புதுடெல்லி: சமூக ஆர்வலரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான கிரண் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணா நகர் வேட்பாளராக கிரண் பேடி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. மேலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் கிரண் பேடியை தேர்ந்தெடுத்தது பா.ஜ.க.
இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய கிருஷ்ணா நகர் தொகுதிக்கு ஊர்வலமாக சென்ற கிரண்பேடி, அங்குள்ள லாலா லஜபதி ராயின் சிலையை சுத்தப்படுத்தினார். பின்னர், தான் அணிந்திருந்த கட்சியின் சின்னத்தைக் கொண்ட சால்வை ஒன்றை லஜபதி ராயின் சிலைக்கு கிரண் பேடி அணிவித்தார். கிரண் பேடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ”சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள்; அவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை பா.ஜ.க-விற்கோ, காங்கிரசுக்கோ அல்லது மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ பிரிப்பது சரியான செயல் அல்ல. ஆனால், பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கிறார். இது சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டாலும், அவமதிக்காமல் இருக்கலாம்” என்றார்.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத அமைப்பு எனவும், இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் ஆர்.எஸ்.எஸ் பங்கு மிக முக்கியமானது என கிரண் பேடி பேசியதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில், சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டை பெற்ற கிரண் பேடி, தற்போது பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக