Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

திரை விமர்சனம் : மெ(ம)ஹர் – ஆமினா முஹம்மத்

சினிமாக்களில் முஸ்லிம்களை காட்டவேண்டுமென்றால் காஷ்மீரில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளாகவும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்தியவாழ் இந்திய எதிரியாகவும் , வீட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்ட ரகசிய அறையில் இந்தியாவிற்கு எதிராக சதிதிட்டம் தீட்டும் ஸ்லீப்பர் செல்களாகவும் மட்டுமே காட்டுவார்கள். இந்த வகையறா படங்களுக்கு மாற்றாக, இந்திய முஸ்லிம்களிடம் நல்ல பெயரை எடுக்க நினைத்த டைரக்டர்கள் சிலர் சாம்பிராணி புகை போடும் பாயாகவோ, பேய்களை ஓட்டி தாயத்து போடும் ஆசாமிகளாகவோ காட்டி எரிச்சலூட்டி வந்தனர்.
இவையெல்லாம் பார்த்து முஸ்லிம்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து மதநல்லிணக்க மாமனிதர் பட்டம் கொடுத்துவிடுவார்களென நினைத்துவிட்டார்கள் போலும். ஆனால் மேற்கூறப்பட்ட இரு கற்பனை காட்சிகளுக்கும் அடங்காத உண்மையான இஸ்லாமியச் சூழலை மையமாக வைத்து படமெடுக்க யாருக்கும் ஆர்வமில்லை. காசு மட்டுமே குறிக்கோளாக கொண்ட மனிதர்களின் அற்ப நோக்கம் கமர்ஷியல் என்பதாக மட்டுமே இருந்துவந்தது. முஸ்லிம்களுக்கே சினிமாத்துறையினை முஸ்லிம்களுக்கு சாதகமாக்க முன்வர அக்கறையில்லாத போது மேற்கூறியவர்களைக் குறைக்கூறி என்ன செய்ய!
இந்த நிலமை இப்போது சற்று மாறி இஸ்லாமியர்களின் வாழ்க்கையை பற்றி புரிய தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடு தான் நாம் பார்த்த சலீம். “சார் அந்த பெயர் தான் உங்களை இந்த அளவுக்கு யோசிக்க வைக்கிறது என்றால், என் பெயரை விஜய் என்றோ ஆண்டனி என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்ற ஒற்றை வசனம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உள்ளத்தினை எந்தளவு உருக வைத்தது என்பது விஜய் ஆண்டனிக்கு தெரிந்திருக்குமோ தெரியாதோ… , ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பின் போது முஸ்லிம் என்பதால் அனைவரின் சந்தேகப் பார்வையாலும் தன் பக்கம் பாய்ந்து அதனால் கூனிகுறுகும் அப்பாவி முஸ்லிமுக்கு அந்த வசனம் மிகப்பெறும் ஆறுதலை தந்தது. ஆதாமின்டே மகன் அபு – வறுமையில் வாடும் முஸ்லிமின் நிலையை உரக்கச் சொல்லியது. அந்த வகையில் விஜய் டிவியில் இந்த வாரம் வெளிவந்த மெஹர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை கதையின் வழியே அழகாய் காட்டியது.
விஜய் டிவியில் கடந்த சனிக்கிழமை சித்திரம் எனும் புது நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தேர்ந்தெடுத்த சிறுகதைகளை படமாக எடுத்து வெளியிடும் பகுதி அது. முதல் சித்திரமாக பிரபஞ்சன் எழுதிய கதையை தாமிரா இயக்கியுள்ளார். கவிஞர் சல்மா மெஹராக முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். முஸ்லிம் பெண்மணி ஒருத்தி போலிஸ் ஸ்டேஷன் செல்வது போலவே முதல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. யார் அவர் ? எதற்காக போலிஸ் ஸ்டேஷன் வந்துள்ளார் என்பதனை ஒட்டி நினைவுகளாக கதை நகர்கிறது.
கணவனை இழந்த மெஹருக்கு 23 வயதான திருமணமாகாத யாஸ்மின் என்ற மகளும் , நகைக்கடையில் சொற்ப சம்பளம் பெறும் ரசீத் என்ற இளைய மகனும் உண்டு. அழகும் ஒழுக்கமும் இருந்தும் சமுதாயத்தின் சாபக்கேடாய் வரதட்சணை என்ற அரக்கனால் அவள் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே செல்கிறது. இந்த சமயத்தில் அவ்வூரில் ஓரளவுக்கு வசதியான பஷீர் தன் வெளிநாட்டு தம்பிக்கு பெண் கேட்க மெஹரிடம் வந்து நகைக்கும் பணத்துக்கும் இன்னபிற திருமண செலவுக்கும் பேரம் பேசிவிட்டுச் செல்கிறார். தன் மகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க மெஹரும் சம்மதிக்கிறார்.
அக்காவின் திருமணத்திற்கான மொத்த சுமையும் வீட்டின் ஒரே ஆணான ரசீத் தலை மேல் விழுகிறது. தன்னால் இயன்ற இடங்களில் எல்லாம் முயற்சி செய்தும் யாரும் முன்வரவில்லை. தன் தந்தையின் நண்பரிடம் உதவி கேட்க, இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்துகொடுப்பதை விட இரண்டாம் தாரமாய் பைசா செலவில்லாமல் திருமணம் செய்து வைக்க தான் பார்த்த வரனைப் பற்றி சொல்கிறார். கோபம் கொண்டு ரசீத் தன் அக்காவிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுப்பேன் என விரக்தியாய் சவால் விட்டு வருகிறார். திருமணத்திற்கான நாளும் நெருங்க வேறு வழியில்லாத ரசீத் நம்பிக்கையாய் தன்னை நடத்திய நகைக்கடை முதலாளிக்கு சொந்தமான பணத்தில் ஒரு லட்சத்தை எடுத்துக்கொள்கிறார்.
ரசீத் வீட்டில் ஒளித்து வைத்த பணம் மெஹர் கண்ணில் பட அதிர்ச்சியாகி , யாருக்கும் தெரிந்து குடும்ப மானம் காவு வாங்கப்படும் முன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கிறார். இதுதான் மெஹர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்காரணம். அதன் பின் ரசீத் என்ன ஆனார், யாஸ்மினுக்கு திருமணம் நடந்ததா என்பது மீதிக்கதை.
ஒன்னரை மணி நேரத் திரைப்படத்தில் எவ்வித தொய்வுக்கும் இடம் அளிக்காமல் , இஸ்லாம் பற்றி எவ்வளவோ விஷயங்களை எளிமையாக்கி திரையாக்கியிருக்கிறார் இயக்க்குநர் தாமிரா. ஏழை இஸ்லாமிய பழங்கால வீடு, மேக்கப் இல்லாத காட்டன் வாயில் சேலையணிந்த எதார்த்தமான பெண், தொழுகைக்கான பாங்கு சொன்னதும் தலைச்சீலையை சீர்படுத்தி பாங்கு துஆ ஓதுவது, முன்னும்பின்னுமாகவே உடலை அசைத்து குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும் வயதான பாட்டி, கைலியும் குறுந்தாடியும் சைக்கிளுமாக ஏழை இளைஞன் இவையனைத்தும் சினிமாத்தனமல்லாத எதார்த்த களத்தை நம் கண் முன் காட்டியது.
இஸ்லாமிய கிராமிய சூழலும், இஸ்லாமிய கலோக்கியலும், நாம் பார்த்துக்கொண்டிருப்பது டெலிஃப்லிம் என்பதையும் கடந்து நம் பக்கத்துவீட்டு பெண்ணின் கதையை சொல்லுவதாக அமைந்திருந்தது. மௌத்தோ ஹயாத்தோ ( வாழ்வோ சாவோ ) , தாக்கல் (தகவல்) , மகள தலையில் அள்ளி வச்சு பாப்பீக ( உன் மகள் வாழ்க்கை இழந்து உனக்கு பெரும் சுமையாவாள்) , (அ)த்தா ( ஆண்களை மரியாதையாக கூப்பிடும் முறை) , மொய்தீன் ஆண்டவர்/ஹசன் உசேன் பொறை ( பழங்காலத்தவர்கள் மாதம் கணக்கிடும் முறை) , கொமர் ( திருமணமாகாதவர்கள்) – போன்ற எண்ணற்ற இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கு கொடுக்கப்பட்டு பாத்திரங்களுக்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளார்கள்.
மஹர் எனும் பதம் இஸ்லாமியர்களே பலர் அறியாததும், பலர் தங்கள் இஸ்டத்திற்கு சட்டத்தை வளைத்து அதற்கு அர்த்தமில்லாததாக்கியதுமான சூழலில் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இஸ்லாமியப் பெண்ணுரிமையின் சொல்லை பதியவைக்கப்பட்டுள்ளது. மஹர் என்றால் என்ன? அது யார் யாருக்கு கொடுக்கப்பட வேண்டியது ? என்பதை வேற்றுமதத்தவர்களுக்கும் புரிய வைத்துள்ளனர். கதையின் முக்கியக் கருவே வரதட்சணையால் முதிர்கன்னிகளாகும் நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்கான தீர்வைப்பற்றியதாகும். அதில் ஒரு தாயின் பரிதவிப்பை , ஒரு சகோதரனின் இயலாமையை, ஒரு பெண்ணின் உணர்வை வெளிபடுத்தி வரதட்சணையின் கொடிய முகத்தை தோலுரித்துள்ளார். இந்த அவல நிலை மறைவதற்கான தீர்வாக மஹர் எனும் இஸ்லாமிய சட்டத்தை இன்றைய இளைஞர்கள் கடைபிடிக்க ஆர்வப்படுத்தப்பட்டுள்ளது படம்.
ரசீத்தின் கதாபாத்திரத்தை சொல்லியாக வேண்டும். ஆரம்பத்திலேயே சொல்லியது போல் பாகிஸ்தான் தீவிரவாதியாகவும், ஸ்லீப்பர் செல்களாகவும் இஸ்லாமிய இளைஞர்களை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு நேர்மையான, ஒழுக்கமான, குடும்ப நிலையை புரிந்து உழைக்கக்கூடிய ஓர் சராசரி இளைஞன் காட்டப்பட்டது முதன் முறையாக ரசீத் மூலம் என்றே நினைக்கிறேன். பல வருடங்கள் வேலை பார்த்தவர்கள் இருந்தாலும் ரசீத் எனும் இஸ்லாமிய இளைஞனின் மேல் இந்து முதலாளிக்கு நம்பிக்கை வந்ததும், தன் ஆபிஸ் ரூமில் ரசீதை தவிர யாரையும் அனுமதிக்காததும், அவனை தனியே தன் அறையில் விட்டு பணத்தை எண்ணி வைக்க சொல்வதற்கும் ஒரே காரணம் முஸ்லிம்களின் நேர்மை என்பதை சொல்லாமல் சொல்லியது காட்சிகள்.
இஸ்லாமியர்கள் என்றால் பொய் சொல்லமாட்டார்கள், கலப்படம் செய்ய மாட்டார்கள், திருட மாட்டார்கள் என்ற நம்பிக்கையிருப்பதாலேயே இஸ்லாமியர்களுடன் வேற்று மதத்தவர்களும் வணிகரீதியாக தொடர்பில் இருக்கிறார்கள். இத்தகைய இஸ்லாமிய இளைஞர்களின் மீதான இட்டுக்கட்டப்பட்ட போலி பிம்பத்தை தகர்த்தெறிந்து, திரையில்லா முகத்தை திரையில் காட்டி உண்மையை உரக்கச்சொல்லியிருக்கிறார்கள்.
மஹர் பற்றிய படம் என்றாலும் பல அடிப்படை இஸ்லாமியக்கொள்கைகள் படம் முழுவதும் பரவியிருந்தது. உதாரணத்திற்கு எவனொருவன் அடுத்தவர் பொருள் மீது ஆசைக்கொள்கிறானோ அவன் இரு கையும் துண்டித்துவிடுங்கள் ( அல்குர்ஆன் : 5:38 ) எனும் திருட்டுக்குரியவர்களுக்கான இஸ்லாமிய தண்டனையை ரசீத் நினைவூட்டிக்கொண்ட போதும், வட்டி வாங்குவது ஹராம் என்று நினைவு கூர்ந்ததும், நகையை அடகு வைத்தால் வட்டி கட்டும் நிலை ஏற்படுமென எண்ணி பத்து பவுன் நகையை மெஹர் விற்க முடிவெடுத்ததும், உசுர மாச்சுக்குற அதிகாரம் அல்லாஹ் எங்களுக்கு கொடுக்கல என மெஹர் உருகிய காட்சியிலும், எந்த இடத்திலிருந்த போதும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதுவிடுவதும் போன்றவை சாதாரண மக்களும் உணரும் வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் திணிக்கப்படாமல் காட்சியுடன் நகர்ந்தது படத்தின் பலம்.
சில காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. போலிஸ் ஸ்டேஷனில் தன் பக்க நியாயத்தை ரசீத் சொல்லும் காட்சி ஓரளவுக்கு சினிமாத்தனம் என்றாலும் கூட மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வந்து காட்சியை சீர் செய்துவிட்டார்கள். தன் மகன் திருடிவிட்டதை அறிந்துக்கொண்ட மெஹர் நேராக போலிஸ் ஸ்டேஷன் செல்கிறார். அதற்கான காரணமாக “யாருக்கும் தெரிந்துவிட்டால் குடும்ப மானம் போகும்” என்பதாக சொல்லப்பட்டது. ஆனால் போலிஸ் ஸ்டேஷன் வந்தால் விஷயம் வெளியே போகாது என்பதனை எப்படி மெஹர் கதாபாத்திரம் நம்பியது என தெரியவில்லை. யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்திருந்தால் மகனிடமே நேரடியாக கேட்டு , சம்மந்தப்பட்ட முதலாளியிடம் நேரடியாகவே பணத்தை ஒப்படைத்திருக்கலாம்! “யாருக்கும் தெரிந்துவிட்டால் குடும்ப மானம் போகும்” எனும் கான்சப்ட் இந்த காட்சியில் தான் பொருந்தியிருக்கும். ஒரு பெண் போலிஸ் ஸ்டேஷன் வருவதும், ஒரு பகல் பொழுதும் அங்கே காத்திருப்பதும் ஊரார்க்கு தெரியாமல் போகுமா என்ன….
அடுத்ததாக 13 வயதிலிருந்து (பருவம் எய்தியதும் பள்ளிபடிப்பை நிறுத்தப்பட்டு) வீட்டில் அடைபட்டிருப்பதாகவும், வெளியிடங்களுக்கு செல்வதும் பாட்டு சினிமா பார்ப்பதற்காகவும் மட்டுமே திருமணத்தை எதிர்நோக்குவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கட்டுப்பாடுகள் மிகுந்த ஊர்களிலும் கூட பெண்கள் அக்கம் பக்கம் வீடுகளுக்குச் செல்வதும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கும் எந்த தடையும் இல்லை. 70களுக்கு முந்தைய இஸ்லாமிய சமுதாயம் வேண்டுமென்றால் இத்தகையை கட்டுபாட்டில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையே மாறிவிட்டது. இத்தகு காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றுவதைக் காட்டிலும் இன்றைய இஸ்லாமியப் பெண்களின் நிலை இதுதான் என்ற கருத்தை ஆழமாக விதைத்துவிட்டாரோ என வருத்தங்கொள்ள வைக்கிறது.
ரசீத், மெஹர் போன்ற நேர்மையும் அப்பாவித்தனமும் மட்டுமே கொண்ட சமுதாயமல்ல முஸ்லிம் சமுதாயம். அப்படி சொல்லியிருந்தால் நிச்சயம் சினிமாத்தனமாகவே தெரிந்திருக்கும். இஸ்லாத்தினை அறியாத முஸ்லிம்களும் வஞ்சகம், பொறாமை, இரக்கமின்மை, இஸ்லாமியச் சட்டம் மதிக்காமை போன்ற குணங்கள் கொண்டிப்பதை பஷீர் மற்றும் மெஹர் கணவரின் நண்பர் கதாபாத்திரங்கள் அப்பட்டமாக வெளிகாட்டியது. இந்த வீட்டிலா பெண் எடுக்கிறீர்கள் என ஜமாத்தார்கள் சொன்னதாக பஷீர் சொல்லும் காட்சி இன்றைய ஊர் ஜமாத்தின் போக்கை நெத்தியடியாக சாடியுள்ளது. சபாஷ்,
தகுதிக்கு மீறிய ஆசை என்பதை உணர்ந்த மெஹர் திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிடும்படி சொல்கிறார். அதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டிற்கு வருகிறார். பெரும்பாலான சினிமா க்ளைமேக்சும் இப்படியான ஹீரோக்களின் பெருந்தன்மையுடன் தான் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்ததுதான். ஆனால் எந்த செலவுக்கும் வேலையில்லாமல் பத்தாயிரம் மஹருடன் திருமணம் செய்யப்போவதையும், வலிமா எனும் திருமண விருந்து உபசரிப்பையும் தானே ஏற்பதாகவும் , இவையெல்லாம் நானாகச் செய்யவில்லை, மார்க்கம் வலியுறுத்தியதைத் தான் செய்கிறேன் என சொல்லும் காட்சியும் வித்தியாசமானவை.
இஸ்லாமியத் தீர்வுடன் படத்தை சுபமாக்கியுள்ளார்கள். “இஸ்லாத்தை பின்பற்றி ஈமானோட வாழுற அடுத்த தலைமுறை தயாராகிடுச்சு” என அந்த மாப்பிள்ளை சொல்லும் காட்சி புது ரத்தத்தை பாய்ச்சிய உணர்வை கொடுத்தது. அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர். இஸ்லாமிய கதை களத்தினை அடிப்படையாக கொண்ட நகர்வுகள் வேற்றுமதத்தவர்களுக்கும் இஸ்லாமை புரிய வைத்ததோடு அல்லாமல் இஸ்லாமிய சமூகத்தையும் சிந்திக்க வைத்துள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்கள் மெஹர் டீம்! பாராட்டுக்கள்.
வரதட்சணை என்றதும் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரையும், மாப்பிள்ளையையும் சாடுவார்கள். ஆனால் மாற்றம் என்பது ஆண் தரப்பிலிருந்து மட்டுமல்ல , மணப்பெண் தரப்பிலிருந்தும் வேண்டும். இன்றைய பல குடும்பங்கள் திருமணக்கடனில் மூழ்கியிருப்பதற்கு மணப் பெண்களின் சுயநலமும் முக்கியக் காரணம் மஹர் கொடுத்து யார் என்னை திருமணம் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் நான் துணையாவேன் என ஒவ்வொரு பெண்ணும் முடிவெடுத்து உறுதியாகிவிட்டால் வரதட்சணை ஒழியும் என்பதனையும் யாஸ்மின் மூலம் வெளிபடுத்தியுள்ளார்கள்.
நெஞ்சை தொட்ட கதை! விஜய்காந்தையும், அர்ஜூனையும், விஜயையும் மட்டுமே வசைபாடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு சிறுகோட்டுக்கு அருகே பெரிய கோட்டை போட வேண்டிய டெக்னிக்கை இன்றைய தேவையாக உணர்த்தியது இப்படம். சினிமாத்துறையிலும் ஊடகத்துறையிலும் முஸ்லிம்கள் தடம் பதிக்க வேண்டிய கட்டாயத்தை இன்றேனும் இந்த இஸ்லாமியச் சமூகம் உணரட்டும்.
வாழ்த்துகள் மெஹர் டீம்…. ஒரே படத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினருக்கும் பாடம் கற்பித்துள்ளீர்கள்..
ஆமினா முஹம்மத்
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக