மும்பை பல்கலைக்கழகத்தில் துவங்கிய இந்திய அறிவியல் கழகத்தின் 102-வது மாநாடு இந்தியாவின் விஞ்ஞானிகளையெல்லாம் அவமதிக்கும் வகையிலான நாடகங்கள்
அரங்கேறும் மேடையாக மாறியுள்ளது.
அரங்கேறும் மேடையாக மாறியுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவில் அறிவியல்-தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளையும், அனுமானங்களையும் குறித்து ஆய்வுச் செய்யும் மையமாக இந்திய அறிவியல் கழகம் செயல்பட்டு வருகிறது.பிரிட்டீஷ் ஆட்சியில் கூட பல இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான ஆய்வுகள் அறிவியல் மாநாட்டின் மேடைகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.
இந்திய அறிவியல் துறையில் திறமைசாலிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தவும், ஆராய்ச்சித்துறையில் சர்வதேச தொடர்புகளை ஸ்தாபிக்கவும் இது இந்தியாவில் உள்ள அறிவியல் சமூகத்திற்கு உதவியாக இருந்து வந்தது.சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகளான சர் சி.வி.ராமன், சத்தியேந்திரநாத் போஸ் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளெல்லாம் இந்திய காங்கிரஸின் மேடைகளில் நாட்டின் புகழை ஓங்கச் செய்துள்ளனர்.இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை தரத்தக்க சாதனைகளை அவர்கள் உலகிற்கு அளித்துள்ளனர்.
உலக அறிவியல் சமூகம் அவர்களுக்கு அளித்த மரியாதையும், அங்கீகாரமும் நாட்டின் மகத்தான நிமிடங்களாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அறிவியல் உலகில் விவேகமான ஆய்வுகளோ, ஆராய்ச்சிகளோ அல்லாத புராணக்கதைகளையும், கற்பனைகளையும் இன்று அறிவியல் கழக மேடைகளில் சாதனைகளாக முன்னிறுத்தப்படுகின்ற அவலம்.
ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிரகங்களிடையே பறந்து செல்லும் விமானங்களை தயாரிக்கப்பட்டதாகவும், கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் ரேடார் போன்ற தொழில்நுட்ப கலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறும் ஏதோ விமானப் பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் வெளியிட்ட ‘ஆராய்ச்சி(?)’தான் இம்முறை இந்திய அறிவியல் கழக மாநாட்டில் முக்கிய செய்தி. இதைப்போன்ற பல்வேறு புனைவுகள்தாம் அறிவியல் மாநாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பண்டைய இந்தியாவின் அறிவியல் சாதனைகள் தொடர்பான அமர்வில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.மத் திய அமைச்சரான பிரகாஷ் ஜாவேத்கர்தாம் இந்த அமர்வில் முக்கிய பேச்சாளர்.
இதைப்போன்ற பாட்டிக்கதைகள் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை புரிந்துகொள்வதற்கான விவேகமான அறிவையாவது நாட்டின் ஆட்சியளர்கள் வெளிப்படுத்தவேண்டும்.மனிதன் தோன்றிய காலம் முதல் தொட்டே வானில் தோன்றும் நட்சத்திரங்களைக் குறித்தும் கடலின் ஆழத்தைக் குறித்தும் ஆச்சரியமாக பேசிக்கொண்டார்கள்.அங்கு செல்வதற்கான வழிமுறைகளைக் குறித்தும் கற்பனைச் செய்தார்கள்.
கிரேக்க புராணங்களிலும் எகிப்திய கற்பனை காவியங்களில் கூட இத்தகைய ஏராளமான கதைகளை காணமுடியும்.கதைகளை கேட்பது குழந்தைகளுக்கு பிடிக்கலாம்.ஆனால், அறிவு முதிர்ச்சியடைந்தவர்கள் உண்மைகளை குறித்து விழிப்புணர்வு பெறவேண்டும்.
இவ்வாறுதான் உலகம் முன்னேற்றம் அடைந்தது.இந்திய அறிவியல் துறை பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இக்காலக்கட்டத்தில் இந்திய அறிவியல் கழக மாநாட்டில் பாட்டிக்கதைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் அளித்தால், அது இந்திய அறிவியல் துறையையே அவமானிப்பதற்கு சமமாகும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக