செராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
வழக்கு பின்னணி:
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத
அமைப்புடன் தொடர்புள்ளவராக கருதப்படும் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி காசர்பீ ஆகியோர் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கடந்த 2005 நவம்பரில் கடத்திச் செல்லப் பட்டு, காந்திநகர் அருகே போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரை நேரில் கண்டவர் துளசிராம் பிரஜாபதி. எனவே இவரும் குஜராத் போலீஸாரால் 2006 டிசம்பரில் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
மேலும், இந்த 2 சம்பவங்கள் தொடர்பான சதி ஆலோசனையில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.கொசாவி, “சொராபுதீன், துளசிராம் பிரஜபதி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக அல்ல. நான், அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆராய்ந்ததில் அமித் ஷா மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனவே குற்றவியல் நடவடிக்கைச் சட்டப் பிரிவு 227-ன் கீழ் அமித் ஷா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என்றார்.
சிபிஐ மேல்முறையீடு?
இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சிபிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மும்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதனை முழுமையாக ஆராய்ந்து அதன் பிறகு மேல்முறையீடு செய்ய சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக