பழமை மாறாமல் இப்பணிகள் நடந்து முடிந்தால் வரலாற்று சிறப்பு மிக்க ரஞ்சன்குடிகோட்டை மேலும் புத்துயிர் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கோட்டையின் முன்பு பூங்காஅமைத்து, குடிநீர்,கழிப்பிட வசதிகளை செய்துகொடுத்தால் வருவாய் தரக்கூடிய சிறந்த சுற்றுலாத்தலமாக இந்தக் கோட்டை மாறும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக