“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை“ (அத் தாரியாத் 51:56) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வுக்கு கடமை செய்வது என்பது இரு வகைப்படும். முதலாவது – அவனை, அவனை மட்டுமே வணங்குவது. இரண்டாவது – அவனது படைப்புகளுக்கு சேவை புரிவது.
அதாவது, ஹுகூகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமை), ஹுகூகுல் இபாத் (மனிதகுலத்திற்கு செய்யவேண்டிய கடமை). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (சூரா அன்னிசா 4:36)
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (சூரா அத் தஹ்ர் 76:8)
ஆக, மனித குலத்திற்கு சேவை செய்வது என்பது அல்லாஹ்வை அஞ்சும் மனிதருக்கு இன்றியமையாததாகும்.
கீழ்க்கண்ட வசனம்தான் இஸ்லாம் இயம்பும் சமூக சேவையின் கோட்பாடு, (The Concept of Social Work in Islam). பயபக்தியுடையவர்களின் குணநலன்களை அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளான்.
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள்தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)
தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்புவதுதான் சமூக சேவையின் முதல் படி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.” (புகாரீ)
மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் அந்தச் சகோதரருக்கு அநீதி இழைக்கமாட்டார். அவரை விரோதியிடம் ஒப்படைக்கவும் மாட்டார். எவர் தன் சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறான். எவர் முஸ்லிமின் ஒரு துன்பத்தைப் போக்குகிறாரோ (அதற்கு கூலியாக) அல்லாஹ் அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அதற்காக அல்லாஹ் மறுமை நாளில் அவரது குறைகளை மறைக்கிறான்.” (புகாரீ, முஸ்லிம்)
இறைத்தூதரின் இன்னொரு கூற்று: ”சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும், இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவதும் தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப்பவற்றை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமாகும்.” (புகாரீ, முஸ்லிம்)
சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்க்கும் இஸ்லாம், இஃதிகாஃப் இருப்பதை விட தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதற்காக சில எட்டுகள் நடப்பதை சிறந்ததாக்கியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதற்காக நடக்கிறாரோ அது அவர் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதை விட மேலானதாகும். எவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒரு நாள் இஃதிகாஃப் இருக்கிறாரோ அவருக்கும் நரக நெருப்புக்குமிடையே அல்லாஹ் மூன்று குழிகளை ஏற்படுத்துகிறான். அந்த ஒவ்வொரு குழியும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள தூரத்தை விட அதிக தூரமுடையதாயிருக்கும்.” (இப்னு அப்பாஸ் (ரழி), முஃஜமுத் தப்ரானீ)
இப்படிப்பட்ட புனிதமான சமூக சேவையில்தான் முஸ்லிம்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களில் ஒரு சாரார் இதற்காக தங்களையே அர்ப்பணித்துள்ளனர்.
அவர்கள் ஏழைகளுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார்கள். வசதியற்ற வறியவர்களுக்கு வாழ்வளிக்க பாடுபடுகிறார்கள். வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முனைகிறார்கள். சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு உதவிடவும் முயற்சிகள் பல செய்கிறார்கள்.
பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் இளம் சிறார்களை பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கிறார்கள். அதற்காக பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். வறுமையில் கல்வி பயில இயலாதவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்து படிக்க வைக்கிறார்கள்.
வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு அரசிடமிருந்து உரிய உதவிகளையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்கிறார்கள். கிராமங்கள் தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள்.
இஸ்லாம் போதித்த முறைப்படி தங்கள் வாழ்வை அமைத்துகொண்டுள்ள இவர்களுக்குத்தான் இறைவன் மாபெரும் நற்கூலிகளை வழங்கக் காத்திருக்கிறான். அல்லாஹ் இவர்களுக்கு அவனது அன்பையும், அருளையும் என்றென்றும் பொழிவானாக.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக