விலைபதிப்பில்லாமல் போகும் மனித உயிர்கள்.......
நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில், விபத்தில் சிக்கிய லாரியின் டேங்கரில் இருந்து பாமாயில் எண்ணெய் ரோட்டில் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் வீடுகளில் இருந்து குடம் மற்றும் கேன்களை கொண்டு வந்து, பாமாயிலை பிடித்துச் சென்றனர். இதனால், இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு அவர்கள் சமையல் எண்ணெய் வாங்க தேவையில்லை என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களுக்கு தேவையான எண்ணெய்யை மட்டும் பொதுமக்கள் பிடித்துச் சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை காப்பாற்றவேண்டும் என்ற ஈவு, இரக்கம் கொஞ்சம் கூடஇல்லாமல், நம் மக்களின் மனம் இப்படி கல்நெஞ்சாக மாறிவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர் அவர்கள்.
நன்றி: விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக