தம்மாம் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சுவராஸ்யமான சம்பவம்!
என் சகோதரரின் மகள் திருமணத்திற்காக என் சகோதரியும் அவருடைய இரண்டு மகள்களும் என் இளைய சகோதரரும் தமிழகம் சென்றனர்.
அவர்களை வழி அனுப்புவதற்காக நானும் என் உறவினர்களும் தம்மாம் ஏர்போர்ட் சென்றிருந்தோம். போர்டிங் போடும் கியூவில் நின்று கொண்டிருந்தோம்.
எங்களுக்கு ஒரு ஆறு நபருக்கு முன்பாக ஒரு இந்து சகோதரரும், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். அவர்களும் சென்னை செல்கின்றனர். அப்போது ஒருவர் போய் அந்த இந்து தம்பதியரிடம் ஏதோ கேட்கிறார். பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை.
பிறகு என்னிடம் வந்தவர், “பாய்… என் மனைவி ஊருக்கு செல்கிறார். நாங்கள் அபுகைக்கில் இருக்கிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக என் மனைவியை விசிட் விசாவில் அழைத்து வந்தேன். விசா காலம் முடிந்து விட்டதால் அவரை ஊருக்கு அனுப்புகிறேன். தம்மாம்-கொழும்பு-சென்னை என்பதால் என் மனைவி தனியாக செல்ல பயப்படுகிறார். உங்களுக்கு முன்னால் நிற்கும் இந்து தம்பதியரிடம் என் மனைவி சென்னை செல்லும் வரை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு நாங்களே பிள்ளையும் குட்டியுமாக செல்கிறோம். இதில் இது வேறையா?அதெல்லாம் முடியாது என மறுத்து விட்டனர். அதனால் தயவு செய்து…” என அவர் இழுக்கும்போதே நான் இடைமறித்து, “உங்கள் மனைவியும் என் சகோதரி மாதிரிதான். என் தங்கையுடன் உங்கள் மனைவியையும் சென்னை வரை பாதுகாப்பாக என் தம்பி அழைத்து செல்வார்” என்று கூறியதும் அவரது முகத்தில் ஆயிரம் வாட் வெளிச்சம் மின்னிட்டது.
“நன்றி பாய்…” என்றவரிடம், “முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்னு சொல்லக்கூடிய இந்த காலத்தில் நீங்கள் எப்படி…?” என நான் இழுத்ததும் என்னை இடைமறித்த அவர், “பாய்… மஞ்சள் காமாலைக்காரனுக்குத்தான் காணும் பொருளெல்லாம் மஞ்சளாக தெரியும். முஸ்லிம்களிடம் இருக்கும் மனிதாபிமானம் இந்துக்களிடமே இல்லை என்பதை கொஞ்ச நேரத்துக்கு முன்பே பார்த்து விட்டேன். உங்கள் தங்கையும் பிள்ளைகளுடன்தான் செல்கிறார். உதவி என கேட்டதும் வாஞ்சையுடன் நீங்கள் பேசிய விதம் உங்கள் மார்க்கத்தின் தனிச் சிறப்பை அடையாளப்படுத்தி விட்டது” என்று சொன்னவரை பார்த்து அமைதியாய் சிரித்தேன்.
அவருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி சென்னை ஏர்போர்ட்டில் அவருடைய குடும்பத்தாரிடம் அவருடைய மனைவியை என் உறவுகள் ஒப்படைத்து விட்டு ஊர் சென்றனர். இந்தத் தகவலையும் அவரே எனக்கு போன் செய்து சொன்ன விதம் பாராட்டிற்குரியது. உறவுகள் விரிவடையட்டும். உறவுகள் ஓங்கட்டும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக