“மறுபயன்பாடு (Reuse), குறுபயன்பாடு (Reduce), மறுசுழற்சி (Recycle)” – இதுதான் இன்று சுற்றுப்புறச் சூழலைக் காப்பவர்களின் தாரக மந்திரம்.
நமது வளங்களை மிக மிகக் கவனமாக, எச்சரிக்கையாக, வீணாகா வண்ணம் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். பூமிப் பந்தின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இதனால் பல விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன.
மரங்களை அளவுக்கதிகம் வெட்டுவது, காடுகளை அழித்து நகரங்களாக ஆக்குவது, விவசாய நிலங்களை அழித்து கட்டடங்களாக மாற்றுவது என்று வெப்பம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நமது அனைத்து செயல்பாடுகளும் தட்பவெப்ப நிலையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம் வருங்கால சந்ததியினர் சுபிட்சமாக வாழ வேண்டுமென்றால் நமது நிகழ்கால வளங்களை மிகத் திறமையுடன் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது குறைந்த பயன்பாட்டில் அதிக பலன்களைப் பெற வேண்டும். வீண் விரயம் வீட்டுக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல.
இஸ்லாம் இதனை வலியுறுத்தி நிற்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
உண்ணுங்கள். பருகுங்கள். எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 7:31)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பெருமையும், வீண் விரயமும் அமையாத வரைக்கும் உணவையும், குடிப்பையும் அல்லாஹ் ஆகுமானதாக ஆக்கியுள்ளான்.” (இப்னு ஜரீர்)
உணவு உண்டுகொண்டிருக்கும்பொழுது சிந்தும் உணவை சுத்தம் செய்து உண்ணச் சொல்கிறார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். சிந்தும் சிறு உணவைக் கூட வீண் விரயம் செய்ய இஸ்லாம் அனுமதித்திடவில்லை.
“உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதைச் சுத்தம் செய்து விட்டு சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். (முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதீ)
உணவுக்கே இந்த நிலை என்றால் பிற பொருட்களுக்கு? எனவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வீணாகக் குப்பையில் கொட்டாமல் மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம். மறுபயன்பாட்டுக்குப் பல வழிகள் உள்ளன. நமது பொருட்களை வீணாக்காமல் மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற மனநிலை மட்டும் நமக்கிருந்தால் போதும். வழிகள் தானாகப் பிறக்கும்.
காகிதங்கள் மரங்களை அழித்தே செய்யப்படுகின்றன. மரங்கள் அழிவது குறைய வேண்டும் என்றால் அவற்றால் உருவாக்கப்படும் காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். எழுதிய முகவரிக்கு மேல் புதிய முகவரியை ஒட்டி, கடித உறையை மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு பக்கம் பயன்படுத்தப்பட்ட தாளைக் குப்பையில் தள்ளி விடாமல் பாதுகாத்தால் மறுபக்கத்தையும் பயன்படுத்தலாம்.
எதனையும் கணிணியிலிருந்து அச்சிடும் முன் இது தேவைதானா என்று ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்தால் நலம் பயக்கும். ஆவணங்களின் எழுத்துப் பிழைகளை அச்சிட்ட பிரிதியில் சரி செய்யாமல் கணிணியிலேயே சரி செய்வது தாள் வீணாவதைத் தவிர்க்கும். கணிணியிலிருந்து அச்சிடும்பொழுது தாளின் இரு பக்கமும் அச்சிட்டால் தாளின் பயன்பாடு அந்த அலுவலகத்தில் பாதி குறைந்து விடும்.
துணிப் பைகளைப் பயன்படுத்தும் பழைய பழக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றால் காகிதப் பைகள் பெருமளவில் குறையும். கைக்குட்டையைப் பயன்படுத்துவதை அதிகப்படுத்தினால் டிஷ்யூ பேப்பர் பயன்பாட்டை பெரும்பாலும் குறைக்கலாம். கைக்குட்டையைக் கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமல்லவா!
மறு சுழற்சியில் காகிதத்தைத் தயாரிப்பதற்கு புதிதாகத் தயாரிப்பதை விட பாதி அளவு தண்ணீரும், முக்கால் அளவு ஆற்றலும்தான் தேவைப்படும். ஆற்றலை வீணாக்கும் ஆடம்பரச் செலவுகளை, தேவைக்குப் போக செய்யப்படும் வீண் செலவுகளை இஸ்லாம் அறவே வெறுக்கிறது.
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும், இரண்டுக்கும் இடையில் நடுநிலையாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 25:67)
தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தி பூவுலகின் சுற்றுச்சூழலைக் காக்க நம்மாலும் சிறிய பங்கைத் தர முடியும். கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தண்ணீர்ப் பற்றாக் குறைக்கு ஒர் அருமையான தீர்வு.
முக்கிய வணக்கமான தொழுகைக்கு உளூ செய்யும்பொழுது கூட தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சொற்பமாக பயன்படுத்த இஸ்லாம் வலியுறுத்துகிறது.
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்று போலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்), மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 6:141)
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக